- Ads -
Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் வைகுண்ட ஏகாதசி; தமிழ்மறை போற்ற ஓர் உத்ஸவம்!

வைகுண்ட ஏகாதசி; தமிழ்மறை போற்ற ஓர் உத்ஸவம்!

வைகுண்ட ஏகாதசி உற்ஸவம் என்றால் அது திருவரங்கன் கோயிலே! மார்கழி சுக்ல பட்ச ஏகாதசியிலிருந்து 10 நாட்கள் வேத மந்திரம் முழங்க பெருமாளை பூஜிக்க வேண்டும்.

வைகுண்ட ஏகாதசி உற்ஸவம் என்றால் அது திருவரங்கன் கோயிலே! மார்கழி சுக்ல பட்ச ஏகாதசியிலிருந்து 10 நாட்கள் வேத மந்திரம் முழங்க பெருமாளை பூஜிக்க வேண்டும். ஆகமக் கட்டளையான இதன்படி பெருமாளின் சந்நிதிகளில் நடத்தப்படும் விழாவை வைகுண்டோத்ஸவம், மோட்ச உற்ஸவம் என்கிறோம். அனைத்து வைணவ ஆலயங்களிலுமே அந்த தினத்தன்று வடக்குக் கோபுரம் வழியாக உற்ஸவரை எழுந்தருளச் செய்து வணங்குதல் பெரிய பாக்கியம் என்கிறது சாஸ்திரம்.

“வேதம் தமிழ் செய்த மாறன்’ எனப் போற்றப்படுபவர் நம்மாழ்வார். வேதபூர்வமாக நடந்து வந்த இந்தத் திருவிழா, நம்மாழ்வாருக்காக, தமிழ் வேதத்தின் செழுமையைப் பறைசாற்ற நம்பெருமாளின் உத்தரவுப்படி “திருவாய்மொழித் திருநாள்’ என்று

ஆனது.

சாதாரணமாக திருநாட்களின்போது, ஏழாம் திருநாளில் தாயார் சந்நிதி சென்று அங்குள்ள நவராத்ரி மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளி, தாயாருடன் மாலை மாற்றி பிறகு கருவறையை அடைவது அரங்கனின் வழக்கம். ஆனால் இந்தத் திருவாய்மொழித் திருநாளில் மட்டும் அரங்கன் தாயார் சந்நிதி பக்கமே செல்வதில்லை. திருமாமணி மண்டபத்தில் அரையர்களுடன் அரங்கனின் சேவைக்காகக் காத்திருக்கும் ஆழ்வாருக்காக இங்கே எழுந்தருள்வார். ஆழ்வார்களின் அருளிச் செயலில் அவ்வளவு ஈடுபாடு

அரங்கனுக்கு.

ALSO READ:  பாம்பன் பாலத்தை திறக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

இந்த நாட்களில், நம்மாழ்வாரின் பாசுரங்களைப் பாடிக் களிக்கும் பேறு பக்தர்க்கு வாய்க்கிறது. 10 நாள் நடக்கும் உற்ஸவம் இராப்பத்து என வழங்கப்படுகிறது.

இதே விதத்தில், மற்ற ஆழ்வார்களின் பாசுரங்களையும் பாடி மகிழ, ஸ்ரீமந் நாதமுனிகள் தோற்றுவித்ததே திருமொழித் திருநாளான பகல்பத்து என்ற 10 நாள் உற்ஸவம்.

நம்மாழ்வார், “சூழ்விசும் பணி முகில்’ என்ற பத்துப் பாசுரங்களில், தாமே விண்ணுலகு சென்று மீளும் அனுபவத்தைப் பாடினார்.

“”ஸ்ரீவைகுந்தம் செல்லும்போது, மேகம் நிறைந்தன. தூரியம் முழக்கின. ஆழ்கடல் அலை ததும்பி கையெடுத்துக் கும்பிட்டு வரவேற்றன. வானவர் தேவர் எதிர் நின்று வரவேற்றனர். மாதவன் அடியார் எனத் தெரிந்ததும் வானவர் “எம் இல்லத்தே தங்குங்கள், எங்கள் இருப்பிடம் வாருங்கள்’ என்று வற்புறுத்தி அழைத்தனர்” என்றெல்லாம் தாம் கண்ட காட்சியைக் கூறும் நம்மாழ்வார், ஸ்ரீவைகுந்த விரஜா நதியையும், கமுகும் மரங்களும் தோரணங்களும் கட்டப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டதையும், பெருமானின் இடத்தே கொண்டு சேர்க்கப்பட்டதையும் தம் அனுபவத்தால் பாடிவைத்தார். அதாவது, ஒரு ஜீவன் எப்படி பரமனின் திருவடி புகுகிறது என்பதை இவ்வாறு நம்மாழ்வார் தாம் ஞான திருஷ்டியால் கண்டதைப் பாடினார்.

ALSO READ:  சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் – 46: உத்யம ராகவந்யாய:

இதற்கு “அர்ச்சித்ராதி மார்க்கம்’ என்று பெயர் வைத்தார். இந்த மார்க்கத்தில், ஒரு ஜீவன் மண்ணுலகு விட்டு விண்ணுலகு செல்லும் அனுபவத்தைக் கூறுகிறார் நம்மாழ்வார்.

இந்த அனுபவத்தை உலகத்தார் எல்லோரும் தெரிந்துகொள்ள அதனை நம்பெருமாளை முன்னிட்டு நடத்திக்காட்ட வேண்டினார் திருமங்கையாழ்வார். அவரது வேண்டுகோளை ஏற்ற அரங்கன், அதனைத் தாமே நடத்திக் காட்ட முன்வந்தார்.

ஒரு ஜீவன் பகவானை அவனது அருளால் அடைவது முக்தி என்ற மோட்சம். இதை அடைவதற்கான வழி அர்ச்சித்ராதி வழி. பிறவாப் பெருநிலை. மீண்டும் பிறவி எடுக்கும் நிலையை தூமாதிகதி என்பர்.

மோட்சம் செல்லும் வழியில் முதலில் “விரஜா நதி’ என்னும் புண்ணிய நதி ஓடுகின்றது. இதில் ஒரு ஜீவன் முங்கி திருக்குளியல் செய்து பின்பே மோட்சம் அடைகிறது.

திருவரங்கம் கோயிலில், வைகுண்ட ஏகாதசியன்று நம்பெருமாள் போர்வை சாற்றிக் கொண்டு கருவறையில் இருந்து வெளியே வருகிறார். கோயிலில் மூன்றாவது பிராகாரமான துரை பிரதட்சிணம் என்பதே பிரக்ருதி மண்டலமான பூமி. பரமபத வாசலுக்கு உட்புறம் உள்ள நாலுகால் மண்டபம் விரஜா நதி மண்டபம். இது விரஜா நதிக்கு ஒப்பாகும். இங்கேதான் பெருமாள் வேத விண்ணப்பங்களைக் கேட்கிறார்.

ALSO READ:  உலக சாம்பியன் தொம்மராஜு குகேஷ்

இந்த வேத விண்ணப்பமானது வைகுண்டத்தில் வாசம் செய்யும் நித்ய சூரிகளின் வரவேற்புக்கு ஒப்பாகும். இதைத் தாண்டியவுடன், வடக்கே உள்ள பரமபத வாசலுக்கு முன்னர் நம்பெருமாள் போர்வைû யக் களைந்து, திருமாலையைச் சாற்றிக் கொள்கிறார். இது, ஒரு ஜீவன் திவ்ய சரீரத்தை அடைவதற்கு ஒப்பானது.

பரமபத வாசலைக் கடந்து, நம்பெருமாள் வேகமாக ஆயிரங்கால் மண்டபமான திருமாமணி மண்டபத்தை அடைகிறார். இது, பரமபதத்துக்கு ஒப்பானது.

பக்தன் ஒருவன் பரமபதத்தை அடைவதை, தானே முக்தி அளிக்கும் முக்தனாக இருந்து அரங்கன் காட்டும் அற்புத உற்ஸவம் இது. இந்த உற்ஸவத்தை தரிசிக்கும் பக்தர்க்கு இந்த பாக்கியம் கைகூட பிரார்த்திப்போம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version