திருப்பதி: டிசம்பர் 18,19 வைகுண்ட ஏகாதசி, துவாதசியை முன்னிட்டு திருப்பதி மலையில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் கூறினர்.

ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 18 ம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

அடுத்த மாதம் 18 ஆம் தேதி வைணவ சம்பிரதாயத்தைக் கடைபிடிக்கும் பக்தர்களுக்கு முக்கிய திருநாளான வைகுண்ட ஏகாதசி திருநாள் வருகிறது. வைகுண்ட ஏகாதசி நாளன்று திருப்பதி ஏழுமலையானை தரிசித்து கோவிலில் உள்ள சொர்க்கவாசல் பிரவேசம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி மலைக்கு வருகின்றனர்.

இந்த ஆண்டும் அதே போல் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று தேவஸ்தான நிர்வாகம் எதிர்பார்க்கிறது. எனவே வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருப்பதி மலையிலுள்ள அன்னமய்யா பவன் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இணை நிர்வாக அதிகாரி சீனிவாசராஜு தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தேவஸ்தானத்தில் உள்ள பல்வேறு துறைகளில் தலைமை அதிகாரிகள், விஜிலென்ஸ் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீனிவாசராஜு, டிசம்பர் மாதம் 18ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி புண்ணிய தினத்தில் அன்று அதிகாலை 12.30க்கு ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படும். வைகுண்ட ஏகாதசி தினமான டிசம்பர் 18, துவாதசி தினமான டிசம்பர் 19 ஆகிய இரண்டு நாட்களும் ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருக்கும்.

18ஆம் தேதி அதிகாலை 1.30 மணி முதல் மிக முக்கிய மற்றும் முக்கிய பிரமுகர்கள் கோவிலுக்குள் சென்று ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். அன்றைய தினம் காலை 4 மணி முதல் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

பக்தர்களின் வசதிக்காக டிசம்பர் 18, 19 ஆகிய இரண்டு நாட்களும் திருப்பதி மலைப்பாதையில் 24 மணி நேரமும் வாகனங்கள் அனுமதிக்கப்படும். வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்காக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் 17ஆம் தேதி காலை 10 மணி முதல் திருப்பதி மலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்களில் சென்று அமர்ந்து காத்திருக்க அனுமதி அளிக்கப்படும். வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்கள் நிறைந்த பின் மற்ற பக்தர்களை திருப்பதி மலையில் உள்ள நாராயணகிரி பூந்தோட்டம், மாட வீதிகள் ஆகியவற்றில் அமைக்கப்படும் தற்காலிக ஷெட்டுகளில் தங்க வைக்கப்படுவார்கள்.

வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்காக திருப்பதி மலைக்கு வரும் மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், உயர் அதிகாரிகள் ஆகியோர் தங்களுக்கான தரிசன அனுமதி சீட்டுகள், தங்கும் அறைகள் ஆகியவற்றை பத்மாவதி கெஸ்ட் ஹவுஸ் பகுதியில் ஏற்பாடு செய்யப்படும் சிறப்பு கவுண்டர்களில் நேரடியாகப் பெற்று கொள்ள வேண்டும்.

முக்கிய பிரமுகர்களில் அமைச்சர்கள் தவிர வேறு யாருக்கும் இரண்டு அறைகள் ஒதுக்கப்பட மாட்டாது. அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்காக அதிக பட்சம் ஆறு டிக்கெட்டுகளும், மற்ற முக்கிய பிரமுகர்களுக்கு அதிகபட்சம் 4 டிக்கெட்டுகளும் மட்டுமே வழங்கப்படும்.

வைகுண்ட ஏகாதசி, துவாதசி ஆகியவற்றை முன்னிட்டு அடுத்த மாதம் 17ஆம் தேதி முதல் இருபதாம் தேதி வரை மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் ஆகியோருக்கான முன்னுரிமை தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஸ்வாமி தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்கள், வரிசைகள் ஆகியவற்றில் காத்திருக்கும் பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை தேவைகளும் தங்கு தடை இன்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன… என்று கூறினார்.

தேவஸ்தான விஜிலென்ஸ் துறையின் தலைமை அதிகாரி கோபிநாத் ஜெட்டி மற்றும் தேவஸ்தான உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...