spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: கருவின் உருவாகி-பழநீ

திருப்புகழ் கதைகள்: கருவின் உருவாகி-பழநீ

- Advertisement -
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 175
கருவின் உருவாகி – பழநி
முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியம்

அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றிமுப்பத்தி நான்காவது திருப்புகழ், ‘கருவின் உருவாகி’ எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும். “முருகா, அடியேன் பிறந்து, கலைகள் பல தெரிந்து, மதனனால் கருத்து அழிந்து, சிவநாமங்களை நினையாமல், ஆக்கைக்கே இரை தேடி உழலாமல் ஆண்டருள்வீர்” என அருணகிரிநாதர் இத்திருப்புகழில் வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

கருவினுரு வாகி வந்து வயதளவி லேவ ளர்ந்து
கலைகள்பல வேதெ ரிந்து …… மதனாலே
கரியகுழல் மாதர் தங்க ளடிசுவடு மார்பு தைந்து
கவலைபெரி தாகி நொந்து …… மிகவாடி
அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று
அறுசமய நீதி யொன்று …… மறியாமல்
அசனமிடு வார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று
அநுதினமு நாண மின்றி …… யழிவேனோ
உரகபட மேல்வ ளர்ந்த பெரியபெரு மாள ரங்கர்
உலகளவு மால்ம கிழ்ந்த …… மருகோனே
உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க
உறைபுகலி யூரி லன்று …… வருவோனே
பரவைமனை மீதி லன்று ஒருபொழுது தூது சென்ற
பரமனரு ளால்வ ளர்ந்த …… குமரேசா
பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீள வென்று
பழநிமலை மீதில் நின்ற …… பெருமாளே.

இத்திருப்புகழின் பொருளாவது – ஆதிசேடனாகிய பன்னகப் பாயலின் மேல் அறிதுயில் கொண்டு திருக்கண் வளர்கின்றவரும், மிகுந்த பெருமையை உடையவரும் திருவரங்கம் என்னும் திருத்தலத்தில் உறைபவரும், பலிச்சக்கரவர்த்தியிடம் மூவடி கேட்டு ஓரடியால் உலகம் முழுவதும் அளந்தவரும் ஆகிய நாராயணமூர்த்தி மிகவும் மகிழ்கின்ற மருகரே.

தாய்தந்தை என்னும் இரு குலங்களையும் விளங்கச் செய்ய வந்தவரும், ஞான தீபமும், தூய்மையானவரும், சிவிகை கவிகை கொடி முதலிய விருதுகளுடைய அருட்கவிராஜ சிங்கமும் ஆகி, நலன்கள் யாவுக்கும் உறையுளான சீகாழியில் (சைவசமயம் மங்கியிருந்த அந்நாளில்) திருஞான சம்பந்தராகத் திருவவதாரம் செய்தருளி வந்தவரே.

சுந்தரமூர்த்தியிடம் ஊடல் கொண்ட பரவையம்மை திருமனைக்கு அந்நாளில் தமது திருத்தொண்டர் பொருட்டு தூது சென்றருளிய சிவபெருமானுடைய திருவருளால் வளர்ந்த குமாரக் கடவுளே, தலைவரே. பண்ணவர் பால் பகை கொண்ட அசுர சேனையை அழித்து, தேவர்கள் சிறையை ஒழித்து, சூராதிகளை வென்று பழநி மலை மேல் எழுந்தருளியுள்ள பெருமாளே!

தாய் வயிற்றில் கருவிலிருந்து உருப்பெற்று பூமியில் பிறந்து, கிரமப் படி வளர்ந்து, பல கலைகளைக் கற்று உணர்ந்து, மன்மதனது செயலால் மயங்கி, கரிய கூந்தலுடைய காரிகையர்களது கலவியில் மூழ்கி, அவர்கள் பாதச் சுவடு என் மார்பில் படுமாறு லீலைகள் செய்து, அதனால் பெரும் கவலை உற்று, மனம் நொந்து, மிகவும் சோர்வுற்று, ஹரஹர சிவ சிவ என்ற திருமந்திரங்களை நாள்தோறும் நினையாமலும், ஆறு சமயநீதிகளில் ஒன்றையேனும் உணராமலும், (சோற்றுப் பையை நிரப்புவதையே பிறவியின் நோக்கம் எனக் கொண்டு) சோறு போடுபவர்கள் வீட்டின் தலைவாசலில் போய் நின்று, நாள்தோறும் சிறிதும் நாணமின்றி அலைந்து உழன்று அழிவேனோ? அங்ஙனம் அழியாது உமது அருட்சோற்றை நாடி ஆலயத்தின் முன்வந்து நிற்கக் கடவேனாக. – என்பதாகும்.

இந்தப் பாடலில் அரகரசி வாய வென்று தினமுநினை யாமல் நின்று அறுசமய நீதி யொன்று மறியாமல் என்ற வரிகளில் சிவபெருமான் நாமத்தை எப்போதும் உரைத்து பரகதியை அடையவேண்டும் என்று அருணகிரியார் சொல்லுகிறார்.

அறியாமையாலும், அறிஞர்களின் கூட்டுறவு இன்மையாலும் நெறி தவறி பாவங்களைச் செய்தவர்கள், அப் பாவங்களினின்றும் விடுபட்டு உய்ய வேண்டுமாயின் அரன் நாமத்தை இடைவிடாது சிந்தித்தல் வேண்டும். அரன் பாவத்தை அழிப்பவன் என்பது பொருள். எனவே பாவ நீக்கத்திற்கும் பரகதியின் ஆக்கத்திற்கும் அரன்நாமத்தை நினைப்பதே சிறந்த சாதனமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe