ஆலயங்களில் சிவராத்திரி பூஜை கோலாகலம்; குவிந்த பக்தர்கள்!

ஆறு கால பூஜையுடன் இன்று இரவு அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை இன்று சிவராத்திரி மகோத்ஸவம் நாடெங்கிலும் உள்ள சிவாலயங்களில் நடைபெற்று வருகிறது. ஆறு கால பூஜையுடன் இன்று இரவு அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

சிவராத்திரி என்ற பெயர் வர காரணம் அம்பாள் தான். பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள்.

நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே, அதாவது “சிவராத்திரி” என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.

சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, தங்களை(சிவனை)ப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்.

சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே “சிவராத்திரி” என வழங்கப்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.