spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: அதல விதல முதல்... மஹா சங்கல்பம்!

திருப்புகழ் கதைகள்: அதல விதல முதல்… மஹா சங்கல்பம்!

- Advertisement -
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 141
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –


அதல விதல முதல் – பழநி
மஹாசங்கல்பம் -1

இந்தத் திருப்புகழில் அருணகிரிநாதர் முதலிரண்டு பத்திகளான

அதல விதலமுத லந்தத்த லங்களென
அவனி யெனஅமரர் அண்டத்த கண்டமென
அகில சலதியென எண்டிக்குள் விண்டுவென …… அங்கிபாநு
அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென
அறையு மறையெனஅ ருந்தத்து வங்களென
அணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு …… சம்ப்ரதாயம்

என்ற பத்டிகளில் பல செய்திகளைச் சொல்லுகிறார். அதலம் விதலம் என்று சொல்லப்படுகின்ற உலகங்கள் முதலான அந்தக் கீழேயுள்ள உலகங்கள் எனவும், இந்தப் பூமண்டலம் எனவும், தேவர்களுடைய அண்டங்களான மேல் உலகங்கள் எனவும், எல்லாக் கடல்கள் எனவும், எண் திசைகளில் உள்ள மலைகள் எனவும், அக்கினி சூரியன், குளிர்ந்த கிரணங்களையுடைய சந்திரன் என்ற மூன்று சுடர்கள் எனவும், முடிவில் ஒன்றுபடுகின்ற மந்திரங்கள் எனவும், சிறப்பாக ஓதுகின்ற வேதம் எனவும், அரிய உண்மைப் பொருள்கள் எனவும், அணுவுக்குள் அணு எனவும், இவ்வகையாய் எல்லாமாய் எங்கும் நிறைந்துள்ளதாகிய ஒப்பற்ற பேருண்மை எனவும் – முருகப் பெருமானை அருணகிரிநாதர் விதந்து கூறுகிறார்.

arunagiri muruga peruman
arunagiri muruga peruman

அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், இராசதலம், பாதலம், என்ற இவை கீழே உள்ள ஏழு உலகங்கள். புவர்லோகம், சுவர்லோகம், ஜனாலோகம், தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம், சொர்க்கலோகம் என்ற இவை மேலே உள்ள உலகங்கள்.

உவர்க்கடல், பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், தேன்கடல், கருப்பஞ்சாற்றுக் கடல், நன்னீர்க்கடல் எனக் கடல்கள் ஏழு என்பர். எட்டுத் திசைகளிலுள்ள குலமலைகள்; கைலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலகிரி, கந்தமாதனம்.

உலகிற்கு ஒளிதரும் சுடர்கள் மூன்று. சூரியன், சந்திரன், அக்கினி. மந்திரங்கள் யாவும் முடிவில் ஒன்றுபடும்; மந்திரங்கள் ஏழுகோடி, நம, ஸ்வதா, ஸ்வாகா, பட், ஹும்பட், வஷட், வௌஷட் என்று ஏழு நுனிகளையுடையன. விதிப்படி ஓதுகின்ற வேதங்கள். அநேக நுண் பொருள்கள் அவற்றில் மறைந்திருப்பதனால் மறையெனப்பட்டது.

தத்துவங்கள் 36. சிவதத்துவம் 5, வித்யா தத்துவம் 7, ஆன்ம தத்துவம் 24, ஆக, 36, இனி புறநிலைக்கருவிகள் 60. மண்ணின்கூறு 5, நீரின் கூறு 5, நெருப்பின் கூறு 5, காற்றின் கூறு 5, வெளியின் கூறு 5, வாயு 10, நாடி 10, வசனாதி 5, வாக்கு 4, குணம் 3, ஏடணை 3, ஆக 60. அணுவுக்குள் பரமாணுக்கள் பல இருந்து இடையறாது அசைந்து கொண்டிருக்கின்றன.

இவ்வளவிலும் ஊடுருவிக் கலந்திருக்கின்ற பொருள் ஒன்றுதான். அதன் உண்மையை அருணகிரிநாதருக்கு முருகவேள் குருநாதனாகி வந்து உணர்த்தி யருளினார்.

ஓரு பூஜை செய்யும்போது அதன் தொடக்கத்தில் நமது தொடை மீது கை வைத்து பிராமணர்கள் ஏதோ செய்வார்களே, அதைப் பார்த்திருக்கிறீர்களா? அப்போது என்ன சொல்கிறார்கள் எனக் கேட்டிருக்கிறீர்களா? அதன் பெயர் சங்கல்பம். இப்படி நடக்க வேண்டும் என பிராத்திப்பதுதான் சங்கல்பம். இந்த இடத்தில், இந்த நேரத்தில், இந்த நாளில்.. நான் இந்த பூஜையை செய்கிறேன் எனத் துல்லியமாக கூறி, பிரபஞ்ச சக்தியிடம் முறையிட்டு பூஜையை அல்லது கர்ம காரியத்தைத் தொடங்குவது.

சங்கல்பம் என்பது உறுதி பூணுதல் ஆகும். அதாவது நான் இந்தச் செயலைச் செய்கிறேன் என உறுதி பூணுவது. இறைவனின் சந்நிதியில் நாம் செய்யப்போகும் பூஜையை என்ன நோக்கத்திற்காகச் செய்கிறோம் என்பதைக் கூறி, இதனை நான் செய்து முடிப்பேன் என்று உறுதி பூணுவதாகச் சங்கல்பம் அமைந்திருக்கும்.

சங்கல்பத்திலே இவற்றுக்கு அடுத்தபடியாக முக்கிய இடம்பெறுவது காலமும் இடமுமாகும். என்ன நாளில் எந்த இடத்தில் என்பது மிக விரிவாகவும், அழகாகவும் கூறப்பெறுகின்றது. பொருளுணர்ந்து இதனைக் கூறும்போது அதனைச் சுவைத்து இன்புறலாம்.

அதுமட்டுமல்லாமல் நமது முன்னோர்கள் எவ்வளவு தூரம் வரலாற்று உணர்வு உடையவர்களாக, காலக் கணக்குகளை நுணுக்கமாகப் பேணி வந்தவர்களாக இருந்திருக்கின்றனர் என்பதும், புவியியல் அறிவிலும் சளைக்காத ஞானம் உடையவர்களாகப் பிரதேசங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி வைத்திருந்திருக்கிறார்கள் என்பதும் இதன் மூலம் அறிந்து வியப்புற முடிகின்றது.

(1) மிகச்சுருக்கமாகச் சொல்லும் சங்கல்பம், (2) சுருக்கமாகச் சொல்லும் சங்கல்பம், (3) விரிவாகச் சொல்லும் சங்கல்பம் என சங்கல்பம் மூவகையானது.

இவற்றைப் பற்றி நாளை விரிவாகக் காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe