spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்வாதநோய் கண்டு வளைந்து நின்றாரோ?! அன்பரின் ஐயத்துக்கு ஐயன் சொன்ன பதில்!

வாதநோய் கண்டு வளைந்து நின்றாரோ?! அன்பரின் ஐயத்துக்கு ஐயன் சொன்ன பதில்!

- Advertisement -

முன்னொரு காலத்தில் நமித்தண்டி என்ற சிவபக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் காஞ்சிபுரத்தில் நடக்கும் பிரம்மோற்சவத்தைக் காண்பதற்காக, ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்குள்ளே பிரவேசித்து, ஸ்ரீ நடராஜமூர்த்தியை தரிசித்தார்.

அப்பொழுது சிவபெருமானுக்கு வாதமோ என்ன நோயோ என்று நினைத்து, அவ்வாலயத்தில் சிவபெருமானுக்குப் பூசைகள் செய்பவரைப் பார்த்து பின்வருமாறு கேட்டார்.

ஐயனே ! சிவபெருமானது திருவரை வளைந்ததற்கு காரணம் என்ன ? அங்கு ஒரு திருவடி தூக்கியிருப்பதற்குக் காரணம் என்ன ? பூமியிலே ஒரு திருவடி பதிந்திருப்பதற்குக் காரணம் என்ன ? குளிர்ச்சியுடைய திருக்கரம் எதிரே அறைய நின்றிருப்பதன் காரணம் என்ன ? விரிந்த சடைகள் தொங்கியிருப்பதற்குக் காரணம் என்ன ? திருவிழிகள் இமையாமல் இருப்பதற்குக் காரணம் என்ன ? ஒரு கொடிய வாதரோகம் சிவபெருமானைப் பிடித்துக் கொண்டதோ ? இந்த நொடியில் அவர் வாதரோகம் நீங்குவதற்குரிய மருந்து கிடைக்காமல் போனால் அவருடைய அழகான திருமேனிக்கென்ன உண்டாகுமோ ? தெரியவில்லையே ! சிவபெருமானின் திருமுடியும் சிறிது வளைந்திருக்கின்றதே ! ஐயோ ! இந்தக் கொடிய ரோகம் நொடியில் ஒழிவதற்குரிய ஔஷதம் என்ன ? ” என்று கேட்டார்.

அவருடைய கேள்விகளையெல்லாம் பற்றி யோசித்த பூசகர், அவர் மூடர் என்று முடிவு செய்து, “உம்மிடம் நிறையப் பொருள் இருந்தால் எனக்குக் கொடும், அப்படிக் கொடுத்தால் சிவபெருமானைத் துன்புறுத்தும் இக்கொடிய நோயிலிருந்து அவரைக் காப்பாற்றும் மருந்தை யாம் பெற்றுத் தருவோம் ” என்றார்.

இதைக் கேட்ட நமித்தண்டி மிகவும் மகிழ்ச்சியடைந்து, சடுதியில் தம்மிடம் இருந்த பொருட்கள் அனைத்தையும் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, ” அடியேனை ஆண்டருளும் அண்ணலின் இந்த வாதரோகம் இப்போதே நீங்கிவிடுமாயின், நானும் எம் மனைவி – பிள்ளைகளும் உம் வம்ச பரம்பரைக்கு அடிமையாவோம் ” என்று சொல்லி வணங்கினார்.

அவர் கொடுத்த பொருட்களையெல்லாம் பெற்றுக்கொண்ட அர்ச்சகர், மிகவும் சிறந்த மருந்து என்று கூறி ஒருவகை எண்ணையை நமித்தண்டியிடம் கொடுத்துவிட்டு அவ்விடம் நீங்கிச் சென்றுவிட்டார்.

நமித்தண்டி  மிகவும் மகிழ்ச்சியடைந்து நடராஜமூர்த்தியின் அருகில் சென்று, ஈசனின் திருமேனி முழுவதும் அர்ச்சகர் கொடுத்த மருந்து எண்ணையை தளரப்பூசித் தேய்த்தார். எவ்வளவு தேய்த்தும் பெருமானின் வாதரோகம் நீங்காமல் இருந்தது கண்ட நமித்தண்டியார் மனங்கலங்கிச் சோர்வடைந்தார்.

” ஐயோ ! பெருமானே, உம் திருமேனியில் இவ்வாதரோகம் எப்படித்தான் வந்ததோ தெரியவில்லையே ? நான் இனி என்ன செய்வேன் ? என்று நமித்தண்டி தம் முகத்தில் அறைந்து கொண்டு அன்பினால் அழுது மயக்கத்தால் கீழே விழுந்தார்.

