- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் திருமுருகாற்றுப் படையில் திருப்பரங்குன்றம்!

திருமுருகாற்றுப் படையில் திருப்பரங்குன்றம்!

முதலில் திருப்பரங்குன் றமாகிய படைவீட்டைப் பற்றிச் சொல்கிறார். முருகப்பெருமான் ஆறு படைவீடு களில் எழுந்தருளியிருக்கிறான் என்ற வழக்கு, பலகால மாகத் தமிழ் நாட்டில் இருக்கிறது.

#image_title
#image_title
  • கி.வா.ஜகந்நாதன்

திருப்பரங்குன்றம்

முதலில் திருப்பரங்குன் றமாகிய படைவீட்டைப் பற்றிச் சொல்கிறார். முருகப்பெருமான் ஆறு படைவீடு களில் எழுந்தருளியிருக்கிறான் என்ற வழக்கு, பலகால மாகத் தமிழ் நாட்டில் இருக்கிறது. அந்த வழக்குக்கு அடிப்படை திருமுருகாற்றுப்படையே. பிற்காலத்தில் அருணகிரிகாத சுவாமிகளுடைய திருப்பாடல்களிலும், முருகனைப் பற்றிய துதி நூல்களிலும் ஆறுபடை வீடுகளைப் பற்றிய செய்திகள் நிரம்ப வருகின்றன. நக்கீரர் படைவீடுகள் என்று குறிப்பிட்டுச் சொல்லாவிட்டாலும் ஆறு இடங்களைத் தனியே வைத்துச் சுட்டிக்காட்டுவதால் ஆறுபடை வீடுகள் என்ற அமைப்பு உண்டாயிற்று. வேறு பல இடங்களிலும் முருகன் இருந்தாலும் ஆறு என்ற எண்ணிக்கைக்கும் அவனுக்கும் தொடர்பு மிகுதி. ஆகையால் ஆறு படைவீடு என்ற வழக்கு நிலையாக நின்றுவிட்டது. அந்தப் திருப்பரங்குன் றம். படைவிடுகளில் முதலாவது

பரங்குன்றின் பழம் பெருமை

திருப் பரங்குன் றத்தைப்பற்றிச் சொல்ல வருகிறார் நக்கீரர். அதைப் பற்றிய செய்தி சுருக்கமாகவே இருக் கிறது. மதுரையைப் பற்றிய வருணனையே முதலில் இருக் கிறது. ஏதேனும் ஓர் ஊரைப் பிறருக்குச் சுட்டிக்காட்ட வேண்டுமானால் அது சிற்றூராக இருந்தால், அதன் அருகி லுள்ள பேரூரைச் சொல்லிப் பின்பு அதனைச் சொல்வது ஒரு வழக்கம். அவ்வாறு திருப்பரங்குன்றத்தை நேரே சொல்லாமல் அதன் அருகிலுள்ள மதுரை மாநகரைச்  சொல்லி, அப்பால் திருப்பரங்குன்றத்தைச் சொல்கிறார் நக்கீரர்.

மதுரை மாநகருக்கு மேற்கே இருப்பது திருப்பரங் குன்றம், அந்தக் காலத்தில் திருப்பரங்குன் றம் தனி ஊராக இல்லை. மதுரை மாநகரிலுள்ள மக்கள் பேரன்போடு திருப்பரங்குன் றத்திற்குச் சென்று வழிபட்டு வந்தார்கள். பரிபாடல் என்ற சங்க நூலில் அதைப்பற்றிய செய்திகள் வருகின்றன. திருப்பரங்குன்றத்தில் அந்தக் காலத்தில் இருந்த இயற்கை எழிலையும், மதுரை மாநகரிலுள்ள மக்கள் திரளாகச் சென்று முருகனை வழிபட்ட செய்தியையும் அதில் காணலாம். குகைகளில் பல வகையான சித்திரங்கள் எழுதி இருந்தார்கள் என்பதை அந்த நூல் சொல்கிறது; அவ்விடத்தை எழுதெழிலம்பலம் என்று சொல்வார்கள். தொன்றுதொட்டே திருப்பரங்குன்றம் புகழுடையதாக நிலவுகிறது. முருகப்பெருமா னுக்குரிய முதல் படைவீடு என்பதோடு, அது ஒரு சிவத்தலமு மாகும். பரங்குன்றம் என்ற பெயரே பரனாகிய சிவபெருமான் இருக்கின்ற குன்று என்ற பொருளுடையது; அந்தத் தலத்துக்குத் தேவாரம் உண்டு. ஆகவே சிவத்தலமும், முருகன் திருப்பதியும் ஒன்றாக இணைந்து அமைந்தது அவ்விடம் முருகப் பெரு மானின் புகழ் அங்கே மிகுதியாக இருப்பதனால் பலருக்கு அது பாடல் பெற்ற சிவத்தலம் என்பது தெரியாது. சிவத்தலம் என்பதை அதன் பெயரே நன்கு காட்டு கிறது.

மதுரையின் சிறப்பு

இனி நக்கீரர் சொல்கின்றதைப் பார்க்கலாம். அவர் முதலில் நமக்கு மதுரையை அறிமுகப்படுத்துகிறார். அவர்  மதுரையில் வாழ்பவரானாலும் நம்மை நோக்கிப் பாடுபவ ராகையால், புறத்திலிருந்து மதுரைக்கு நம்மை அழைத்தும் செல்கிறார் மதுரை மாநகர் பாண்டிய அரசர்கள் அரசாண்ட இடம். பல காலமாகப் பரம்பரை பரம்பரையாகப் பாண்டிய மன்னர்கள் இருந்து தம்முடைய வீரத்தையும், கொடையையும் புலப்படுத்திய இடம் அது. அன்றியும் தமிழ்ச் சங்கத்தில் பல புலவர்கள் இருந்து தமிழ் ஆராய்ச் சியைத் தொடர்ந்து நடத்திவந்த இடமும் அதுதான், பழங் காலத்தில் மன்னர்கள் இருந்து வாழ்ந்து அரசோச்சிய நகரங்களுள் இன்றும் சிறப்புடன் இருப்பவை காஞ்சிபுரமும் மதுரையுமே ஆகும். ஆனால் இந்த இரண்டிலும் மதுரை பழஞ்சிறப்புக் குன்றாமல் மேலும் மேலும் வளர்ச்சி பெற்று வருகிறது. மன்னர் உறைவிடம் ஆதலின் அந்த நகருக்கு. மதில்கள் உண்டு; கோட்டைகளும் உண்டு பழங்காலத்தில் மதிலின் வெளியிலே காவலர்கள் காத்துக்கொண்டிருப் பார்கள். மதிலின்மேல் கொடிகள் ஆடிக்கொண்டிருக் கும். மதுரையில் அடிக்கடி போர் நிகழ்வது இல்லை. அந்தத் திருமதில்வாயில் போர் இல்லாத வாயில் பாண்டியன் மிக்க வீரத்துடன் பகைவர்களை அழித்து ஒடுக்கி விட்ட மையினால் மதுரையை முற்றுகை இடுபவர் யாரும் இல்லை

மதிலின் வாயிலில் பந்தையும், பாவைகளையும் தொங்க விட்டிருப்பார்கள். அது ஒரு குறிப்பையுடையது. பகை வர்கள் இந்த மதிலினூடே புகுந்து வரமுடியாது, அப்படிப் புகுந்துவர வேண்டுமானால் ஆண்மையை இழந்து. தாங்கள் பெண்களைப் போன்றவர்கள் என்ற எண்ணத்தை உண்டாக்க வேண்டும். அதற்கு அடையாளமாக மதில்வாயி லிலே கட்டித் தொங்கவிட்டிருக்கும் பந்தையும், பாவை யையும் எடுத்து விளையாடிப் பின்பு உள்ளே போக வேண்டும். பெண்கள் பந்தாடுவதும் பாவையை வைத்துக் கொண்டு விளையாடுவதும் இயல்பு. வீரமுடையவர்கள் வெளியில் நின்று கோட்டையை முற்றுகையிடலாம். பெண் களைப் போன்றவர்கள் வீரம் இழந்து உள்ளே போகலாம். இதுதான் குறிப்பு.

ALSO READ:  அல்லல் பிறவியறுக்கும் ஐப்பசி மாத அன்னாபிஷேகம்!

மதிலை நெடுந்தூரத்திலிருந்து பார்க்கும்போது, ‘பகை வர்கள் வேண்டுமானால் முற்றுகையிட்டுப் போர் செய்ய லாம்’ என்று உணர்த்துகின்ற பாண்டியனது கொடி அதன் மேல் உயர்ந்து விளங்குகிறது.

செருப்புகன்று எடுத்த சேணுயர் நெடுங்கொடி.

[போரை விரும்பி உயர்த்திக்கட்டிய மிக உயரமாக உள்ள நீண்ட கொடிகளை உடைய.]

மதிலைப் பார்த்து, அதன்மேல் உயர்ந்து பறந்து கொண்டிருக்கும் கொடியைப் பார்த்து, பின்னர் வாயிலை அணுகுகிறோம். அங்கேதான் பந்தும் பாவையும் தொங்கு கின்றன. அந்த வாயில் இப்போது மங்கல வாயிலாக இருக்கிறது. திறந்து இருக்கின்ற வாயில் அது. பகைவர்க ளாகிய வீரர்களை அடியோடு அழித்துவிட்ட சிறப்பை உடையவன் பாண்டியன். ஆதலின் அந்த வாயிலில் இப் போது போருக்குரிய அறிகுறிகள் இல்லை.

வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப் பொருநர்த் தேய்த்த போர் அரூ வாயில்

[வரிந்து புனையப்பட்ட பந்தோடு பொம்மைகள் தொங்க, பகை வீரர்களை அழித்துப் போர் அருமையாகப் போன வாயிலையும் – உடைய மதுரை என்று சொல்ல” வருகிறார்.] 

அந்த வாசலின் வழியே மதுரைக்குள்ளே புகுகிறோம். எங்கே பார்த்தாலும் விசாலமான தெருக்கள்: அழகான அங்காடிகள் இருக்கின் றன. பழங்காலத்தில் மதுரையிலும் காவிரிப்பூம் பட்டினத்திலும் இருந்த அங்காடிகள் மிக்க சிறப்பைப் பெற்றவை; பிற நாட்டி லிருந்து வந்தவர்களும் பண்டங்களைப் பெற்றுத் தம் ஊருக்குச் செல்லும் பெரு மையை உடையவை. மதுரையில் அந்தக் காலத்தில் பகல் நேரத்தில் வியாபாரத்தைச் செய்யும் இடத்தை நாள் அங்காடி என்றும், மாலையில் வியாபாரிகள் வாணிகம் செய்யும் இடத்தை அல்லங்காடி என்றும் கூறுவார்கள். அந்த இரண்டு கடைத் தெருவுகளும் மிக விரிவாக அமைந்திருந்தன என்று பழைய நூல்கள் கூறுகின்றன. அந்த அங்காடிகளில் வஞ்சகம் என்பதே கிடையாது. உள்ளதை உள்ளபடியே சொல்லி வியாபாரிகள் வியா பாரத்தை நடத்துவார்கள்; கொள் முதல் இது, லாபம் இது என்று வெளிப்படையாகச் சொல்லி விற்பனை செய் வார்கள்; போலிச்சரக்கு வியாபாரமோ, அநியாய விலையைச் சொல்கின்ற முறையோ, ஏமாற்றே, திருட்டோ அங்கே இருப்பது இல்லை. அது எந்த வகையான தீமையும் இல்லாத அங்காடி, அதனை நக்கீரர், தீது தீர் நியமம் என்று சொல்கிறார்,

ALSO READ:  தேசிய இளைஞர் தின ஸ்பெஷல்: சுவாமிஜியைக் கண்டெடுத்த தமிழகம்!

அந்தத் தெருக்களில் எப்போதும் திருமகள் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறாள்; உலகத்திலேயுள்ள பல நாட்டு மக்களும் வந்து சேர்ந்து பண்டங்களைக் கொடுத்தும் கொண்டும் வாணிகம் செய்யும் இடம் அது; மக்கள் கூட்டமும் பொருளின் சிறப்பும் சிறிதும் குறையாமல் நிற்கின்ற இடம்; அங்கே திருமகள் கொலு வீற்றிருக் கிறாள் என்றே சொல்லவேண்டும். ஆகவே,

திருவீற்றிருந்த தீது தீர் நியமத்து

[திருமகள் சிறப்புடன் தீர்ந்த கடைகளையும்,] எழுந்தருளியிருக்கும், தீமை.

என்று சொல்கிறார். தமிழ்நாட்டில் அந்தக் காலத்தில் மற்ற நகரங்களைவிடச் சிறந்த மாட மாளிகைகள் மதுரையில் அதிகமாக இருந்தன. அதனால் அதை “மாடக் கூடல்” என்று சொல்வார்கள். “நான்மாடக் கூடல்” என்பது மதுரைக்குரிய ஒரு பெயர். ஒரு காலத்தில் இறைவன் தன்னுடைய தலையில் இருந்த நான்கு மேகங்களையே மாடமாக நிறுத்தி, வருணன் இடையறாது பெய்த மழையிலிருந்து அவ்வூரைக் காப்பாற்றினான் என்பது புராண வரலாறு.பொதுவாகவே செல்வம் நிரம்பிய நகரமாதலின் செல்வர்கள் பெரிய மாடங்களை எழுப்பியிருந்தார்கள். அதனால் மாடக்கூடல் என்ற பெயர் வந்தது. ஒவ் வொரு வீதியிலும் பல பல மாடங்கள் இருந்தன.

மாடம் மலி மறுகிற் கூடல்.

[மாடங்கள் மலிந்த தெருக்களையும் உடைய மதுரை.]

வீரத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கோட்டையும் கொடிகளும். சமாதானத்தை வெளிப்படுத்தும் மதில் வாயிலும், செல்வச் சிறப்பையும் நியாயமான வாணிகச் சிறட்பையும் புலப்படுத்தும் அங்காடிகளும், வளத்தைக் காட்டும் மாடங்களும் உடைய மதுரைமா நகருக்கு மேற்கே திருப்பரங்குன்றம் இருக்கிறது என்று சொல்ல வருகிறார்.

மாடம் மலி மறுகிற் கூடற் குடவயின்.

[மாடங்கள் மலிந்த தெருக்களையும் உடைய மதுரைக்கு, மேற்கே.] 

வண்டுகளின் மகிழ்ச்சி

இனி, திருப்பரங்குன்றத்தைப் பற்றிச் சொல்கிறார். திருப்பரங்குன் றத்தின் அடிவாரத்தில் வயல்கள் இருக் கின்றன. மலையின்மேலே சுனைகள் இருக்கின்றன. வளப்ப முடைய நிலமாதலின் அங்கங்கே உழுது பயிரிட்டிருக் கிறார்கள். வளம் நிரம்பிய வயல்கள் அங்கே உண்டு, வயல் வளம் சேற்றினால் அமைவது. நல்ல பூமி ஆதலால் அந்தச் சேறு கறுப்பாக இருக்கிறது. துண்டு துண்டாக அங்கங்கே சிதறுண்டு கிடக்கும் வயலாக இல்லை. எங்கே பார்த்தாலும் அகன்ற நிலப் பரப்புகள் எல்லாம் கரிய சேற்றையுடைய வயலாகக் காட்சி தருகின்றன.

இருஞ்சேற்று அகல் வயல் – என்று நக்கீரர் பாடுகிறார். வயலின் ஓரங்களில் தண்ணீர் தேங்கும் இடங்களில் தாமரை மலர்கள் மலர்ந்திருக் கின்றன. முள்ளைத் தண்டிலேயுடைய தாமரை வாய் அவிழ்ந்து விரிந்திருக்கிறது.

மலர் இருக்கும் இடத்தில் வண்டு வரவேற்பு இல்லாமல் போய்ச் சேரும். முதல் நாள் இரவிலே வண்டுகள் வந்து ஒரு தாமரை மலரில் புகுந்தன. அது மூடிக்கொண்டது. இரவு முழுவதும் அந்தத் தாமரை மலரையே படுக்கையாகக் கொண்டு அந்த வண்டுகள் அங்கே தூங்கின. ஆண் வண்டும் பெண் வண்டு மாகத்தான் இருக்க வேண்டும். காலையில் வாயில் கதவைத் திறப்பதுபோல அந்தத் தாமரை இதழ்கள் விரிந்தன. அப்போது அங்கு இருந்த வண்டுகள் புறப்பட்டன. முதல் நாள் மாலையில் தாமரைத் தேனை உண்ட வண்டுகள் இன்று காலையில் நெய்தல் மலரை ஊதுகின்றன. வைகறை நேரமாகையால் அது இன்னும் மூடிக்கொள்ளவில்லை. அந்த நெய்தலில் உள்ள கள்ளையும் குடித்து மறுபடியும் பூரிக்கின்றன. காலையில் சுறு சுறுப்பை ஊட்டும் வகையில் இருக்கிறது நெய்தல் தேன்; அதனால் அதைக் கள் என்றே சொல்கிறார்.

இப்போது சூரியன் நன்றாகத் தன்னுடைய கிரணங் களைப் பரப்பிவிட்டான். களிப்பில் மிதந்த அந்த வண்டுகள் மெல்ல மெல்லப் பறந்து மேலே செல்கின்றன. மலையின் மேலுள்ள சுனைகளில் பலவகையான மலர்கள் மலர்ந்திருக்கின் றன. கண் களைப் போன்ற சின்னஞ் சிறிய பூக்கள் அங்கே உள்ளன. அவற்றிலும் தேன் இருக்கின்றது. முதல் நாள் தாமரைத் தேனை நுகர்ந்து விட்டு, விடியற்காலையில் நெய்தல் கள்ளை உண்டு புறப்பட்ட வண்டுகள், நல்ல சிறிய பூக்கள் மலர்கின்ற மலையின் மேலுள்ள சுனைக்கு வந்து விட்டன. அங்குள்ள மலர் களில் புகுந்து அங்கேயுள்ள தேனையும் உண்டு ரீங்காரம் செய்கின்றன. இப்படி வேறு வேறு வண்டுகள் ஒலிக் கின்றன. அழகிய சிறகுகளை உடைய வண்டுக் கூட்டங்கள் சேர்ந்தாற்போல் முரலும்போது ஒருவகை இனிமையான ஒலி எழும்புகிறது. வயிறு நிரம்பத் தேனை உண்ட சிறப் பினாலே அந்த வண்டுகள் இடைவிடாமல் மலையின் மேலே யுள்ள சுனைகளில் ரீங்காரம் செய்கின்றன. அத்தகையது பரங்குன்றம்.

ALSO READ:  சங்க இலக்கியங்களில் திருக்கார்த்திகை விழா

இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த 
முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக் 
கள்கமழ் நெய்தல் ஊதி எற்படக் 
கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர் 
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும் 
குன்று அமர்ந்து உறைதலும் உரியன். 

[கரிய சேற்றையுடைய அகன்ற வயலில் விரிந்து. மலர்ந்த முள்ளைத் தண்டிலே உடைய தாமரையில் உறங்கி. விடியற்காலையில் கள் மணம் வீசுகின்ற நெய்தல் மலரை ஊதி, பகல் நேரம் வந்தவுடன், கண்ணைப் போல மலர்ந்த அழகிய சுனை களிலுள்ள மலர்களில், உள்ளே சிறகுகளை யுடைய வண்டுகளின் கூட்டம் ரீங்காரம் செய்யும் திருப்பரங் குன்றத்தில் எழுந்தருளியிருப்பதற்கும் உரியவன்.]

இரவிலே தங்கிய வண்டுகள் தாமரையில் தூங்கு. கின்றன என்று சொல்ல வந்தவர்.

முள் தாள் தாமரைத் துஞ்சி – என்றார். இங்கே முள்ளையுடைய தாமரை என்று சொல் வதற்கு ஏதேனும் சிறப்பு உண்டா என்று பார்க்க. வேண்டும். இரவில் தூங்குபவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் அல்லவா? ஆகையால் இயற்கையிலேயே வண்டுகள் துஞ்சுகிற படுக்கையாகிய மலருக்கு முள் பாதுகாப்பாக இருக்கிறது. வேறு எந்தப் பிராணியும் அந்தத் தண்டின் மேல் ஏறித் தாமரையில் புகமுடியாது. தாமரையாகிய வீட்டின் இதழாகிய கதவு தானே காலையில் திறந்து கொள்ளுமேயன்றி வேறு ஒருவராலும் திறக்க. முடியாது.

வண்டுகளுக்கே இத்தனை இன்பமான வாழ்வு அமையும். போது மற்றவர்களுக்கு எவ்வளவு இன்பம் உண்டாகும். என்று நாம் வியக்கிறோம்.

வீரமும். செல்வமும், சமாதானமும் ஒருங்கேயுடைய. மதுரை மாநகருக்கு அருகில் இயற்கையான எழில் லங்கள் நிறைந்த திருப்பரங்குன் றத்தில் முருகப் பெருமான் எழுந்தருளியிருக்கிறான். அடியார்களுக்கு அருள் செய்வதற்காக வந்து அமர்ந்த இடம் ஆகையால் மிக்க விருப்போடு அங்கே தங்கியிருக்கிறான். குன்று அமர்ந்து உறைதலும் உரியன்.

“அங்கே உறைதலும் உரியன்” என்று நக்கீரர் சொன்னார். அந்த ஓர் இடம் மாத்திரம் ஆண்டவனுக்கு உரியது அன்று, இன்னும் பல இடங்கள் உண்டு என்பதை அந்தக் குறிப்புக் காட்டுகிறது. அதுமட்டு மன்று என்று சொல்லி மேலே தொடர்ந்து சொல்கிறார்.

குன்று அமர்ந்து உறைதலும் உரியன்; அதாஅன்று.

[அதாஅன்று – அதுவல்லாமல்,]

திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளியிருக்கும் முருகனைப். பற்றிச் சொன்ன பிறகு, “அதோடு மட்டுமன்று, இன்னும் சொல்கிறேன்” என்ற குறிப்பை வைத்துப் பேசினார் நக்கீரர். மேலே திருச்சீரலைவாயின் பெருமையைச் சொல்ல வருகிறார். முருகப் பெருமான் ஆறு முகங்களோடும், பன்னிரண்டு திருக்கரங்களோடும் எழுந்தருளும் கோலத்தை அந்தப் பகுதியில் விரிவாக எடுத்துக் காட்டுகிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version