October 26, 2021, 5:30 pm
More

  ARTICLE - SECTIONS

  திருப்புகழ் கதைகள்: திருச்செந்தூர் கலம்பகம், ஆசு முதல் நாற்கவி!

  சக்ராயுதம் பெற வேண்டி திருமால் அர்ச்சித்த சஹஸ்ரநாமம், சிவமகாபுராணத்தில் உள்ளது. இந்த ஆயிரம் பெயர்களால் அர்ச்சித்து

  thiruppugazh stories
  thiruppugazh stories

  திருப்புகழ்க் கதைகள் 119
  – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

  படர்புவியின் – திருச்செந்தூர்
  கலம்பகம், ஆசு முதல் நாற்கவி

  அடுத்து அருணகிரியார் இத்திருப்புகழில் கலம்பகம் பற்றியும் குறிப்பிடுகிறார். கலம்பகம் என்பது ஒருபோகும், வெண்பாவும், முதற் கலியுறுப்பாக முற்கூறப் பெற்று, புயவகுப்பு, மதங்கம், அம்மானை, காலம், சம்பிரதம்கார், தவம், குறம், மறம், பரண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்னும் இப்பதினெட்டு உறுப்புகளும் இயைய, மடக்கு, மருட்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், கலித்தாழிசை, வஞ்சி விருத்தம், வஞ்சித்துறை, வெண்துறை என்னும் இவற்றால், இடையே வெண்பா கலித்துறை விரவ, அந்தாதித் தொடையால் பாடுவது கலம்பகம்.

  தில்லைக் கலம்பகம், மறைசைக் கலம்பகம், மதுரைக் கலம்பகம், காசிக் கலம்பகம், அருணைக்கலம்பகம், கதிர்காமக் கலம்பகம், கச்சிக் கலம்பகம், வெங்கைக்கலம்பகம், புள்ளிருக்கு வேளூர்க் கலம்பகம், திருவாமாத்தூர்க் கலம்பகம் முதலிய நூல்களை இவ்வகை இலக்கியத்தில் படிக்கத் தக்கன.

  அருணகிரியார் சொல்லும் ‘ஆசுசேர் பெருங்கவி’ என்பதன் மூலம் கவி நான்கு வகைப்படும் என்பதையும், அவை ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தார கவி என்பவையாகும் என அறியலாம். இதில் விரைந்து பாடுவது ஆசுகவி. பொருளடி, பாவணி முதலியன தந்து மற்றொருவன் பாடுக என்ற உடனே பாடுவோன் ஆசுகவி. பொருட்செல்வம், சொற் செல்வம், தொடை விகற்பம் செறிய, உருவகம் முதலிய அலங்காரத்தோடு இன்னோசைத்தாய் அமுதமுறப் பாடுவோன் மதுரகவி.

  மாலைமாற்று, சுழி குளம், ஏகபாதம், சக்கரம், எழு கூற்றிருக்கை, காதை கரப்பு, கரந்துரை, தூசங்கொளல், வாவனாற்று, பாதமயக்கு, பாவின் புணர்ப்பு, கூட சதுக்கம், கோமூத்திரி, ஓரெழுத்தினம், ஒற்றெழுத்துத் தீர்ந்த ஒரு பொருட் பாட்டு, சித்திரப்பா, விசித்திரப்பா, வினாவுத்தரம், சருப்பதோ பத்திரம், எழுத்து வருத்தனம் இவை முதலிய மிளிரக் கவி பாடுவோன் சித்திரக்கவி. மாலை, யமகம், கலம்பகம், தசாங்கம், புராணம் முதலிய விரித்துப் பாடுவோன் வித்தாரகவி. அருணகிரியார் காலதுப் புலவர்கள் பலர் தங்களை “நாற்கவி வலவன், “சண்டமாருதம்”முதலிய பட்டங்களைத் தம்பட்டம் அடித்துச் செருக்குற்றிருப்பர்.

  thiruchendur murugan
  thiruchendur murugan

  அடுத்து இத்திருப்புகழில் அருணகிரிநாதர், திருமால் சிவபெருமானிடமிருந்து சக்கரம் பெற்ற கதையை பின்வரும் வரிகளில் எடுத்துச் சொல்கிறார்.

  அடல்பொருது பூச லேவி ளைந்திட
  எதிர்பொரவொ ணாம லேக சங்கர
  அரஹர சிவாம ஹாதெ வென்றுனி …… அன்றுசேவித்

  தவனிவெகு கால மாய்வ ணங்கியு
  ளுருகிவெகு பாச கோச சம்ப்ரம
  அதிபெல கடோர மாச லந்தர …… னொந்துவீழ

  உடல்தடியு மாழி தாவெ னம்புய
  மலர்கள்தச நூறு தாளி டும்பக
  லொருமலரி லாது கோவ ணிந்திடு ……செங்கண்மாலுக்

  குதவியம கேசர் பால

  தனது உக்ரமான சக்தியும், அக்னியும் இணைந்த ‘சுதர்சனம்’ என்ற சக்கரத்தைத் திருமாலுக்கு அளித்தார் சிவபெருமான். இந்த ஆயுதத்தைப் பல முறை அசுரர்கள் மீது திருமால் பிரயோகித்ததாலும், அசுரர்கள் செய்த சிவபூஜையின் பலனாலும் சுதர்சனத்தின் கூர் மழுங்கி, அதன் அழிக்கும் சக்தி குறைந்தது. இந்த நிலையில், சிவபெருமானைக் குறித்து தவம் செய்து, திருமால் மீண்டும் சக்ராயுதம் பெற்றதாக சிவ மகாபுராணங்கள் குறிப்பிடுகின்றன.

  கயிலை மலைச் சாரலில் பர்ணசாலை அமைத்து, சிவபூஜை செய்யத் தொடங்கினார் திருமால். அங்குள்ள ‘மானச’ (மானசரோவர்) தடாகத்திலிருந்து தினமும் ஆயிரம் தாமரைப் பூக்களைப் பறித்து வந்து அவர் சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து வந்தார். ஒரு நாள், ஆயிரம் மலர்களில் ஒன்றை மறைத்து விட்டார் சிவபெருமான். பூஜை நிறைவடையும் வேளையில், தாமரை மலர் ஒன்று குறைவதை அறிந்த திருமால் திகைத்தார். புதிய மலரைத் தேடிப் பறித்து வர முடியாத அந்தச் சூழலில், மலர் போன்ற தன் கண்ணைப் பெயர்த்து அர்ச்சித்தார். கடைசி மலரை இரண்டாகப் பிய்த்து அவர் பூஜை செய்யவில்லை. மலரைப் பிய்த்து அர்ச்சிக்கக் கூடாது, முழு மலரைக் கொண்டே அர்ச்சிக்க வேண்டும் என்ற விதியை இதன் மூலம் நாம் உணரலாம். திருமாலின் பக்தியால் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு வேண்டிய வரங்களையும், சக்ராயுதத்தையும் அளித்தார்.

  சக்ராயுதம் பெற வேண்டி திருமால் அர்ச்சித்த சஹஸ்ரநாமம், சிவமகாபுராணத்தில் உள்ளது. இந்த ஆயிரம் பெயர்களால் அர்ச்சித்து சிவபெருமானை வழிபடுவோருக்கு சகல செல்வ யோகம் மிக்க பெரு வாழ்வு கிடைக்கும்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,589FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-