கடலூர்: தைப்பூசத்தை முன்னிட்டு வடலூர் சத்திய ஞான சபையில் 148-வது ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

வடலூர் வள்ளலார் கோவிலில் 7 திரை நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெற்றது. 148 வது ஜோதி தரிசனத்தைக் காண பக்தர்கள் பலர் குவிந்திருந்தனர்.

கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞானசபையில் தை பூசத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தை பூச ஜோதி தரிசனம் இன்று நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தனர்.

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. இங்கு வருடா வருடம் தைப்பூசத் திரு விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு 148வது தை பூசத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.சத்திய ஞானசபையில் உள்ள கொடிக் கம்பத்தில் சன்மார்க்க சங்க கொடியேற்றப்பட்டது.

இதேபோல், வள்ளலார் பிறந்த மருதூரிலும் பிறகு கருங்குழி ஆகிய ஊர்களிலும் கொடியேற்றப்பட்டது. இன்று காலை 6 மணிக்கு சத்திய ஞானசபையில் முதல் ஜோதி தரிசனம் நடந்தது. 7 திரைகள் நீக்கி காண்பிக்கப்பட்ட இந்த தரிசனத்தை தொழில்துறை அமைச்சர் சம்பத், உட்பட பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தனர். இதனை த்தொடர்ந்து காலை 10 மணி, பகல் 1 மணி, மாலை 7 மணி, இரவு 10 மணி ஆகிய நேரங்களில் ஜோதி தரிசனம் நடந்தது.

நாளை காலையும் 5.30 மணிக்கு ஜோதி தரிசனம் நடக்கிறது. இந்த தைப்பூசத் திருவிழாவில் வெளிநாடு, வெளிமாநிலம், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஜோதி தரிசனம் செய்தனர். ஜோதி தரிசனம் காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.

வடலூர் நகரில் பல்வேறு இடங்களில் அன்னதானம் நடந்தது. அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் குவிந்ததால் பக்தர்களின் பாதுகாப்பிற்காக சபை வளாகம் முழுவதும் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பக்தர்கள் வசதிக்காக சத்திய ஞானசபை வளாகத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. கார், வேன் போன்ற வாகனங்கள் நிறுத்த இட வசதி செய்யப்பட்டிருந்தது.

கடலூர் எஸ்பி. சரவணன் தலைமையில் 1200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தைப் பூச திருவிழாவையொட்டி வடலூர் நகரம் விழாக் கோலம் பூண்டு உள்ளது. வடலூர் நகர் முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டமாகவே காணப்பட்டது.

நாளை மறுநாள் 23ம் தேதி மேட்டுக்குப்பத்தில் சித்தி வளாகத் திரு அறை தரிசனம் பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...