சிருங்கேரி சங்கராச்சாரியார் அருளுரை
தெய்வத்திடம் என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும்?
எதை கேட்க வேண்டும்?
ஆதி சங்கரர் நமக்கு வழி காட்டுகிறார்.
பொதுவாக, நாம் பக்தியோடு எதை கேட்டாலும், பகவான் நமக்கு கேட்டதை தருவார். கேட்பதில் உயர்ந்த விஷயங்கள், மிக சாதாரண விஷயங்கள் உண்டு. பிரார்த்தனை செய்தேன், நோய் சரியாகி விட்டது பிரார்த்தனை செய்தேன், செல்வம் கிடைத்து விட்டது, வேலை கிடைத்தது என சந்தோஷப்படுவது எல்லாம், கோடீஸ்வரனிடம் 10 ரூபாய் வாங்கி சந்தோஷப்படுவது போல. ஆதி சங்கரர் ‘இதையெல்லாம் பகவானிடம் கேட்காதே’என்று சொல்லி, நீ கேட்க வேண்டியது சில உள்ளது, “உன் முயற்சியால் கூட அடைய முடியாததை பகவானிடம் கேள்” என சொல்லிக் கொடுக்கிறார். நம் புராதன வேதம்—“நாம் தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்” என்று சொல்கிறது. ஆதி சங்கரர் விளக்குகிறார்.
கர்வம்
தெய்வத்திடம் முதலில் கேட்க வேண்டியது, பகவானே, முதலில் ‘நான் செய்கிறேன்’ என்ற என் கர்வத்தை (அஹங்காரம்) என் இடமிருந்து விலக்கி விடுங்கள்
என்று கேட்கவேண்டும். நமக்கு முக்கிய தேவை – விநயம் (அடக்கம்). இந்த விநயம் நமக்கு வராமல் இருப்பதற்கு காரணம், நம்மிடம் “நான் செய்கிறேன்” என இருக்கும் கர்வமே. அனைத்தையும் படைத்த பகவானிடம், போய் “என் கஷ்டம், என் துக்கம், என் வேலை” என்று நான், என்னுடைய என சொல்வதே நம் கர்வத்தை காட்டுவதாகும். எல்லாம் தெரிந்தவருக்கு உன் துக்கம், நோய் தெரியாதா? நீ சொல்லித்தான் அவருக்கு தெரியுமா?
ஆசை
செய்யவேண்டிய இரண்டாவது பிரார்த்தனை, ‘பகவானே! என் மனதில் இன்றுவரை நிறைய ஆசைகள் வந்து இருக்கிறது. அந்த ஆசைகளை வராமல் செய்து விடு என்பது தான் என்கிறார். முடிவே இல்லாத ஆசைகள், திருப்தி இல்லாதவனுக்கு வந்து கொண்டே இருக்கும். திருப்தி இல்லாததால் துக்கம் உண்டாகும். கர்வத்தை நம்மால் அழிக்க முடியாதது போல, மனத்தில் வந்து கொண்டே இருக்கும் இந்த ஆசையையும் நம் திறமையால் அழிக்கவே முடியாது. பகவான் அனுகிரஹத்தால் மட்டுமே கர்வத்தை, நம்மிடம் உருவாகும் ஆசையை அழிக்க முடியும்.
திருப்தி
நாம் செய்யவேண்டிய மூன்றாவது பிரார்த்தனை, “பகவானே! எனக்கு என்று எது உள்ளதோ, அதைப் பார்த்து நான் திருப்தி அடையும் குணத்தை கொடு” என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர். #பகவத்கீதையில், இந்த திருப்தியை பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் “யதுர்சா லாப சன்துஷ்ட: த்வந் த்வா தீதோ விமத் சர: !
சம: சித்தாவ சித்தௌ ச க்ருத் வா பி ந நிபத் யதே !!'”
