ருஷி வாக்கியம் (92) – சோம்பல் ஒரு நோய்!

 

இல்லறத்தானாக இருந்து எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறியாக இருப்பவனும் துறவியாக இருந்து அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்பவனும் முன்னேற மாட்டார்கள் என்கிறது மகாபாரதம்.

“த்வாவேவ ந விராஜேதே விபரீதே ச கர்மணா
க்ருஹஸ்தஸ்ச நிராரம்ப: கார்யவாம் ஸ்சைவ பிக்ஷுக: !!”

இது மகாபாரதத்தில் உள்ள அற்புதமான வாக்கியம். இதனை கொண்டு அனைவருக்கும் பொதுவான தர்மம் என்பது இல்லை என்று தெரிகிறது. அவரவர் இருக்கும் இடத்தைப் பொறுத்து தர்மம் மாறுகிறது.

இல்லறத்தான் எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்து வைராக்கிய பேச்சு பேசக்கூடாது. அதேபோல் சன்னியாசி எல்லா வேலைகளையும் தலை மேல் போட்டுக்கொண்டு அலைவதும் கூடாது. துறவு என்றாலே ஏகாந்த ஜீவனம் நடத்துவது, ஞான வைராக்கியத்தை கடைப்பிடிப்பது போன்றவை முக்கியமானவை. தர்மத்தைக் காப்பதற்காக சில துறவிகள் வேலை செய்தாலும் அவர்கள் அதோடு ஒட்டாமல் வைராக்கியத்தோடு செய்து வருவார்கள். அது வேறு விஷயம்.

ஆனால் இல்லறத்தான் செயல் செய்பவனாக விளங்கவேண்டும், சாதுக்கள் செயல்களை குறைத்துக்கொள்ள வேண்டும் என்கிறது சாஸ்திரம். அது தெரியாமல் இல்வாழ்வான் செயல்களையும் கடமைகளையும் செய்ய மறுத்தால் கர்ம பிரஷ்டன் ஆவான்.

இதன்மூலம் சோம்பேறித்தனம் உதவாது என்று பிரவ்ருத்தி மார்க்கத்தில் இருக்கும் சமுதாயத்திற்கு எச்சரிக்கை செய்கிறது வேதம்! சமுதாயம், குடும்பம் என்றாலே பிரவ்ருத்தி மார்க்கத்தில் இருப்பதாகத்தான் பொருள்! இல்லறத்தானுடைய தர்மங்கள் என்னவென்றால்…. ஸ்வதர்மத்தை கடைபிடிக்க வேண்டும். எந்த ஒரு கண நேரத்தையும் வீணடிக்கக் கூடாது. நிரந்தரம் செயல்களைச் செய்து வரவேண்டும். கர்ம சீலராக விளங்க வேண்டும். அதுவும் தர்மத்துக்கு கட்டுப்பட்டு செயல்களில் ஈடுபட வேண்டும். அதன்மூலம் உலகிற்குப் பயன்பட வேண்டும். அவ்வாறு தர்மத்தோடு சம்பாதித்த செல்வத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அதனால் ஒவ்வொருவரும் அலுப்பு அறியாமல் தர்மத்துக்கு கட்டுப்பட்டு சிரமத்தை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறான செயல்கள் மூலம் இல்லறத்தான் செல்வம் மட்டுமின்றி புகழ் கூட பெற முடியும். செல்வத்தின் மீது ஆசையில்லாமல் சில செல்வந்தர்கள் தர்ம காரியங்கள் செய்து வருவார்கள். அதன் மூலம் அவர்களுக்கு ஒரு திருப்தி ஏற்படுகிறது. திருப்தி எதனால் ஏற்படுகிறது என்றால் இந்த தர்மச் செயல்கள் மூலம் சமுதாயத்தில் பலருக்கும் பயன்படும்படி செய்ய முடிகிறது என்ற எண்ணம் அவர்களுக்கு திருப்தியை அளிக்கிறது. அதுவும் சம்பாதனையே! தனம் மட்டும் செல்வமல்ல! நற்புகழ் கூட ஒரு செல்வமே! அது போன்ற உலக நலன் கருதிய செயல்களை சிறந்த செல்வந்தர்கள் செய்து வரலாம். ஏனென்றால் செல்வத்தை சம்பாதிப்பதற்காக மட்டுமே கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்று கூறினால் மிகவும் செல்வம் உள்ளவர்கள் உழைக்கத் தேவையில்லையே! அவர்கள் சும்மா உட்கார்ந்து பொழுது போக்க வேண்டுமா என்று கேட்டால்… செல்வந்தர்களும் சோம்பேறிகளாக உட்காரக் கூடாது.

