
செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள் சமேத ஸ்ரீ குலசேகரநாத சுவாமி, கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலில் ஒவ்வோர் ஆண்டும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில். இந்த ஆண்டுக்கான தைத் திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் இன்று கோலாகலமாக துவங்கியது. முன்னதாக காலையில் சுவாமி, அம்பாள் மற்றும் விநாயகர், முருகப் பெருமான் ஆகியோருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.
அதன் பின்பு சிறிய கோரதம் தேரில் விநாயகரும் முருகப்பெருமானும், அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட இரண்டு பெரிய தேரில் குலசேகரநாத சுவாமியும்- தர்மசம்வர்த்தினி அம்பாளும் எழுந்தருளினர். பின்னர் சிறப்பு தீபாராதனையுடன் தேரோட்டம் தொடங்கியது.
இந்த விழாவில் அதிமுக., தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், கடையநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ண முரளி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
விழாவில் செங்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். முக்கிய 4 ரத வீதிகள் வழியாகச் சென்று தேர் நிலையை வந்தடைந்தது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படி!
செங்கோட்டை அறம்வளா்த்த நாயகி உடனுறை குலசேகரநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். இந்தாண்டு தைப்பூச திருவிழா கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், நாள்தோறும் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படிதாரா்கள் சார்பில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு இரவில் அலங்கரிக்கப்ட்ட சப்பரத்தில் சுவாமி, அம்பாள் திருவீதி உலா நடைபெற்றது. இந்த விழாவின் சிறப்பம்சமான தேரோட்டம் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.
காலை கோயிலில் இருந்து சுவாமி, அம்பாள், விநாயகர், முருகர் உலாத் திருமேனிகள் எழுந்தருளச் செய்யப்பட்டனர். தெய்வத் திருமேனிகள் ஆலயத்தில் இருந்து தேரில் எழுந்தருளச் செய்யப்பட, செங்கோட்டை சிருங்கேரி ஸ்ரீ பாரதீ தீர்த்த வேதபாடசாலை மாணாக்கர்கள் பெரிதும் உதவினர்.
பின்னர் காலை 9 மணிக்கு மேல் தேர் நிலையில் இருந்து புறப்பட்டு, பிற்பகல் 11.30 மணி அளவில் நிலையை அடைந்தது. சுவாமி, அம்பாள், விநாயக முருகர் தேர்களை ஏராளமான பக்தர்கள் வந்திருந்து, ஆர்வத்துடனும் பக்தியுடனும் வடம் பிடித்து இழுத்தனர்.