தமிழ் மாதங்கள் 12இல் ஆடியிலிருந்து மார்கழி வரை தட்சிணாயணம் என்றும், தை முதல் ஆனி வரை உத்திராயணம் என்றும் அழைக்கப்படுகிறது. உத்திராயண காலத்தில் தை பொங்கல், மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது.

விஞ்ஞான அடிப்படையில் ஆதிகாலத்தில் பிரித்துள்ளனர் என்று கூறுவது உண்டு. மகாபாரதத்தில் பீஷ்மர் தட்சிணாயணத்தில் வீழ்ந்து உத்திராயணத்தில் அமைதி பெற்றார் என்று சொல்வதும் உண்டு. இப்போது மார்கழி மாதம். மலையாளத்தில் தனுர் மாதம் என்று அழைக்கப்படுவதுண்டு. எல்லாம் கதிரவனைக் கொண்டு காலங்கள் பிரிக்கப்படுகின்றன. இந்த மார்கழியில் பாவை நோன்புகளை கடைபிடிப்பார்கள்.

மார்கழி மாதத்தை மாண்புக்குரியதாக மாற்றியதில் பெரும் பங்கு கொண்டவர்கள் ஆண்டாளும், மாணிக்கவாசகரும் என்றால் அது மிகையாகாது. #மார்கழி மாதத்தில் பாடும் பாடல்களில் ஆண்டாள் பாடிய திருப்பாவை, மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவை, திருபள்ளியெழுச்சி, தொண்டரடி ஆழ்வார் எழுதிய திருப்பள்ளியெழுச்சி ஆகிய நான்கும் தான் இடம்பெற்றுள்ளன. பாவை நூல்கள் எனப்படும் இந்த நூல்களை இந்த மாதத்தின் விடியலில் பாடுவார்கள்.

ஆண்டாள் என்ற மகாகவி மார்கழிக்கு முகம் தந்தவர். மார்கழியில் நான் ஆண்டாளைப் பார்க்கிறேன். அவர் தமிழில் திளைக்கிறேன். கடவுளை விடக் கவிஞர் பெறுகிற புகழின் முன்னோடி ஆண்டாள். கடவுளைக் கவிதையால் எழுப்ப இயலும் எனக் காட்டியவர். எனக்குப் பக்தியைவிடக் காதலுக்கு அடையாளம். மார்கழிதோறும் நினைவில் மலர்ந்து தமிழில் நம்மை நிறைக்கும் ஆண்டாளுக்கும் அவர் காதலுக்கும் தமிழ் கடமைப்பட்டிருக்கிறது.

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற் கடலுள்
*பையத் துயின்ற பரமன் அடி பாடி,
நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி,
மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்,
செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்,
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து — ஏலோர் எம்பாவாய்.

பூமியில் வாழ்பவர்களே நம்முடைய பாவை நோன்புக்கு செய்ய வேண்டிய காரியங்களைக் கேளுங்கள்! பாற்கடலில் உறங்குகிற பகவானுடைய திருவடிகளை பாடுவோம் நெய், பால் இவற்றை உட்கொள்ளமாட்டோம். விடியற்காலை குளித்துவிட்டு, கண்ணுக்கு மை கிடையாது, கூந்தலுக்கு மலர் கிடையாது. செய்யக்கூடாத காரியங்களைச் செய்யமாட்டோம். கோள் சொல்லமாட்டோம். தானத்தையும் பிச்சையையும் எங்களால் முடிந்த வரை கொடுப்போம் இப்படிப் பிழைக்கும் வழியை எண்ணி சந்தோஷப்படுவது நம் பாவை நோன்பு.

  • கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...