108 வைணவத் திருத் தலங்களில் முக்கியம் வாய்ந்த ஒன்று திருக்கோவலூர் எனும் திவ்யதேசம். முதல் ஆழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் சந்தித்த ஊர் இதுவே.

இந்தத் திருக்கோவலூரில் ஓர் இரவில் மூவரும் சேரும் பொழுது தான் திவ்ய ப்ரபந்தங்கள் தோன்றின என்று வரலாறு கூறுகின்றது. இந்தத் திருக்கோயிலில் மூலவர் ஸ்ரீ திருவிக்கிரமன் என்றும் உத்ஸவர் ஸ்ரீ ஆயனார் என்றும் அழைக்கப்  படுகிறார்கள். இந்த மூலவர் திருவிக்கிரமனைக் காண நம் இரண்டு கண்கள் போதாது! அவ்வளவு அழகு!!

உத்ஸவர் ஸ்ரீ ஆயனார் ஒவ்வொரு வருடமும் மாசிமகத்தின் போது கடலூரில் உள்ள தேவனாம்பட்டினத்திற்கு எழுந்தருளி கடலில் தீர்த்தவாரி கண்டருள்கிறார்.

திருக்கோவலூரில் இருந்து சுமார் 75 கிமீ எழுந்தருளி இந்த உத்ஸவத்தை கண்டருள் கிறார். வழிநடையில் பெருமாள் பல ஊர்களுக்கு விஜயம் செய்கிறார். கடந்த 19ஆம் தேதி பௌர்ணமியன்று தீர்த்தவாரி கண்டருளி கடலூரில் உள்ள திருப்பாப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோயிலில் மண்டகப்படி கண்டருளினார்.

இந்த வைபவத்தில் தேவநாதன் மற்றும் ஹயக்ரீவர் எழுந்தருளியுள்ள திருவஹீந்திரபுரத்தில் உள்ள ஸ்ரீ மணவாள மாமுனிகளும் கலந்து கொண்டார். தொடர்ந்து 20ஆம் தேதியன்று ஆயனாரும் ஸ்ரீ மணவாள மாமுனிகளும் திருப்பாப்புலியூர் வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அன்று காலை ஆயனார் கருடசேவையில் எழுந்தருள மணவாளமாமுனிகள் எதிரில் எழுந்தருள கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. தொடர்ந்து மாலை தோப்பில் பெருமாளும் ஆசார்யரும் கொலுவு வீற்றிருந்து அடியவர்களுக்கு அருளினர்.

இந்த வைபவத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் ஸ்வாமிகள், திருக்கோவலூர் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் தலைமை தாங்கி கலந்து கொண்டனர். இந்த விழாவில் கீதாசார்யன் ஆன்மீக இதழின் ஆசிரியர் Dr ஸ்ரீ உவே MA வேங்கடகிருஷ்ணன் ஸ்வாமி, பெருமாள் மற்றும் ஆசார்யர் முன்னிலையில் “ஆயனும் மாயனும்” என்கிற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.

தொடர்ந்து இரு ஜீயர் ஸ்வாமிகளும் தங்கள் மங்களாசாசன உரைகளை நிகழ்த்தினர். இதை அடுத்து, பக்தர்களுக்கு தீர்த்தம் பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்த வைபவங்களை அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அனுபவித்து மகிழ்ந்தனர். இவ்விழாவை சிறப்பாக நடத்திய திருக்கோவலூர் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமியின் சிஷ்யர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளுக்கு ஊர்மக்கள் தங்கள் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.

– எம்.ஏ.வி  மதுசூதனன்

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...