” இதோ என் உயிரை மடித்துச் சாகிறேன் ” என்று தன் கழுத்தில் கத்தியைப் பூட்டி விரைவாக அறுத்துக்கொள்ள முற்பட்டார்.

அப்போது, மான் மழுவேந்திய திருக்கரமும், பிறையோடு கங்கையும் சர்ப்பங்களும் சூடிய ஜடாபாரமும், நெற்றிக்கண்ணும், திருநீலகண்டமும், புன்னகையும் கொண்ட திருவுருவாய் சந்திரசூடப்பெருமான் நமித்தண்டி முன் தோன்றி, ” மட்டில்லாத அன்புடையவனே, நில் ! நில் ! கண்டத்தை அறுத்துக் கொள்ளாதே, நாம் உன் பக்தியைக் கண்டு மகிழ்ந்தோம். உனக்குத் தேவையானதென்ன ? நல்ல வரத்தைக் கேட்டுப் பெற்றுக்கொள். நாம் அனுக்கிரகம் செய்வோம் ! ” என்றார்.

இறைவனைக் கண்ட அவர், சாஷ்டாங்கமாகப் பணிந்து, நா தடுமாற, “பரம்பொருளே, அடியேனுக்கு யாதொரு வரமும் தேவையில்லை, உமது அழகிய திருமேனியானது வாதரோகம் நீங்கப்பெற்று நீவிர் சுகமடைவீராயின் அதுவே எனக்குப் போதும் ” என்றார்.

அவரைப் பரமசிவனார் கடைக்கண் நோக்கி, ” நமக்கு உண்டாகிய இந்த வளைவு வாதரோகமல்ல, நாம் இந்த உலகத்தைப் பஞ்சகிருத்யத்தினால் ( ஐந்தொழில் ) ஒழுங்காக நிலைக்கச் செய்வதற்காக ஆடுகின்ற நடனமாம். பூலோகமும், ஸவர்க்க லோகமும், பாதாளலோகமும் வலமிடமாகச் சூழ்ந்துவர நாம் ஆடுகின்ற இந்த நடனத்தின் பெயர் ” பவுரியாட்டமாகும் ” ( பவுரி = கூத்து விகற்பம் ). விஷ்ணு, பிரம்மா முதலான தேவர்களும், சித்தர்களும் ஹர ஹர என்று கோஷம் செய்ய, பாதச்சிலம்பின் ஒலியானது 14 உலகங்களும் செவிப் புலனற்றுப் போகவும், எம் தேவி கைத்தாளமிட்டு முழக்கஞ் செய்யவும், எம் மூச்சினால் பூமியும், அஷ்டகுல பர்வதங்களும், ஆதிசஷனது தலைகளும் உருள, எம் ஜடாபாரத்தில் உள்ள சந்திரன் கொதித்ததனால் குளுமையான அமுததாரை சரிந்து, சிரமாலையின் மேல் விழுதலால் பிராணன் அடைந்த தேவர்கள் துதிக்கவும் நாம் நடனம் செய்வோம். தேவர்களுக்கு வரமளிப்போம். இவ்விதமான பஞ்சகிருத்தியமாகிய நமது நடனத்தை பக்தகோடிகள் உணர்ந்து ஆரவாரஞ் செய்வார்கள். நமது நடனம் இத்தகையது ! இது வாதமல்ல ! ” என்று கூறினார்.

பிறகு நமித்தண்டியாருக்கு இறைவன், கிடைப்பதற்கரிய கயிலாய பதத்தை அருளிச் செய்தார்.

சிவன் முதலே என்றி முதலில்லை என்றும்
சிவனுடையது என்னறிவு தென்றும் – சிவனவன(து)
என்செயல தாகின்றது என்றும் இவையிற்றைத்
தன்செயலாக் கொள்ளாமை தான்.

சிவ பரம்பொருளே அனைத்துயிர்க்கும் தலைமை ஆவதன்றி யாம் தலைமை ஆவதலில்லை என்றும், எம் அறிவு அனைத்தும் அச்சிவபரம்பொருள் தரவந்தது என்றும், எம் செயலாக விளங்குவது யாதும் அச்சிவபரம்பொருள் செய்வனவே என்றும் கருதி, உலகில் முதன்மை, அறிவுடைமை, செயற்பாடு ஆகிய யாவும் அவன் சார்ந்ததே என்பதையும் உணர்ந்து, சென்னியில் ஆடிய அவன் சேவடி வணங்கி, முற்றை வினைகளையும் முன்களைந்து ஆட்கொள்ளும் பார்வதிபதியவன் பாதம் வேண்டிப் பணிவோம்

ஸ்ரீராம் கிருஷ்ணஸ்வாமி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe