சென்னை: கோயில்களில் படப்பிடிப்பு கூடாது, கோயில் வரவு செலவு ஆண்டறிக்கை வெளியிட வேண்டும், சொத்துப் பட்டியலை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசிடம் இந்து முன்னணி முன்வைத்துள்ளது. தமிழக அரசிடம் பக்தர்களின் எதிர்பார்ப்பாக அந்த அமைப்பின் சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழக முதல்வர் அவர்கள் இந்தாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் 206 கோயில்களில் அன்னதானத் திட்டம் விரிவுப்படுத்த உள்ளதாகவும், 250 கோயில்கள் புனர்நிர்மாணம் செய்ய 90 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் அறிவித்துள்ளார். மக்கள் தமிழக அரசிடம் எதிர்பார்க்கும் விஷயம்..
- அரசின் பிடியில் உள்ள எல்லா கோயில்களிலும் உள்ள அசையும், அசையாச் சொத்துக்கள் பற்றிய முழுமையான பட்டியல் வெளியிடப்பட வேண்டும். அதனை ஒவ்வொரு ஆண்டும் தணிக்கைக்குழுவால் மக்கள் பிரதிநிதிகள் முன்பு சரிபார்க்கப்பட வேண்டும். ஆலய சொத்துக்களில் குத்தகை, வாடகை பாக்கி வைத்துள்ளோர் பட்டியல் முழுமையாக வெளியிடப்பட்டு, உடனடியாக வசூலிக்கப்பட வேண்டும். நீண்டநாட்களாக வாடகையோ, குத்தகையோ செலுத்தாதவர்களை உடனடியாக வெளியேற்றவும், அவர்கள் சொத்துக்களை ஜப்தி செய்யும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும்.
கோயில் வருமானம், செலவினங்கள் குறித்த விரிவான, தனியான ஆண்டறிக்கை வெளியிடப்பட வேண்டும்.
அன்னதானத் திட்டத்தை அறிவிக்கும் முதல்வர் அத்தனை கோயில்களுக்கும் அரசின் மூலம் அன்னதானத்திற்கு வேண்டிய அரிசியையாவது வழங்க வேண்டும். ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு ெநாய் அரிசியை அளிக்க மட்டுமே அரசின் கஜானா வாய் திறக்கும் என்றால், ஆலய அன்னதானம் திட்டம் பற்றி முதல்வர் அறிவிப்பது தேவையற்றது.
கோயில் நிலங்கள், கட்டிடங்கள் அரசின் வேறு துறைகளுக்கு, அல்லது தனியார்க்கு இலவசமாகத் தாரை வார்க்கப்பட்டிருப்பது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
ஆலயங்கள் என்பது இறைவன் எழுந்தருளியிருக்கும் புனித இடம். அதே சமயம் நமது இந்து ஆலயங்கள் வரலாற்றுப் பெட்டகங்கள். இங்குள்ள கல்வெட்டுகள், புராதான சின்னங்கள், கட்டிடக்கலை முதலானவை பாதுகாத்து, பராமரிப்பது, பரப்புவதன் மூலம் நமது தொன்மை, பண்பாட்டு வளமை, மற்றும் நமது வரலாறு வருங்கால சமுதாயம் அறிந்து பெருமிதம் அடையவும், சுற்றுலா மேம்படவும் ஏதுவாகும். இதனைக் காக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. புதுப்பிக்கிறோம் என கோயில் கல்வெட்டுகள் சுண்ணாம்பால் மூடப்பட்டு வருவது கவலை அளிக்கிறது. இதனைப் பாதுகாக்க, பதிப்பிக்க இது குறித்த முழுமையான ஞானம் கொண்ட நிபுணர் குழு நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இறைவன் முன் அனைவரும் சமம். எதனாலும் பக்தர்களை பாகுபாடுபடுத்தாமல் இறைவனை தரிசிக்க அறநிலையத்துறை எல்லாவித தரிசனக் கட்டணங்களையும் நீக்க வேண்டும்.
ஆலய வருமானத்தினைக்கொண்டு நிர்வகிக்கப்பட்டு வரும் கல்வி நிலையங்களில் இந்துக்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்.
ஆலயங்களின் புனிதம் கெடுக்கும் வண்ணம் திரைப்பட, சின்னத்திரை காட்சிகள் எடுப்பதை முழுமையாக தடுக்க வேண்டும்.
மாணவர்களிடையே பண்பு வளர, ஒவ்வொரு ஆலயத்திலும் வார இறுதி நாட்களில் பண்பாட்டு வகுப்பு நடத்த வேண்டும். இந்த கோடை விடுமுறையில் சிறப்புப் பயிற்சி அளிக்கவும் நிர்வாகம் உத்திரவிட வேண்டும்.
ஆலய சுகாதாரம், சுத்தம் பேண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
படிப்படியாக ஆலய நிர்வாகத்திலிருந்து அரசு வெளியேற பொதுமக்கள், ஆன்மிக பெரியோர்கள், இந்து இயக்கத்தினர் அடங்கிய பொதுக்குழுவிடம் நிர்வாகத்தை ஒப்படைக்க முன் வர வேண்டும்.
இவற்றையெல்லாம் இந்த ஆண்டின் நிதிநிலை மீதான அறநிலையத்துறையின் மான்ய கோரிக்கையின் போது இந்து அறநிலையத்துறை அமைச்சர் அறிவிக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கை. மேற்கண்ட கோரிக்கைகளை தொடர்ந்து அரசிடம் இந்து முன்னணி வலியுறுத்தி வருகிறது.