(4 chapter, 22 sloka) என்று சொல்லும் போது, “நானாக போய் யாரிடமும் கையேந்த மாட்டேன். எனக்கு என்று எது கிடைக்கிறதோ அதை நான் கொண்டு சந்தோஷப்படுவேன் என்கிற திருப்தியில் எவன் இருக்கிறானோ, அவனை சுகம்-துக்கம், வெற்றி – தோல்வி என்ற எந்த இரட்டை நிலை அனுபவமும் மனதளவில் பாதிக்காது”என்கிறார். தெய்வ அனுக்கிரகத்தால் மட்டும் மனதில் த்ருப்தி ஏற்படும். பகவான் அனுக்கிரகத்தால் மட்டுமே, கர்வத்தையும், ஆசையையும் அழித்து, திருப்தி என்கிற பண்பை கொடுக்க முடியும்.
இரக்கம்
நாம் செய்யவேண்டிய நான்காவது பிரார்த்தனை, பகவானே! எனக்கு யாரை பார்த்தாலும் மனதில் இரக்க சிந்தனை உருவாகும் படி செய்யுங்கள் என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.
நம்மால் கொண்டு வர முடியாத குணம் இரக்கம். இரக்க குணம் உள்ளவனுக்கு,
மற்றவர்கள் தவறுகள் தெரிந்தாலும், அவன் தெரியாமல் செய்கிறான் என்று அவன் மீதும் இரக்கம் வரும். இரக்க குணம் உள்ளவனுக்கு எதை பார்த்தாலும், யாரிடத்திலும் கோபமே வராது. மற்ற மூன்றை போல இரக்கம் காத்தும் குணம் நம் முயற்சியால் வரவே வராது. பகவான் அனுக்கிரகத்தால் மட்டுமே, இரக்கம் என்ற குணம் நமக்கு வரும்.
மோக்ஷம்
ஐந்தாவது பிரார்த்தனை, ‘பகவானே! பல யுகங்களாக நானும் இந்த ஸம்ஸார ஸாகரத்தில் மூழ்கி எழுந்து கொண்டு இருக்கிறேன். எவ்வளவு தடவை இப்படியே இருந்து கொண்டிருப்பது? என்னை இந்த ஸம்ஸார ஸாகரத்தில் இருந்து தாண்ட வைத்து விடு. மோக்ஷத்தை கொடு’ என்பது தான் என்கிறார் ஆதி சங்கரர்.
ஆதி சங்கரர், பஜ கோவிந்தம் பாடும் போது “புனரபி ஜனனம், புனரபி மரணம்,
புனரபி ஜனனீ ஜடரே சயனம் I
இஹ ஸம்ஸாரே பகுதுஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே !!”
என்று பாடுகிறார். இதற்கு அர்த்தம்,
“பிறப்பும் இறப்பும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து உண்டாகி கொண்டே இருக்கிறது. இந்த பிறப்பிலும் மீண்டும் தாயின் கருவறையில் பிறந்தாயிற்று. கடக்க முடியாத இந்த சக்கரத்தில் இருந்து, விடுவித்து, கடாக்ஷித்து அருளமாட்டாயா கோவிந்தா?” என்கிறார்.
நாம் பிறந்தாச்சு. கொஞ்சம் வருஷம் வாழ்ந்து தான் ஆக வேண்டும். பின்பு இறந்து தான் ஆக வேண்டும். செய்த பாவ, புண்ணிய பலன் படி, திரும்ப ஏதாவது ஒரு தாயார் வயிற்றில் பிறக்க தான் வேண்டும். ஆனால் இப்படியே எவ்வளவு நாள் ஸம்ஸார சாகரத்தில் சூழல்வது?ஸம்ஸார சக்கரத்தில் இருந்து, நம் முயற்சியால் முற்றுப்புள்ளி வைக்கவே முடியாது. தெய்வம், அனுக்கிரகம் செய்தால் மட்டுமே, மோக்ஷம் நமக்கு ஏற்படும்.
உன் முயற்சியால், பெற முடியாத இந்த 5 விஷயங்களையும், பகவானிடம் கேள் என்று ஆதி சங்கரர் நமக்கு சொல்லித் தருகிறார். பகவான் நம்மிடம் கருணை கொண்டு, அணுகிரஹித்து விட்டால், இதை விட பேறு ஒரு மனிதனுக்கு ஒன்று உண்டா? இதை விட்டு, மிகவும் அற்பமான எதை எதையோ கேட்டு உன் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்ளாதே!