திருநாகேஸ்வரம் ராகு பகவானுக்கு இன்று ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீப ஆராதனை நடைபெற்றது..

இன்று கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு ராகு பெயர்ச்சி ஆனதை முன்னிட்டு, பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இன்று பிற்பகல் 2 மணி அளவில் ராகுபகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், கேது பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும் இடப் பெயர்ச்சி ஆகிறார். ஒன்றரை வருடங்களுக்கு ஒரு முறை இந்தப் பெயர்ச்சி நடைபெறும்.

ராகு பெயர்ச்சியை முன்னிட்டு ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக் காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறி வருகின்றனர்.

ராகு பெயர்ச்சியை ஒட்டி, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில் ராகு பரிகாரத் தலமாக விளங்குகிறது. நாகநாத சுவாமியை வழிபட்டு ராகு சாப விமோசனம் பெற்றதாக தல புராணம் கொண்ட இந்தக் கோயிலில், ராகு பகவான் மங்கள ராகுவாக தனது இரு மனைவியர் நாகவல்லி, நாககன்னி ஆகியோருடன் உள்ளார்.

இன்று ராகு பெயர்ச்சி ஆனதை முன்னிட்டு, பிற்பகல் 1.25 மணி அளவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்னொரு சிறப்பும் புகழும் மிக்க நாக தோசம் நீக்கும் தலமான திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரத்தில், ராகு கேது இருவரும் ஒரே விக்ரஹமாக உள்ளனர். இங்கே திருப்பாம்புரநாதர் ஆலயத்தில் இன்று ராகு, கேது பெயர்ச்சியை ஒட்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றன.

ராகு, கேது பகவானுக்கு அபிஷேகங்களும், தீபாராதனையும் நடைபெற்றபோது ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

இந்த நாளில் திருப்பாம்புரம் கோயிலில் உள்ள கல்யாண சர்ப்ப தரிசனம்…

இது அஷ்ட நாகங்களின் கூட்டணி. ஆனால் வெளியே தெரிவது இரண்டு நாகங்கள் பின்னிப் பிணைந்திருப்பது போல் தோன்றும்.
அனந்தன், பத்மன், வாசுகி, மகாபத்மன், தட்சகன், கார்க்கோடகன்,… உள்ளிட்ட 8 நாகங்களின் கூட்டணி இந்த ஸர்ப்பக் கோலம்.
இது கல்யாண சர்ப்பம் என்று கூறப்படுகிறது. ஏதோ கோலம் போட்டு விளையாடுவது மாதிரி இதன் தோற்றம் தெரியும்… ஆனால் அற்புதமான வடிவம் இது.

இந்தக் கல்யாண சர்ப்ப திருக்கோலம் சுதை வடிவம் – திருப்பாம்புரம் ஸ்ரீசேஷபுரீஸ்வரர் கோயில் சந்நிதியில் தனி சந்நிதியில் உள்ளது. இந்தத் தலம் ராகு – கேது பரிகார தலம் என்று புகழ்பெற்று விளங்குகிறது. 
ஒரு சிறப்பு என்னவென்றால்….. காவிரிக் கரையில்தான் எறும்பு வழிபட்ட திருவெறும்பூர், யானை வழிபட்ட திருவானைக்கா, பாம்பு வழிபட்ட திருப்பாம்புரம், ஈ வழிபட்ட ஈங்கோய்மலை என ஜீவராசிகளெல்லாம் வழிபட்ட தலங்கள் உள்ளன.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.