“ஒவ்வொருவரும் தனம் சம்பாதிப்பதற்காக சிரமப்பட்டு உழைக்கிறார்கள். என்னிடம் மூதாதையர் சேர்த்து வைத்த செல்வம் இருக்கிறது. அதனால் நான் சோம்பேறியாக இருப்பேன்” என்றால்… சோம்பல் ஒரு நோய்! அப்படி இருக்கையில் செல்வந்தன் கூட பிரவ்ருத்தி மார்க்கத்தில் சமுதாயத்தில் வாழ்வதால் செல்வம் தேடுவதற்காக அல்லாமல் பிற நல்ல காரியங்களுக்காக உலகத்தில் உழைக்க வேண்டும். ஞானம் சம்பாதித்துக் கொள்ளலாம். நற்புகழ் பெறலாம். அதேபோல் முக்திக்கும் ஞானத்திற்கும் அவர்கள் செய்யக்கூடிய தர்மச் செயல்கள் நிறைய உள்ளன. மொத்தத்தில் மனிதன் எப்போதும் சோம்பித் திரியக் கூடாது என்பதை அறிய வேண்டும்.

அதேபோல் நிவ்ருத்தி மார்க்கத்தில் துறவு மேற்கொண்டவர்கள் லௌகீகமான செயல்கள், சாஸ்திர கர்மாக்கள் போன்றவற்றை விலக்கி விடுவார்களே தவிர அவர்களும் சோம்பேறியாக உட்கார்ந்திருக்க மாட்டார்கள். அவர்கள் செய்ய வேண்டிய செயல்களான தியானம், யோகம், ஞான விசாரணை போன்றவற்றில் ஈடுபட்டிருப்பார்கள். மிதமான உணவு ஏற்பார்கள். தவத்தில் ஈடுபடுவார்கள். அவர்களுக்கு இது போன்ற துறவு தர்மங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

இல்லறத்தானுக்குரிய தர்மங்களும் கூறப்பட்டுள்ளன. மொத்தத்தில் யாராக இருந்தாலும் சரி. சோம்பேறித்தனமாக இருக்கக் கூடாது. இது பாரதீய கலாச்சாரம் விடுக்கும் எச்சரிக்கை! அதிலும் இல்லறத்தான் அர்த்தம் காமம் இவற்றை சம்பாதிக்காமல் வழுவினால் அது நன்மை பயக்காது. தர்மம் அர்த்தம் காமம் இவற்றை சம்பாதித்து இல்லறமாகிய கிருஹஸ்தாஸ்ரமத்தில் ஆற்றவேண்டிய கடமைகளைச் செய்தபடி…. ஒருவேளை வயதான பின்…. வைராக்கியம் ஏற்பட்டால்… அப்போது பலனை எதிர்பார்த்து செய்யும் செயல்களைத் தியாகம் செய்து, நிஷ்காமமாக ஈசுவரார்ப்பண புத்தியோடு செயல்களைச் செய்ய வேண்டுமே தவிர, செயலாற்றுவதிலிருந்து விலகி ஓடக் கூடாது. அப்போது, “நான் செய்கிறேன்!” என்ற கர்வத்தை விட்டுவிடவேண்டும். பலன் மீது ஆசை இன்றி கடமையைச் செய்ய வேண்டும். இவ்விரண்டையும் செய்வதன் மூலம் அந்த செயல் ஒரு வேதாந்த சாதனை போல… ஞான சாதனை போல விளங்கி அவனுக்கு முக்தி கிடைக்கக் காரணமாகிறது. இதனை அறிய வேண்டும்.

இதனைக்கொண்டு தர்மத்திற்கு இரண்டு வித விளக்கங்களை நாம் அறிந்து கொள்ள முடியும். ஞானமும் வைராக்கியமும் அளித்து மோக்ஷத்திற்கு உதவும் தர்மம் ஒரு புறம். சமுதாய அமைதிக்குப் பயன்படும் தர்மம் மறுபுறம்.

சமுதாய அமைதி என்று கூறும் போது அரசாட்சி செய்பவர் ஆற்ற வேண்டிய தர்மம், ஒரு உத்தியோகி செய்ய வேண்டிய தர்மம், ஒரு உழைப்பாளி செய்ய வேண்டிய தர்மம், ஒரு பெண் செய்ய வேண்டிய தர்மம், ஒரு ஆண் செய்ய வேண்டிய தர்மம்…. இவை அனைத்தும் கூட சமுதாய நலனுக்கும் அமைதிக்கும் பயன்படும். ஒரு ஆணோ பெண்ணோ தர்மத்தின் எல்லைக்குள் இருந்து தம் கடமையை ஆற்றினால் அதன்மூலம் சமுதாயத்திற்கு நலன் விளைகிறது. அதே போல் ஒரு வைத்தியரோ, அரசாளுபவரோ, வேறொரு உத்தியோகியோ அவரவர் தர்மத்தை சரியாக நியாயத்தோடு கடமையாக ஆற்றினால் சமுதாயத்திற்கு நலன் விளையும். இது கூட மோட்சத்திற்கு பிரத்தியட்சமாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக உதவுகிறது. சமுதாயத்தின் அமைதிக்காக செய்யும் தர்மச் செயல்கள் கூட மிகவும் அவசியமானவையே!

இன்னும் ஞான வைராக்கியங்களுக்குப் பயன்படும் தர்மங்கள் என்ன என்றால்…. சத்தியம், அகிம்சை, விரத நியமங்களைக் கடைபிடிப்பது, ஈஸ்வர பக்தி, ஜபம், ஞான விசாரணை, யோகம்… இவை அனைத்தும் கூட ஞான வைராக்கியத்திற்கு உதவுபவை.

இவை இரண்டு வித தர்மங்கள். ஒன்று நாம் எந்த சமுதாயத்தில் வாழ்கிறோமோ அந்த சமுதாயத்திற்கு சாந்தி, உபகாரம் ஏற்படும்படி நடந்துகொள்ளும் தர்மம். ஞான வைராக்கியத்திற்காக நாம் தனிப்பட்டு சிறிது சிறிதாக பரமார்த்தம் பெறுவதற்காகச் செய்ய வேண்டிய தர்மம் இன்னொன்று. ஏனென்றால் எப்போதும் உலகம், சமுதாயம்… இவை மட்டுமே அல்ல! ஆத்மாவை அறிதல் கூட மிகவும் இன்றியமையாதது.

ஏனென்றால் கட்டக்கடைசியில் சமுதாயம் நமக்கும் இருக்காது. நாமும் சமுதாயத்திற்கு இருக்க மாட்டோம். நாம் நாமாகவே போகவேண்டி வரும். போகும் இடம் எது? அப்போது அடையும் நிலை என்ன? அந்த இறுதியான அமைதி எது? அந்த மோக்ஷம் எது? இவற்றை அறிவதற்காக செய்ய வேண்டியவை உள்ளன. அவற்றையே ஞான வைராக்கியத்திற்காகச் செய்யும் தர்மச் செயல்கள் என்பார்கள்.

இந்த தர்மங்களை கடைப்பிடிக்க வேண்டியது ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும் கூட! அதனால் சோம்பலை விட்டுவிட்டு தர்ம செயல்களைச் செய்ய வேண்டும் என்ற கடமை உணர்வை எடுத்துக் கூறுகிறது சனாதன தர்மம்! அப்படிப்பட்ட தர்மத்திற்கு வந்தனம்!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...