October 25, 2021, 7:28 pm
More

  ARTICLE - SECTIONS

  திருப்புகழ் கதைகள்: நாரத இலக்கியங்கள்!

  அவரது பல பிறவிகள் பல்வேறு சுவையான செய்திகளைத் தருகின்றன.நாரதர் பிரபஞ்சத்தின் முதல் சுற்றுப் பயணி. திரிலோக சஞ்சாரி

  thiruppugazh stories
  thiruppugazh stories

  திருப்புகழ்க் கதைகள் 158
  – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

  ஆலகாலம் என – பழநி
  நாரதர் (தொடர்ச்சி)

  நாரத பாஞ்சராத்ரத்தின் படி நாரதர் பிரம்மாவின் புத்திரர். இவரைப் பற்றி பதினெட்டு புராணங்களும் ஏராளமான சம்பவங்களை எடுத்துக் கூறுகின்றன. அவரது பல பிறவிகள் பல்வேறு சுவையான செய்திகளைத் தருகின்றன.நாரதர் பிரபஞ்சத்தின் முதல் சுற்றுப் பயணி. திரிலோக சஞ்சாரி என்ற பெயர் கொண்ட அவர் மூன்று லோகங்களுக்கும் தேவைப்பட்ட போதெல்லாம் க்ஷண நேரத்தில் சென்று விடுவார்.

  தேவரிஷியான நாரதரைப் பற்றி மட்டுமே உள்ள புராணம் நாரத புராணம். அதில் வேதத்தின் ஆறு அங்கங்களும் விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றன. ஜோதிடத்தை எப்படி அன்றாட வாழ்க்கையில் உபயோகப்படுத்துவது என்பதைத் தெளிவாக நாரத புராணம் எடுத்துரைக்கிறது. இதில் சிக்ஷை பகுதி வேத சம்ஹிதைகளை நன்கு விளக்குகிறது. எப்படி வேதத்தை உச்சரிப்பது என்பதை அற்புதமாக விளக்கும் போது நன்கு உச்சரிக்கப்படும் மந்திரங்களே பலன் அளிக்கும் என்பதைத் தெளிவாக நாம் உணர முடிகிறது.

  ஒரு கீதத்தின் பத்துக் குணங்களையும் இந்த புராணமே நன்கு விளக்குகிறது. இசைக் கருவிகளில் வீணையையும் வேணுவையும் இந்தப் புராணம் விளக்குவது போல வேறு எந்த நூலும் விளக்கவில்லை.

  naradha dhruva
  naradha dhruva

  பிரம்மா ஜோதிடத்தைப் பற்றி நான்கு லட்சம் சுலோகங்களில் விளக்கியுள்ளார்! இதன் சுருக்கத்தை நாரதர் விளக்கியுள்ளார். இந்த ஜோதிடப் பகுதி வானவியல், ஜாதகம் பார்த்தல். ஜோதிட சாஸ்திரம் என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு விளக்கப்படுகிறது. வானவியல் பகுதியில் கிரகணம், நிழல்கள், கிரக சேர்க்கைகள். கணித மூலங்கள் போன்றவையும் ஜாதகப் பிரிவில் ராசிகள் பிரிக்கப்பட்ட விதமும் அதன் அடிப்படைக் கருத்துக்களும் கிரக சேர்க்கைகளும் விளக்கப்படுகின்றன.

  சூர்ய சித்தாந்த கருத்துக்களை இங்கு காணலாம். வராஹமிஹிரரின் பிருஹத் சம்ஹிதாவில் உள்ள பல கருத்துக்கள் இங்கு உள்ளன. நாரத புராணத்தில் நவீன விஞ்ஞானத்தின் பல இயல்களைப் பார்த்து வியக்கலாம்! ஒரு முக்கியமான விஷயம், ஜோதிடம் உள்ளிட்ட அனைத்துக் கலைகளிலும் நாரதரின் பார்வை தனிப்பார்வையாக உள்ளது!

  நாரதரைப் பற்றிய சுவையான ஏராளமான குட்டிக் கதைகள் உள்ளன. தானே சிறந்த விஷ்ணு பக்தர் என்றும் இசைக் கலைஞர் என்றும் கர்வம் கொண்ட நாரதர், ஒரு முறை ஒரு நந்தவனத்தின் பக்கம் செல்கையில் பல பெண்கள் புலம்பி அழுவதைக் கேட்டார். யார் அவர்கள் என்று பார்த்த போது அவர் திகைத்துப் போனார்.

  தேவதை போன்ற அழகிய முகங்கள் கொண்ட அவர்களில் சிலருக்கு கைகள் இல்லை; சிலருக்குக் கால்கள் இல்லை; சிலரோ சிதைந்த உருவத்தோடு இருந்தனர். சிலர் குள்ளமாக ஆகி இருந்தனர். இதைப் பார்த்துத் திகைத்த நாரதர் அவர்களை நோக்கி அதன் காரணத்தைக் கேட்டார். அதற்கு அவர்கள். “நாங்கள் ராக தேவதைகள். இன்று வைகுந்தத்தில் நாரதர் என்ற ஒருவர் அபத்தமாக இசையை இசைக்கவே நாங்கள் உருக்குலைந்து சீர் குலைந்து இப்படி ஆகி விட்டோம்” என்று பரிதாபமாகத் தங்கள் நிலையைக் கூறினர்.

  நாரதரது கர்வம் ஒழிந்தது. அவர் தான் யார் என்பதை ஒப்புக் கொண்டு, இப்போது நான் ஹனுமானிடம் உண்மையான இசை என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காகப் போகிறேன்” என்றாராம். ஹனுமான் அவருக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் பக்தி இசையைப் பாடிக் கற்றுத் தந்தாராம்.

  108 பாஞ்சராத்ர நூல்களில் நாரத பாஞ்சராத்ரம் பிரபலமானது. இது கோவிலில் நடைபெறும் வழிபாடுகளைப் பற்றியும் சுத்திகள் பற்றியும், தேவதா பிரதிஷ்டை போன்றவற்றையும் பற்றி விளக்குகிறது. இவற்றின் அடிப்படையாக ஜோதிடம் இலங்குகிறது.

  நாரத இராமாயணம் என்று ஒரு இராமாயணம் இருக்கிறது. ஆனால் இதற்கும் நாரதருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை எழுதியவர், சிறுகதை இலக்கியச் சிற்பி ‘புதுமைப் பித்தன்’ ஆவார். இராமாயணத்தை இயன்றவரை கேலி செய்து எழுதப்பட்ட ஓர் நூல் இது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,588FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-