- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் மகிமை நிறைந்த மகா சிவராத்திரி!

மகிமை நிறைந்த மகா சிவராத்திரி!

போன்ற மந்திரங்களை, சிவபுராணம் கூறித் துதித்து மஹா சிவராத்திரி அன்று ஈசன் அருள் பெறுவோம்.

  • பா.சுவாமிநாதன்

உறவொடு பகையறும் ஒருமுதல் அவன் எவன்?
இறுதியில் உலகருள் இறையவன் அவன் எவன்?
மறைமுடி வினில்நடம் வளர்பவன் எவன், எவன்?
அறிவினில் அறிபவன் அடியினை தொழுதனம்

சைவ சமயக் கடவுள்களுள் முதன்மையானவனும் முக்கியமானவனுமாக விளங்குபவன் ஈசன். இறையனாராக, தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவனாக இருந்த தமிழ்க் கடவுள். பிட்டுக்கு மண் சுமந்து, நரியைப் பரியாக்கி, கல்யானைக்கு கரும்பு கொடுத்து பல்வேறு திருவிளையாடல்கள் நிகழ்த்திய பெம்மான். உலகத்தை ஆட்டுவிக்கும் ஆடல்வல்லான். இவ்வாறு பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்ட தனிபெருங் கடவுளான ஈசனுக்கு மிகவும் உகந்த நாள் மஹா சிவராத்திரி.

சிவராத்திரி என்பதற்கு “சிவனுக்கு உகந்த இரவு” என்பது பொருளாகும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரியாக போற்றப்படுகிறது. ஆனால் மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மஹா சிவராத்திரியாகப் போற்றப்படுகிறது. எத்தனையோ இரவுகள் இருக்க மாசி மாதத்து அந்த ஒரு இரவு மட்டும் சிவனுக்கு மிகவும் பிடித்ததாகிப் போனது. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.

மஹா ஜோதி
சிருஷ்டிகர்த்தாவான பிரம்மாவிற்கு திடீரென்று ஓர் சந்தேகம் ஏற்பட்டது. ‘ நான் தானே இந்த உலகைப் படைப்பவன், நான் இல்லாவிட்டால் இந்த உலகில் உயிர்கள் ஏது, இயக்கம் ஏது? ஏன் இந்த உலகமே ஏது? – என்ற எண்ணம் தோன்றியது. சிருஷ்டி என்ற ஒன்று இல்லாவிட்டால் அப்புறம் இந்த உலகை யார், எப்படிக் காப்பது… ரட்சிப்பது… அழிப்பது!… ஆகவே காக்கும் கடவுளான திருமாலை விடவும், அழித்து ரட்சிக்கும் ஈசனை விடவும் நானே உயர்ந்தவன், சிறந்தவன். அளப்பரிய ஆற்றல் படைத்தவன்’ என்ற எண்ணம் உண்டானது. அதனால் அவருக்கு மிகுந்த தலைக் கனம் ஏற்பட்டது.

தன் செல்வாக்கை நிரூபிக்க நினைத்த பிரம்மன் வைகுண்டம் சென்றார். அறிதுயிலில் ஆழ்ந்திருந்த அரியுடன் மல்லுக்கு நின்றார். ‘நான் உன் நாபிக் கமலத்தில் தோன்றியவனே ஆனாலும் உன்னை விட உயர்ந்தவன், எல்லாம் தெரிந்தவன். எனவே மகன் தானே என நீ என்னை அலட்சியப்படுத்தாமல் எனக்குக் கட்டுப்பட்டு நட! நீ பலரது சாபத்திற்கு ஆளாகி பலமுறை பிறப்பெடுத்திருக்கிறாய். ஆனால் நானோ நித்யவாசம் செய்பவன். பிறப்பு, இறப்பு அற்றவன். நான் இந்த உலகத்தைப் படைக்காவிட்டால் எங்ஙனம் நீ காத்தல் தொழிலைச் செய்ய முடியும்? எனவே, நான் உன்னை விட உயர்ந்தவன் என்பதை உணர்ந்து கொண்டு எனக்கு ஏவல் செய்வாயாக’ என்றார்.

ALSO READ:  விசுவாவசு - தமிழ்ப் புத்தாண்டு; தலைவர்கள் வாழ்த்து

அதைக் கேட்டதும் மஹாவிஷ்ணுவுக்கு அளவற்ற சீற்றம் உண்டானது. ‘அடே, மூடனே, உன்னுடைய தலைகளில் ஒன்றை ஈசனார் பறித்து எறிந்த காலத்தில் எங்கே போயிற்று உனது படைப்பாற்றல்? நீ அளவற்ற ஆற்றல் உடையவன் என்பது உண்மை என்றால் அதனை மீண்டும் உன்னால் படைத்துக் கொள்ள முடியாதது ஏன்? சோமுகாசுரன் உன்னிடம் இருந்த வேதங்களைப் பறித்து எடுத்துச் சென்றபோது எங்கே போனாய் நீ? நானல்லவோ மச்ச அவதாரம் எடுத்து அதை உனக்கு மீட்டுத் தந்தேன். எனவே நான் என்ற அகங்காரத்தை விடு. நானே இந்த உலகைக் காப்பவன். நான் காக்கும் இத்தொழிலைச் செய்யாவிட்டால் இந்த உலகம் என்றோ அழிந்து விட்டிருக்கும். ஆகவே, நானே உன்னை விட உயர்ந்தவன். என்னிடம் தேவையில்லாமல் எதிர்வாதம் புரியாதே! பல அசுரர்களை அழித்த நான் உன்னையும் அழிக்கத் தயங்க மாட்டேன்’ என்றார்.

தொடர்ந்து வாக்குவாதம் முற்றியது. இறுதியில் அதுபெரும் போராக மாறியது. ஒருவரை விட ஒருவர் தாங்களே உயர்ந்தவர் என்று கூறி மிகக் கடுமையாகப் போர் புரிந்தனர். அதனால் அண்ட சராசரம் நடுங்கியது. மகா பிரளயம் உண்டானது. இந்திரன் திகைத்தான். முனிவர்கள், சித்தர்கள், யோகிகள் அனைவரும் அஞ்சினர். ஈசனிடம் சென்று உலகைக் காக்குமாறு கெஞ்சினர். ஈசனும் அபயஹஸ்தம் அருளினார்.

ALSO READ:  கரூர்: தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழா; விழிப்புணர்வு பிரச்சாரம்!

போர் புரிந்து கொண்டிருந்த அயன், அரிகளின் அருகே மிகப் பெரிய பேரொளி ஒன்று தோன்றிற்று. ’இந்த ஒளியின் அடியையும், முடியையும் எவர் கண்டறிகிறாரோ அவரே பெரியவர்’ என்ற அசரீரி ஒலித்தது. உடனே தாம் தான் பெரியவர் என மற்றவருக்கு நிரூபிக்க வேண்டிய ஆவலில் பிரம்மா அன்னப் பறவையாகி வானில் உயர்ந்தார். விஷ்ணுவோ வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைந்தார்.

பிரம்மா மேலே மேலே சென்றார். அன்னமாகிய பிரம்மாவின் சிறகுகள் அழலின் வெப்பத்தால் கருகின. உருகின. உதிர்ந்தன. இருந்தும் அவரால் திருமுடியைக் காண இயலவில்லை. விஷ்ணுவோ பூமியைக் குடைந்தார். பாதாளம் வரை கடைந்தார், ஆயினும் திருவடியைக் காண இயலவில்லை. ஆணவம் ஒழிந்த விஷ்ணு, அண்ணலைச் சரண் புகுந்தார்.

மேலே செல்ல முடியாமல் திகைத்த பிரம்மா, இறைவனின் திருமுடியிலிருந்து தவறி விழுந்து கொண்டிருக்கும் தாழம்பூவைக் கண்டார். தான் திருமுடியைக் கண்டதாகவும், அதை தாழம்பூ பார்த்ததாகவும் பொய் சாட்சி கூற வலியுறுத்தினார். படைப்புக் கடவுளான பிரம்மனே சாதாரண மலரான தன்னிடம் கெஞ்சுகிறானே என்ற எண்ணத்தில் தாழம்பூவும் உடன்பட்டது. அதை சாட்சியாக வைத்து, தான் திருமுடியைக் கண்டதாகவும், அதற்கு இந்த தாழம்பூவே சாட்சி என்றும் பொய் சாட்சி கூறினார் பிரம்மா.

