சந்திர கிரகணத்தை ஒட்டி கோயில் நடைகள் மூடல்: திருப்பதியில் சேவைகள் ரத்து

tirupathi-temple-golden-door திருப்பதி: சந்திர கிரகணம் இன்று மதியம் 3.45 மணி முதல் இரவு 7.15 வரை இருப்பதால், நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கோயில்களிலும் சந்நிதி நடைகள் மூடப் படுகின்றன. இன்று திருப்பதி ஏழுமலையான் கோயில் நடைமூடப்பட்டது. சுமார் 11 மணி நேரம் வரை சாத்தப்படுவதை முன்னிட்டு கோவிலில் வழக்கமாக நடைபெறும் கட்டண சேவைகள் ரத்து செய்யப்பட்டது. ரூ. 300, ரூ. 50 தரிசன டிக்கெட் முன்பதிவு ரத்து செய்யப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயில், 6 மணி நேரம் முன்னதாகவே, அதாவது காலை 9 மணி முதலே மூடப்பட்டது. பின்னர் இரவு 8.30 மணிக்கு மேல் கோயில் நடை திறக்கப்பட்டு, நடை சுத்தம் செய்யப்பட்ட பின்னர் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். திருப்பதி கோவிலில் தற்போது வசந்த உற்ஸவம் நடைபெற்று வருகிறது. கடைசி நாளான இன்று சந்திர கிரணகத்தால் வசந்த உற்ஸவம் அதிகாலை 5 மணிக்கே தொடங்கப்பட்டது. சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர், ருக்மணி, சத்தியபாமா, ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி ஆகியோர் மூன்று வாகனங்களில் கோவிலில் இருந்து புறப்பட்டு நான்குமாட வீதிகளில் ஊர்வலமாக வந்து வசந்த மண்டபத்தை அடைந்தனர். உற்ஸவ மூர்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனம் முடிந்த பின்னர் சந்நிதியில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து காலை 9 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும்.