பன்னாரி மாரியம்மன் கோவில் தீக்குண்ட விழா கோலாகலம்! பக்தை தவறி விழுந்ததால் பரபரப்பு!

1

புகழ்பெற்ற பன்னாரிஅம்மன் கோயிலில் நடைபெற்ற குண்டம் இறங்கும் திருவிழாவில் பக்தை ஒருவர் தவறி விழுந்து காயமடைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சத்தியமங்கலத்தில் உள்ள புகழ் பெற்ற பன்னாரிஅம்மன் கோயிலில் பூக்குண்டம் இறங்கும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளாக வந்த பக்தர்கள் கலந்து கொண்டு, பூக்குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

கடந்த 4ஆம் தேதி பன்னாரிஅம்மன் கோயில் குண்டம் இறங்கும் விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் திரளாக வந்து அம்மனை வழிபட்டனர். அப்போது மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்களும் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான தீக் குண்டம் இறங்கும் விழா இன்று நடைபெற்றது. கிராமத்தினர் மற்றும் மலைவாழ் மக்கள் கொண்டு வந்த வேம்பு, ஊஞ்சல் மரத்துண்டுகளை வைத்து நீளமான தீக்குண்டம் அமைக்கப்பட்டது. கற்பூரம் ஏற்றி குண்டத்தை மலரச் செய்ததும், அதிகாலை 4.10க்கு பூசாரி ராஜேந்திரன் குண்டத்தில் இறங்கி பூமிதித்தலைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அமுதா தீ மிதித்தார். பிறகு கல்லூரி மாணவர்கள், காவலர்கள், வனத்துறையினர் என ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்தனர்.

திடீரென சரோஜா என்ற பக்தை குண்டம் இறங்கியபோது, திடீரென நிலைதடுமாறி விழுந்தார். அதில் அவரது புடைவையின் சில இடங்களில் தீப் பிடித்தது. கை கால்களிலும் தீக்காயம் ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது அங்கிருந்த காவலர்கள், அவரைத் தாங்கிப் பிடித்து வெளியே கொண்டு வந்து முதலுதவி அளித்தனர். பின்னர் அவர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். இந்தச் சம்பவம் அங்கே பரபரப்பை ஏற்படுத்தியது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...