வேத அர்த்தம் சொல்பவனுக்கு தெரியாவிட்டாலும் உரிய தேவதைகளுக்குத் தெரியும்!

வேத சப்தத்தை உச்சாரணம் பண்ணுவது எப்படி தபஸோ அப்படியே கேட்பதும்.

வேதம் சொன்னால் புரியாது; புரியாத வேதத்தைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் வருவதே பெரிய ஏற்றம். வேத சப்தம் நம்மை கேட்கப் பண்ணுகிறது.

அதர்வண வேதம் சொல்கிறது — இங்கிருந்து ஒருவர் கோவிலுக்குப் போய் பகவானைச் சேவிக்கிறார். பகவான் இவரைப் பார்த்தாரா என்று எப்படி தெரிந்து கொள்வது?

பகவான் இவரை அனுக்ரஹித்தானா என்பதற்கு வேதம் ஒரு அளவுகோல் சொல்கிறது. ஓரிடத்தில் வேத பாராயணம் நடக்கிறது. வேத சப்தத்தைக்​கேட்டு அங்கே போய் அவர் உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டு கேட்கிறார்.

வேதம் சொல்கிறது— எப்போது வேதத்தைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு வேத பாராயணத்தைக் கேட்கிறாறோ அப்போது பகவான் அவரைப் பார்த்து விட்டான் என அர்த்தம்.

பகவான் பார்த்தான் என்பதற்கு அளவுகோல் எது? வேதத்தைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுதல். வேதத்தைக் கேட்க ஒருத்தருக்குப் பிடிக்கவில்லை என்றால் இன்னும் பகவானின் கடாக்ஷம் அவனுக்கு கிடைக்கவில்லை என்று அர்த்தம்.

பகவானிடத்தில் த்வேஷம் இருந்தால் கூட அவன் பொறுத்துக்​கொள்வான். வேதத்தின் மீது த்வேஷம் இருந்தால் ஒத்துக் கொள்ள மாட்டான்.

நாம் வேதத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். ந்ருஸிம்ஹ அவதாரத்தின் முன்பு பகவான் சொன்னான் ‘யதா வேதேஷூ’ என்று எவன் வேகத்தை நிந்திக்கிறானோ அவன் சீக்கிரம் நாசத்தை அடைவான் என்றான்.

அர்த்தம் தெரியா விட்டாலும் வேதத்தைக் கேட்க வேண்டும். கேட்க வேண்டும் என்ற அபிப்பிராயம் நமக்கு வேண்டும். அர்த்தமே தெரியா விட்டாலும் பரவாயில்லை. இது எப்படி சரியாகும் என்று​ கேள்வி.

வேத மந்திரங்களுக்கு அர்த்தம் தெரியாமல்​ஒருவர் ஹோமம் பண்ணுகிறார். அப்போது பலன் சித்திக்குமா என்றால் சித்திக்கும் என்கிறது வேதம். ப்ரம்மச்சாரி உபநயனத்தின் போது பிக்ஷாடணம் –பிச்சை எடுக்கக் கற்றுக் கொள்கிறான். அதற்கு அவனுக்குச் சொல்லிக் கொடுக்கப் படுகிறது. ஒவ்வொரு வீட்டின் முன்பும் ‘பவதி பிஷாந்தேஹி’ என்கிறான்.

இவனுக்கு சமஸ்கிருத பாடம் ஆரம்பிக்கவில்லை. ராம சப்தம் கூட தெரியாது. ‘தாங்கள் பிச்சை இடுங்கள்’ என்ற அர்த்தமும் தெரியாது.

ஆனால் அதை சொல்லக் கற்றுக் கொண்டுள்ளான். அவனுக்கு என்ன தெரியும்..?

‘பவதீ பிஷாந்தேஹி’என்று கூக்குரலிட்டால் பாத்திரம் நிறையும். வீட்டுக் கதவைத் திறந்து வந்து அந்த வீட்டுப் பெண்மணி பாத்திரத்தில் அரிசியை இடுகிறாள். பாத்திரம் நிறைகிறது.

ப்ரம்மச்சாரி அர்த்தம் தெரியாமல் சொல்கிறான். ஆனாலும் பாத்திரம் எப்படி நிறைகிறது என்றால், இவனுக்குத் தெரியாமல் போனாலும் வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியும். அது போல், வேத மந்திரத்திற்கு நமக்கு அர்த்தம் தெரியாவிட்டாலும் தேவதைகளுக்குத் தெரியுமாதலினால் அவர்கள் ஓடி வந்து நாம் கொடுப்பதை ஸ்வீகரித்து நம்முடைய அபீஷ்டத்தை பூர்த்தி பண்ணுவார்கள்..

  • முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் ஸ்வாமி
-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...