- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் விநாயக புராணம் எங்கு அரங்கேற்றம் செய்யப்பட்டது?

விநாயக புராணம் எங்கு அரங்கேற்றம் செய்யப்பட்டது?

சென்னையில் பார்க்க டவுன் பிரசன்ன விநாயகர் கோவிலில் விநாயகர் புராணம் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்பது எத்தனை சென்னைவாசிகளுக்குத் தெரியும்?

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
ஆசிரியர் கலைமகள்

புராணம் என்றால் பழமைக்குப் பழமையாய் புதுமைக்குப் புதுமையாய் உள்ளது என்று அர்த்தம். புராணம் என்கிற சமஸ்கிருத வார்த்தை புரா நவ என்கிற இரு வேர்களில் இருந்து பிறந்தது என்பர்.

மணிமேகலையில் சமயக் கணக்கர் தாம் திறம் கேட்ட காதையில் வைணவ வாதியை குறிப்பிடும்போது “காதல் கொண்டு கடல்வாணன் புராணம் ஓதினான்” ‌ என்கிற பாடல் வரி வருகிறது… எனவே புராணம் என்கிற பதம் தமிழில் மணிமேகலை பிறந்த காலத்தே வழக்கில் இருந்தது என்பதை அறிய முடிகிறது…..

தமிழில் இயற்றப்பட்ட புராணங்கள் பலவாகும். புராணங்களில் சிறப்புடன் பேசப்படுபவை கந்தபுராணம் காஞ்சி புராணம் பெரியபுராணம் திருவிளையாடல் புராணம் விநாயக புராணம் ஆகியவை.

பெரிய புராணத்தை எழுதியவர் சேக்கிழார் என்பது நமக்குத் தெரியும். கந்த புராணத்தை எழுதியவர் கச்சியப்ப சிவாச்சாரியார் ஆவார். கந்த புராணத்தில் இல்லாதது எந்த புராணத்திலும் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு.

ALSO READ:  திருப்புனவாசல் விவேகானந்த மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா!

முருகப்பெருமான் திகடச்சக்கரச் செம்முகம் ஐந்துளான்… என முதல் அடியை எடுத்துக் கொடுக்க கந்தபுராணத்தைப் பாடி முடித்தார் கச்சியப்ப சிவாச்சாரியார். காஞ்சிபுரம் குமரக்கோட்டம் கோவிலில் கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

விநாயகப் பெருமானுக்கு புராணம் பாடியவர் கச்சியப்ப முனிவர்.

கச்சியப்பாசிவாச்சாரியார், கச்சி யப்ப முனிவர் இருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள். சிலர் தவறுதலாக இருவரும் ஒருவரே என எண்ணுகின்றனர்.

கச்சியப்ப சிவாச்சாரியார் காஞ்சிபுரம் காளத்தியப்ப சிவாச்சாரியாரின் திருமகன் ஆவார். கச்சியப்ப முனிவர் திருத்தணியில் தோன்றியவர். அபிஷிக்தர் மரபில் வந்தவர். திருவாவடுதுறை ஆதீன கர்த்தராக இருந்த ஸ்ரீபின்வேலப்ப தேசிகரிடம் சமய தீட்சைகளைப் பெற்று ஆதீன அடியவர் கூட்டத்துடன் அங்கேயே இருந்து பெரும் புலவராய் திகழ்ந்தவர்.

திருவாவடுதுறை ஆதீனத்தால் குலதெய்வம் என்று பெரிதும் போற்றப்படும் மாதவ சிவ ஞான முனிவரின் முதன்மை மாணாக்கராக திகழ்ந்தார் கச்சியப்ப முனிவர். ஸ்ரீ மாதவ சிவஞான சுவாமிகள் மெய்கண்டார் அருளிய சிவ ஞான போதத்திற்கு மகா பாஷ்யம் செய்தவர்.

மாதவ சிவஞான சுவாமிகள் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்த பொழுது பாடியது காஞ்சிபுராணம்.

ALSO READ:  வாழ்வே வேள்வி: குருஜியின் சிந்தனையில்... ராஷ்ட்ர சேவை! 

காஞ்சிபுரத்தில் இருந்து சிறிது காலம் சென்னையில் உள்ள குளத்தூரில் தங்கியிருந்தார். இவருடன் கச்சியப்ப முனிவரும் குளத்தூருக்கு வந்திருந்தார்.

குளத்தூர் பிரைட்டன் கந்தசாமி முதலியார் விநாயகர் மீது ஒரு புராணம் பாடும்படி கேட்டுக் கொண்டார். லீலா காண்டம் உபாசனா காண்டம் என்னும் இரு காண்டங்களையும் உள்ளடக்கி 6 ஆயிரம் பாடல்களுக்கு மேலாக உள்ள விநாயக புராணத்தை கச்சி யப்ப முனிவர் பாடினார்.

இந்த விநாயகர் புராணத்தை பிரைட்டன் கந்தசாமி முதலியார் தன்னுடைய கோவிலான பார்க் டவுன் பிரசன்ன விநாயகர் கோவிலில் வைத்து அரங்கேற்றம் செய்தார். சென்னையில் பார்க்க டவுன் பிரசன்ன விநாயகர் கோவிலில் விநாயகர் புராணம் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்பது எத்தனை சென்னைவாசிகளுக்குத் தெரியும்?

எல்லோருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்…

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version