திரு நாமம் பாட… திருப்பாவை மாதம்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் ரங்கமன்னார் 

“த்யாயன் க்ருதே, யஜன் யஜ்ஞை: த்ரேதாயாம், த்வாபரே அர்ச்சயன், யதாப்நோதி, ததாப்நோதி கலௌ சங்கீர்த்ய கேசவம்” என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.

இதன் கருத்து க்ருத யுகத்தில் த்யானத்தினாலும் த்ரேதா யுகத்தில் யாக யஜ்ஞங்களாலும் த்வாபர யுகத்தில் பகவானுக்கு செய்யும் அர்ச்சனை யினாலும் எந்த பயனை ஒருவன் அடைகிறானோ அந்தப்பலனை கலியுகத்தில் பகவான் நாராயணனுடைய திருநாம சங்கீர்த்தனம் செய்வதாலேயே அடைந்து விடுகிறான் என்பது.

கலியுகம் மிகக்கொடியதாய் இருந்தாலும் இந்த சுலபமான வழி இதில் இருப்பதனால் மற்ற யுகங்களைக் காட்டிலும் இதுவே உயர்ந்தது என்று வைணவ ஆசார்யர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வளவு பெருமைகள் வாய்ந்த நாமசங்கீர்த்தனத்திற்கான மாதம் பிறந்து விட்டது. ஆம், அதுவே திருப்பாவை மாதம் என்கிற மார்கழி மாதம்.

வேதம் அனைத்துக்கும் வித்தான கோதை தமிழான திருப்பாவை முப்பது பாசுரங்களிலும் பகவானுடைய நாமசங்கீர்த்தனம் உள்ளது. “நாராயணன்”, “பாற்கடலுள் துயின்ற பரமன்”, “ஓங்கி உலகளந்த உத்தமன்” என்று ஒவ்வொறு நாமமாய் பாடிக்கொண்டு இறுதியில் “வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனை” என்று முடிக்கிறாள் ஆண்டாள் நாச்சியார்.

இந்த மாதத்தில் திருப்பாவை பாசுரங்களைப் பாடுவது மிகச்சிறந்த பலன்களைத் தரும். அதிகாலையில் வீதிகளில் ஆண்கள் பெண்கள் முதியவர்கள் சிறுவர்கள் என்று எல்லோரும் திருப்பாவைப் பாசுரங்களை பஜனையாகப் பாடிக்கொண்டு வீதிவலம் வருவார்கள்.

திருக்கோயிலில்களிலும் மடங்களிலும் வீடுகளிலும் அதிகாலை திருப்பாவை பாடி மகிழ்வர். மேலும் பல இடங்களில் திருப்பாவை பாசுரங்களின் அர்த்தத்தை விளக்கும் சொற்பொழிவுகள் நடைபெறும்.

சில இடங்களில் சிறுவர்களுக்கு திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி நடந்து பரிசுகளும் வழங்கப்படும். ஆக, மார்கழி மாதத்தில் எங்கும் திருப்பாவை, எதிலும் திருப்பாவை என்றபடி இருக்கும். இந்த மார்கழி மாதத்தில் நாமும் திருப்பாவையாகிற நாமசங்கீர்த்தனத்தை செய்து இன்புறுவோம்!

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போயபிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும், செப்பு!

எழுத்து: எம்.வி. மதுசூதனன்

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...