“புளி மாதுளை” சொன்னவர்;ஸ்வாமிநாத ஆத்ரேயன்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன
(கட்டுரையில் ஒரு பகுதி)
பெரியவர்களுக்குப் பின்னால் கையைக் கட்டிக்கொண்டு
நிற்கும் தொண்டர் வேதபுரியை யாரோ அழைக்கிறார்கள்.
வேதபுரி முதலில் இதைக் கவனிக்கவில்லை.பெரியவர்கள்
முன்னிலையில் நிற்கும் ஒருவர் கைநீட்டி வேதபுரியின்
கவனத்தை ஈர்க்க விழைகிறார்.
அதற்குள் வயதான ஒரு தம்பதி வந்து- இரண்டு
தேங்காய்களையும்,ஆய்ந்த வில்வங்கள் நிறைந்த
குடலையையும் (அவர்களால் இயன்ற உயர்ந்தபட்ச
சமர்ப்பணம்.!) வைத்து வந்தனம் செய்கிறார்கள்.
“பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயமாயிடுத்தா.?”
என்று கேட்கிறார்கள், பெரியவர்கள்.
“பெரியவர்கள் அனுக்ரஹத்தினால், நான் எதிர்பார்த்தபடி
வேதாத்யயனம் பண்ணின ஒரு பையன் கிடைச்சுட்டான்.
நல்ல பரம்பரை, ‘மேலே சாஸ்திரம் வாசிக்கணும். பிறகு
கல்யாணம் பண்ணிக்கிறேன்’ என்றான். அவன் தகப்பனார்
தான் என் ஸ்திதியை ஆலோசிச்சு முடிவு செய்துவிட்டார்.
மேலே படிக்கலாம்னு சொன்ன பிறகு தான் பையன்
சம்மதிச்சான். எல்லாம் பெரியவர்கள் அனுக்ரஹம்.”
மறுபடியும் வேதபுரிக்கு ஜாடை செய்கிறார் முன்னால்
நிற்பவர். அப்போது தான் வேதபுரி நிமிர்ந்து பார்க்கிறார்.
தன்னை யாரோ அழைப்பது புரிகிறது. நிற்பவர்கள்
பின்னாலேயே வலம்வந்து வாசற்படி அருகில் போகிறார்.
“அவனைக் கூப்பிடு” என்கிறார்கள் பெரியவர்கள்.
வேதபுரி திரும்பி வருகிறார். “கூடத்து முற்றத்திலே ஒரு
அம்மாள் நிற்கிறாள். அவளை அழைச்சுண்டு வா.!”
வேதபுரி போகிறார். முற்றத்தில் நிற்கும் அம்மாள்,
“வேதபுரி.! உன்னைத்தான் ரொம்ப நாழியாக எதிர்பார்த்துண்டு
இருக்கேன். இந்தா.! புளிமாதுளை கொண்டு வந்திருக்கேன்.
அதைப் பெரியவர்களுக்கு எப்படி உபயோகப்படுமோ,
அப்படிச் செய்துபோடு” என்கிறார்.
“பெரியவா உங்களைக் கூப்பிடறா”என்றார்,வேதபுரி.
“யாரெல்லாமோ நிற்கிறாளே.! பெரியவா வெளியே
வரச்சே தரிசனம் பண்ணி வந்தனம் பண்ணிக்கிறேனே.!”
“இல்லை, உங்களை அழைச்சுண்டு வரச்சொல்றா.!
நீங்களே பழங்களைக்கொண்டு வாங்கோ.”
பாட்டி மாட்டுக் கொட்டகையில் நுழைகிறாள்.
பெரியவர்கள், தன் எதிரில் நிற்பவர்களைக்
கைஜாடை காட்டி ஒதுக்கிவிடுகிறார்கள்.
அந்தப் பாட்டி கூனிக்குறுகி தூரத்திலேயே
பழங்களை வைத்து வந்தனம் செய்கிறாள்.
அவள் சொல்கிறாள்.
அவளுடைய கணவர், மாமனார்,குமாரர்களைப்
பற்றியும் அவர்களுடைய பக்தி சிரத்தைகளைப்
பற்றியும் பெரியவாள் சொல்கிறார்கள்.
“எனக்கு எதுக்கோ, ஒருகாலத்திலே, புளி மாதுளை
தேவைப்பட்டது. அது உடனே கிடைக்கல்லே.எங்கோ
வெகு தூரத்திலேர்ந்து யாரோ கொண்டு வந்து கொடுத்தா.
அதைப் பார்த்துவிட்டு இந்த அம்மாளின் புருஷர்,
எங்கிருந்தோ பதியன் கொண்டு வந்தார்.கொல்லையிலே
வைத்தால் எச்சிற்பட்டு விடும்னு தன் வீட்டுக் கூடத்து
முற்றத்திலே அதை வச்சு வளர்த்தார்.அது காய்க்கக்
காய்க்க-நான் எங்கே போனாலும் அங்கெல்லாம்
கொண்டு வந்து கொடுப்பார். அவ்வளவு சிரத்தை!
அந்தக் கைங்கரியத்தை அவரோடு விட்டுவிடாமல்
இந்த அம்மாளும் கொண்டிருக்கா.”
“நீ பார்த்திருக்கிறாயோ, புளி மாது ளை?”
“இல்லை”
“இது மாதுளையிலே ஒரு விதம். பழுக்கிறது-முத்து விடுகிறது என்றெல்லாம் பார்க்கிறதில்லை
வயிற்றிலே புண் இருந்தால் இதை ஒரு தினுசாப் பக்குவம்
பண்ணிச் சாப்பிடறதுண்டு. ருசிக்காக இதைச் சாப்பிடறதில்லை,
பேரே புளிமாதுளை!” என்று கூறிச் சிரிக்கிறார்கள்.
ஈசுவர சிருஷ்டியிலே பலவிதம். மலிவாகக் கிடைத்தால்
அதற்கு அருமை பெருமை கிடையாது. அபூர்வமாகக்
கிடைத்தால் அதுக்குப் பெருமை அதிகம். பழசாப் போன,
நாலு தலைமுறைக்கு முந்திய பித்தளை ஜாடி-பாசி புடிச்சுப்
போச்சு. எத்தனை தேய்த்தாலும் அந்தப் பாசி போகல்லே.
அவ்வளவு பழசு! அதுக்கு ஆயிரக்கணக்காகப் பணத்தை
கொடுத்து வாங்கறா! ‘நினைவுச் சின்னமாம்!’
குபேரன் ஐசுவர்யம் வேறே, அது அளவிலே ஜாஸ்தி.
இந்திரன் ஐசுவர்யம் வேறே அது மதிப்பிலே ஜாஸ்தி.
அந்த மாதிரி புளிமாதுளை அபூர்வமான வஸ்து.
அபூர்வமான புளி மாதுளை கொண்டு வந்த பாட்டி.
கல்யாணம் நிச்சயம் செய்து கொண்டு வந்த தம்பதி
இருவர்களும் அந்தக் கருணை வெள்ளத்தில்
திளைக்கிறார்கள்