spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: திருமுருகாற்றுப் படையில்..!

திருப்புகழ் கதைகள்: திருமுருகாற்றுப் படையில்..!

- Advertisement -
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 130
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

முலை முகம் – திருச்செந்தூர்
உலகம் உவப்ப வலனேர்பு

நக்கீரர் எழுதியுள்ள திருமுருகாற்றுப்படை, ‘உலகம் உவப்ப’ என்ற பாடலுடன் தொடங்குகிறது. ஆற்றுப்படை என்றால் ஆற்றுப்படுத்துதல் என முன்னரே கண்டோம். ஒரு அரசனிடமோ அல்லது ஒரு வள்ளலிடமோ பரிசுகள் பெற்ற ஒருவன், எதிர் வரும் மற்றவனை அந்த அரசனிடமோ அல்லது வள்ளலிடமோ வழி சொல்லி அனுப்புவது ஆற்றுப்படை என்று அழைக்கப்படும். ஆற்றுப் படுத்துதல் என்றல் வழி காட்டுதல் என்று அர்த்தம்.

முருகனிடம் அருள் பெற்ற நக்கீரர், மற்ற பக்தர்களை அவனிடம் வழி காட்டுவதாக அமைந்தது திரு முருகாற்றுப்படை என்ற நூல்.

அதில் வருகின்ற முதல் மூன்று வரிகள் பாடல்,

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு
ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி .

என்பனவாகும். திருமுருகாற்றுப்படை முழுவதுமே ஒரு பாடல்தான். இவை முதல் மூன்று வரிகளாகும். உலகம் மகிழ்ச்சி அடைய, வானில் வலப்புறமாக எழும், பலர் புகழும் சூரியனை, கடலில் இருந்து எழும் போது கண்டவர்களை போல, இமைப் பொழுதும் நீங்காமல் உயரத்தில் சுடர் விடும் ஒளி – என்பதன் இதன் பொருளாகும்.

இது என்ன பாடல்? கடலில் எழும் சூரியனைப் போல உயரே சுடரும் வெளிச்சம். இது ஒரு பாடலா? இதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இதைப் படித்து என்ன ஆகப் போகிறது? என்று கேள்விகள் எழலாம். ‘உலகம் உவப்ப’ என்றால் ‘உலகம் மகிழ’ என்று பொருள். முதலாவது, எதையும் மங்கலச் சொல்லோடு ஆரம்பிக்க வேண்டும் என்பது தமிழ் மரபு. உலகம் என்பது மிக உயர்ந்த மங்கலச் சொல்.

உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

என்று ஆரம்பித்தார் கம்பர்.

உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர் மலி வேணியன்;
அலகுஇல் சோதியன் அம்பலத்து ஆடுவான்;
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்.

என்று ஆரம்பித்தார் தெய்வப் புலவர் சேக்கிழார். ‘உலகம் என்பது நல்லோர் மாட்டு’ என்பது நிகண்டு. உலகம் என்றால் உலகில் உள்ளவர்களை குறிக்கும். குறிப்பாக உலகில் உள்ள நல்லவர்களை குறிக்கும்.

nakkeerar
nakkeerar

இரண்டாவது, உலகில் உள்ள அனைவரும் மகிழ என்று ஆரம்பிக்கிறார். இந்தியாவில் உள்ளவர்கள் மட்டும் மகிழ என்றோ, அல்லது இந்து சமயத்தில் உள்ளவர்கள் மட்டும் மகிழ என்றோ, அல்லது சைவ சமயத்தில் உள்ளவர்கள் மட்டும் மகிழ என்றோ குறுகிய மனத்தோடு ஆரம்பிக்கவில்லை. உலகில் உள்ள அத்தனை மக்களும் இன்புற வேண்டும் என்று நினைக்கிறார். ‘சேரவாரும் ஜெகத்தீரே’ என்று தாயுமானவர் அழைத்தார் போல. ‘வசுதேவ குடும்பகம்’ என்று வேதங்கள் சொல்வது போல. ‘ஜெய் ஜெகத்’ என்று வினோபாஜி அவர்கள் சொன்னது போல. ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என கனியன் பூங்குன்றனார் சொன்னது போல.

மூன்றாவது, உலகம் எப்போது மகிழும்? உலகில் உள்ள எல்லோரும் மகிழ வேண்டும். தினமும் எல்லோரும் மகிழ வேண்டும். அப்படி ஒரு நிகழ்வு நடக்குமா? அதற்கு ஒரு உதாரணம் இருக்கிறதா? இரவில் அனைத்து உயிர்களும் உறங்குகின்றன. தவறு செய்யாதவன் நிம்மதியாக உறங்குகிறான். கடமையை ஒழுங்காகச் செய்தவன் நிம்மதியாக உறங்குகிறான். எல்லா உயிர்களும் இரவில் உறங்கி காலையில் சூரியன் ஒளி வந்தவுடன் எழுந்து சுறுசுறுப்பாக தங்கள் தங்கள் வேலையை செய்யத் தொடங்கி விடுகின்றன. உலகமே விழித்துக் கொள்கிறது. ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு வீடும், நித்தமும் விழிக்கிறது. எப்படி சூரியன் வந்தவுடன் உலகம் விழித்து, வேலை செய்து, அதன் பலனைப் பெற்று இன்பமாக இருக்கிறதோ அது போல இன்பம் பெற வேண்டும் என்கிறார்.

சூரிய உதித்தவுடன் சுறுசுறுப்பாக வெளியில் சென்று நமது அன்றாடக் கடமைகளை ஆற்ற முடியாமல் வீட்டிலேயே இருப்பது நம் ஒவ்வொருவருக்கும் இந்தக் கொரொனா காலத்தில் தெளிவாகப் புரிந்திருக்கும்.

நான்காவது, சூரியன் தினமும் வரும், போகும். அப்படியானால் இன்பமும் வந்து வந்து போகுமா? நிரந்தரமான இன்பம் இல்லையா? மேலும் சில சமயம் சூரிய ஒளி மோகத்தால் மறைக்கப் படலாம். அல்லது சில இடங்களில் விழாமல் போகலாம். அல்லது சூரியன் ஒரு நாள் தீர்ந்து போகலாம். அறிவியல்படி இது சாத்தியமான ஒரு விஷயம். நிரந்தரமான ஒரு ஒளி உண்டா? சூரியன் என்பது ஒரு உதாரணம். அதற்கும் மேல் ஒரு ஒளி உண்டு. அந்த ஒளிதான் முருகப் பெருமானின் அருளொளி.

ஐந்தாவது, ஓஅற இமைக்கும், ஒரு நொடி கூட இல்லாமல் இருக்காது. எப்போதும் சுடர் விடும் ஒளி. ஆறாவது, சேண்விளங்கு, உயரத்தில் விளங்கும். உயரம் என்றால் எங்கே? எவ்வளவு உயரத்தில்? மூன்று வரியில் எத்தனை, எத்தனை செய்திகள். திருமுருகாற்றுப்படை முழுவதும் இந்த அளவு பொருள்பொதிந்த வரிகள் கொண்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe