September 19, 2021, 10:13 pm
More

  ARTICLE - SECTIONS

  திருப்புகழ் கதைகள்: பதினொரு வகை நடனங்கள் (3)

  இப்பதினொரு ஆடலையும் மாதவி பதினோரு வகைக்கோலம் பூண்டு ஆடினாள். இதற்குப் பதினொரு வகைப் பாடல்கள் பாடப்பட்டன.

  thiruppugazh stories
  thiruppugazh stories

  திருப்புகழ் கதைகள் பகுதி 97
  – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

  கொம்பனையர் – திருச்செந்தூர்
  பதினொரு வகை நடனங்கள்-3

  மற்கூத்தாடல் திருமாலால் ஆடப்பட்ட வைணவக் கூத்து. கம்சனின் அவையில் இருந்த சாணூரன், முஷ்டிரன் போன்ற மல்லர்களோடு திருமால் மற்போர் புரிந்து வதம் செய்த பொழுது ஆடிய ஆடலாகும். மற்போர் புரிதல் என்ற செயலின் அடிப்படையில் பெயர் பெற்றது. மாதவி மாயவன் வடிவு கொண்டு மல்லர்களை வதம் செய்யும் நிலையில் ஆடல் அபிநயங்களோடு ஆடியுள்ளாள்.

  அவுணர்க் கடந்த மல்லின் ஆடல்

  துடி, கடையம், பேடு, மரக்கால், பாவை ஆகிய ஐந்தும் வீழ்ந்தாடல் ஆகும். இவற்றுள் துடிக்கூத்தாடல் முருகன் ஆடிய ஆடலாகும். சூரன் கடல் நடுவில் வேற்றுருக் கொண்டு நின்றபோது முருகன் தொண்டகம் என்னும் பறை முழக்கிச் சூரனை அழித்து முருகன் ஆடிய ஆடல். துடியைக்கொட்டி ஆடியதால் துடியாடலாயிற்று. மாதவி முருகன் உருக்கொண்டு சூரனை வென்ற பிறகு கடல் அலையே மேடையாகப் பாவித்து ஆடினாள்.

  … … … … … மாக்கடல் நடுவண்
  நிர்த்திரை அரங்கத்து நிகர்த்து முன் நின்ற
  சூர்த்திறம் கடந்தோன் ஆடிய துடியும்

  கடல் நடுவில் மாற்றுருக் கொண்டு மறைந்திருந்த சூரபத்மனைக் கடலையே ஆடலரங்கமாகக் கொண்டு குறிஞ்சி நிலத்திற்குரிய தொண்டகத்துடி முழவு கொண்டடித்து வெற்றி பெற்றாடிய கூத்து துடிக்கூத்து. முருகன் ஆடியது.

  இந்திரன் மனைவி அயிராணி எனப்படும் இந்திராணி ஆடிய ஆடல் கடையக் கூத்தாடல் ஆகும். இந்திரன் மனைவி அயிராணி மண்ணுலக வளம் காண விரும்பிச் சேர நகருக்கு வந்து, அங்கு வடக்கு வாயிற் புறத்தே உள்ள வயலில் உழவர் பெண் வேடம் புனைந்து அயிராணி ஆடிய ஆடலாகும். மாதவி நாட்டுப்புற உழத்தி போல் வேடம் புனைந்து ஆடினாள்.

  வயல் உழை நின்று வடக்கு வாயில் உன்
  அயிராணி மடந்தை ஆடிய கடயமும்

  ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்தோடு காமன் ஆடிய ஆடல் பேடியாடலாகும். காமன் ஆண் தன்மை திரிந்து பெண்தன்மை மிகுந்து பேடி வடிவத்தோடு காமன் ஆடிய கூத்து. எதிரிகளை மயக்கக் காமன் பெண் உருக்கொண்டது போல், மாதவி தன்னை ஒப்பனை செய்து கொண்டு அபிநயங்களைச் செய்து மயங்கும்படி ஆடினாள். மணிமேகலையில், மணிமேகலையும் சுதமதியும் உவவனத்திற்கு மலர் பறிக்கச் சென்றபொழுது இக்கூத்து நிகழ்த்தப்பட்டது என்ற செய்தி கூறப்படுகிறது.

  ண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக்
  காமன் ஆடிய பேடி யாடல்

  இதனையே மணிமேகலையும்,

  வாணன் பேரூர் மறுகிடை நடந்து
  நீணில மளந்தோன் மகன் முன்னாடிய

  பேடிக் கோலத்துப் பேடு – என்று கூறும். இங்கே பாணாசுரனின் மகள் உஷை மன்மதனின் மகனான அநிருத்தனை மணந்தால் எனக் கதை வருகிறது.

  arunagiri muruga peruman
  arunagiri muruga peruman

  மரக்காலாடல் துர்க்கை தேவியால் ஆடப்பட்டதாகும். கோபமுடைய அவுணர்கள் வஞ்சம் கொண்டு கொடுந்தொழில்கள் பல செய்து வந்தனர். இவர்களை மாயோள் ஆகிய துர்க்கை அழித்து ஆடிய ஆட்டமாகும். அரக்கர்கள் பாம்பும் தேளுமாக வடிவம் கொண்டு மக்களைக் கடித்துத் துன்புறுத்தினர். நஞ்சுடன் திரியும் இவர்களை அழிக்கத் துர்க்கைதேவி மரத்தாலான கால்களைக் கட்டிக்கொண்டு அக்கால்களால் பாம்பு, தேள்வடிவ அரக்கர்களை மிதித்து அழித்து ஆடிய ஆடலாகும். மாதவி தன்னைக் கொற்றவைப் போல புனைந்து கொண்டு மரக்காலால் இவ்வாட்டத்தை ஆடியுள்ளாள். தற்காலத்தில் சிற்றூர்த் திருவிழாக்களில் மரக்கால் அணிந்து உயரமான மனிதர்கள் ஆட்டமாக இது திகழ்ந்து வருகிறது.

  காய்சின அவுணர் கடுந்தொழில் பொறா அள்
  மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்
  – என இளங்கோவடிகள் கடல் ஆடு காதியிலும், பின்னர் வேனிற் காதையில்,

  அசுரர் வாட அமரர்க்காடிய
  குமரிக் கோலத்துக் கூத்து
  – என்பார்.

  பாவையாடல் திருமகளால் ஆடப்பட்டதாகும். தேவர் குலத்தை அழிக்க அரக்கர்கள் படையுடன் வந்த பொழுது அவர்களுக்கு முன் திருமகள் மக்களை மயக்கும் கொல்லிப்பாவை வடிவுடன் தோன்றினாள். இவள் அரக்கர் படையை மயக்கி அவர்களை வலிமையிழக்கச் செய்த பொழுது ஆடிய ஆடலாகும். மாதவி கொல்லிப் பாவை போல் அலங்கரித்துக் கொண்டு இக்கூத்தை ஆடியிருக்கிறாள்.

  செருவெங் கோலம் அவுணர் நீங்கத்
  திருவின் செய்யோள் ஆடிய பாவையும்

  கடாத்தலையன் என்னும் மகிடாசுரன் என்றும் பத்மாசுரன் என்றும் பெயர்கொண்ட அசுரன் ஒருவனையும், அவனது கூட்டத்தையும் அழிக்கத் திருமாலே மதன மோகினி வேடக் கூத்தாடியது கொல்லிப் பாவை.

  பாவை திருமகள் ஆடிற்றதற் குறுப்பு
  ஓவாமல் ஒன்றுடனே ஒன்று
  – என்பர். இக்கூத்தினுடன் தொடர்பு படுத்தி, ஐயப்பன் பிறப்பைச் சொல்வாரும் உளர்.

  இப்பதினொரு ஆடலையும் மாதவி பதினோரு வகைக்கோலம் பூண்டு ஆடினாள். இதற்குப் பதினொரு வகைப் பாடல்கள் பாடப்பட்டன. பலவகையான கொட்டுக்கள் முழங்கின. விதிமாண் கொள்கையை விளங்க வைப்பதற்காகவே, சமணத்துறவி இளங்கோவடிகள் இப்பதினோராடலையும் விளக்கியுள்ளார்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,430FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-