வைக்கம் மகாதேவாஷ்டமி இன்று..!

கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவர் எனப்படும் வைக்கத்தப்பன் கோயில் உள்ளது. இங்கு நடைபெறும் விழாக்களில் குறிப்பிடத்தக்கது அஷ்டமி விழா.

மலையாள விருச்சிக மாதம் பெளர்ணமியை அடுத்துவரும் அஷ்டமி மகாதேவாஷ்டமி எனப்படுகிறது. வைக்கம் கோயிலில் இந்த விழா 12 நாள்கள் நடைபெறுகிறது. அஷ்டமியன்று உச்சிக்கால பூஜை முடிந்தபின் சுவாமி ஆனக்கொட்டில் எனப்படும் யானை வளர்க்கும் இடத்தில் எழுந்தருள்கிறார்.

அருகில் உள்ள கோயில்களில் இருந்தும் உற்ஸவர்கள் எழுந்தருள்கின்றனர். அனைத்து தெய்வங்களும் வைக்கத்தப்பன் பின்தொடர ஆனக்கொட்டிலில் காட்சிதருவார்கள். அதன் பின்னர் காணிக்கை செலுத்தும் வைபவம் நடைபெறுகிறது. இதற்காகவே பக்தர்கள் காத்திருந்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

பிற சிவாலயங்களுக்கு இல்லாத மற்றொரு சிறப்பு வைக்கம் கோயிலுக்கு உண்டு. இங்கு மட்டுமே சிவன் 3 வடிவங்களில் காட்சியளிக்கிறார். காலையில் தட்சிணாமூர்த்தியாகவும் பிற்பகலில் கிருதமூர்த்தியாகவும் மாலையில் பார்வதியுடன் சாம்பசிவனாகவும் அருள்பாலிக்கிறார்.

மகாதேவாஷ்டமி அன்று தமிழகத்தில் பல இடங்களில் அன்னதானம் நடைபெறும். சிவலிங்கத்தையோ அல்லது சிவபார்வதி படத்தையோ வைத்து ருத்ரம், சமகம், ஸூக்தங்கள் ஜபித்து சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்படும்.

தொடர்ந்து ஆயிரக்கணக்கானவர்களுக்கு  அன்னதானம் வழங்கப் படும். ஏறக்குறைய எல்லா ஊர்களிலும் இது நடக்கிறது. வைக்கம் அஷ்டமி விழா அன்னதானத்திற்கு பொருள் வழங்கினால் குடும்பம் சுபிட்சமாக இருக்கும் என்பது காலகாலமாக தொடரும் நம்பிக்கை. இந்த ஆண்டு வைக்கத்தஷ்டமி நவ.30 வெள்ளிக்கிழமை இன்று கொண்டாடப் படுகிறது.