பேரொளி வெடித்துச் சிதற ஈசன் அளவிலாச் சீற்றத்துடன் அதிலிருந்து வெளிப்பட்டார். ’பிரம்மனே! என் திருவடியைக் காணாமலேயே கண்டு விட்டதாகப் பொய் புகன்ற உனக்கு இனி இவ்வுலகில் திருக்கோயில்களும், வழிபாடும் இல்லாமல் போகட்டும்’ என்று சாபம் இட்டார். பொய் சாட்சி கூறிய தாழம்பூவிடம், ‘நீதி தவறிய உன்னை இனி என் பக்தர்கள் யாரும் பூஜைக்குப் பயன்படுத்த மாட்டார்கள்” என்று சாபமளித்தார். சாபம் விடுத்தும் சீற்றம் அடங்காத சிவன் அக்கினிப் பிழம்பாய்த் தகித்தார். அஞ்சிய பிரம்மனும், விஷ்ணுவும் தங்கள் பிழை பொறுக்குமாறு வேண்டினர். தேவர்கள் பாடித் துதிக்க, முனிவர்கள் வேதம் ஓத, ஈசன் குளிர்ந்தார். அருணாசல லிங்கமாய் அமர்ந்தார்.

இவ்வாறு ஈசன் ஜோதிப் பிழம்பாய்த் தோன்றி பிரம்ம, விஷ்ணுக்களின் ஆணவம் அகற்றி மன்னுயிர்களை மாபெரும் அழிவிலிருந்து காத்த அந்த இரவு தான் மஹா சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.

ALSO READ:  மழை வேண்டி அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம்!

பகவான் ரமணரும் இதனை

ஆதிஅரு ணாசலப்பேர் அற்புதலிங் கத்துருக்கொள்
ஆதிநாள் மார்கழியில் ஆதிரையச் – சோதியெழும்
ஈசனைமால் முன்அமரர் ஏத்திவழி பட்டநாள்
மாசிசிவ ராத்திரியா மற்று

என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சிவராத்திரி குறித்து மற்றொரு கதையும் கூறப்படுகின்றது. ஒரு காலத்தில் பிரளயத்தின் போது அனைத்து உயிர்களும் ஈசனிடம் சென்று ஒடுங்கின. உலக இயக்கமே நின்று போனது. இதனால் மனம் வருந்திய அன்னை உலகங்களும் உயிர்களும் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை நோக்கித் தவம் இருந்தாள். அவள் தவத்திற்கு மெச்சிய ஈசன், தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாக்கி உயிர்களைப் படைத்தருளினார். அப்பொழுது அன்னை, தாம் விரதம் இருந்து இறைவனை தியானித்துப் போற்றிய அக்காலத்தை அனைவரும் சிவராத்திரி விரதமாக கொண்டாட வேண்டும் என்றும், அவர்களுக்கு ஈசனின் பூரண அருள் எப்போதும் கிடைக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டாள். இறைவனும் அதற்கு அருள் புரிந்தார். அந்நாளே மஹா சிவராத்திரியாகக் கொண்டாடப்படுவதாக ஒரு நம்பிக்கை உள்ளது.

சிவராத்திரி பூஜை

சிவராத்திரி காலத்தில் நீராடி, நீறு பூசி, ஐந்தெழுத்து மந்திரத்தை விடிய விடிய ஓதி வருதல் சிறப்பு. சிவ புராணம் படித்தலும், திருமுறைகளை பாராயணம் செய்தலும் நற்பலனைத் தரக்கூடியதாகும். சிவன் ஜோதியாய்த் தோன்றி லிங்கமாய்க் குளிர்ந்த அண்ணாமலை தலத்தை கிரிவலம் வருதல் அளவற்ற புண்ணியத்தைத் தரும். அன்னை பார்வதி தேவியுடன், முப்பத்து முக்கோடி தேவர்களும், சித்தாதி யோகியர்களும், முனிவர்களும் மஹா சிவராத்திரி அன்று கிரிவலம் வருவதாக ஐதீகம்.

தென்னாடுயை சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஓம் நமசிவாய! ஓம் சிவாய நமஹ!

போன்ற மந்திரங்களை, சிவபுராணம் கூறித் துதித்து மஹா சிவராத்திரி அன்று ஈசன் அருள் பெறுவோம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version