பெரிய இடத்துப் பிள்ளை

18698_10153209347029244_3030028360467212073_n தெய்வத்தின் குரல் நான்காம் பகுதி : ரா. கணபதி. மங்களாரம்பம் – பெரிய இடத்துப் பிள்ளை குழந்தை வழியே உலகப் பெற்றோரிடம் ஒரு சின்னக் குழந்தையானால் கூட, அது ரொம்பவும் பெரிய மநுஷ்யாள் விட்டுக் குழந்தையாயிருந்து விட்டால் அதனிடம் எல்லோரும் அன்பு காட்டிக் கொஞ்சுவார்கள். அதற்குப் பயப்படக்கூடச் செய்வார்கள். பழைய நாளில் ‘ராஜாப்பயல்’ என்று அன்போடும் பயத்தோடும் சொன்னார்கள் . அப்புறம் ‘கலெக்டர் அகத்துப் பிள்ளையாக்கும்’ என்று சொல்லி வந்தார்கள். இப்போது ‘மந்திரி-எம். எல். ஏ. வீட்டுப் பிள்ளை’ என்று சொல்கிறார்களோ என்னவோ? பெரிய மநுஷ்யாள் குழந்தை என்றால் அது ஏதாவது சண்டித்தனம் பண்ணினால்கூட, மற்ற குழந்தைகளை அதட்டுகிற மாதிரி அதட்டாமல் அது கேட்பதைக் கொடுத்து விடுவார்கள். ஏன் என்றால், இந்தக் குழந்தை போய், ரொம்பவும் செல்வாக்குள்ள அதன் தகப்பனாரிடம் ஒருத்தரைப் பற்றி ஏதாவது புகார் பண்ணிவிட்டால், அவ்வளவுதான், அந்த ஆசாமிக்கு இந்தத் தகப்பனர்காரரிடமிருந்து பெரிய உபத்ரவங்கள் வந்து சேரும் எவரும் தங்களையே திட்டினால் கூடப் பொறுத்துக் கொள்ள கூடும் போனால் போகிறதென்று விட்டுவிடலாம். ஆனால், காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்கிறார்களே, அப்படி ரொம்பவும் அருமையாக இருக்கப்பட்ட தங்கள் குழந்தையை யாராவது ஏதாவது சொல்லிவிட்டார்களானால் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடும். இப்படி ஒரு பெரிய மநுஷ்யர் கோபித்துக்கொண்டு கிளம்பினால் ரொம்ப ஆபத்து அல்லவா? அதனால்தான் “இது பெரிய இடத்துப் பிள்ளை அப்பா இதனிடம் வம்புக்குப் போகப்படாது” என்று சொல்வது. இதற்கு நேர் எதிராக, ஒரு குழந்தையை மெச்சி விட்டால் அதன் தகப்பனாருக்கு அவரையே மெச்சுவதைவிட ஸந்தோஷமாய்விடும் உச்சி குளிர்ந்துவிடும். இப்படி ஒரு பெரிய மநுஷ்யரை ப்ரீதி செய்து விட்டால் ஸுலபமாக அவரிடமிருந்து பெரிய பெரிய லாபங்களைப் பெற்றுவிடலாம். பெரியவர்களை நேராக த்ருப்தி செய்வது கஷ்டம். குழந்தைகளையோ ரொம்பவும் எளிதில் த்ருப்தி படுத்தி விடலாம். ஓரு சின்னச் சொப்பையோ சாக்லேட்டையோ காட்டிவிட்டால் போதும். இல்லாவிட்டால் ஏதோ கொஞ்சம் கோணங்கி விளையாட்டுக் காட்டினால் அதிலேயே ஒரு குழந்தைக்குக் குஷி பிறந்துவிடும். அந்தக் குழந்தையின் ஸந்தோத்தில் அதன் அப்பாவுக்கும் ஏக ஸந்தோஷம் உண்டாகிவிடும். தன் குழந்தையை ஸந்தோஷப்படுத்தினவருக்குத் தன்னாலன எல்லா நன்மையும் பண்ணிவிடுவார். அதாவது, ஸுலபத்தில் திருப்திப்படுத்த முடியாத ஓரு பெரியவரால் நமக்கு ஓரு காரியம் ஆகவேண்டுமானால் அதற்கு வழி ஈஸியாக த்ருப்தியாகிவிடும். அவருடைய குழந்தையை ஸந்தோஷப்படுத்துவதுதான். இதனால் என்ன ஏற்படுகிறது? நமக்கு எல்லாவிதமான நன்மைகளையும் ஒன்றுகூடப் பாக்கியில்லாமல் செய்வதற்கு சக்தி படைத்த பெரிய மநுஷ்யராக ஒருத்தர் இருந்து, அவருக்கு ஒரு குழந்தையும் இருந்து விட்டதானல் போதும், நமக்கு ஒரு கஷ்டமே இல்லை. அந்த குழந்தையைப் பிடித்து நாம் ஸுலபத்திலே குஷிப்படுத்தி விட்டாலே போதும், அந்த மஹா பெரிய மநுஷ்யரிடமிருந்து நாம் கொஞ்சங்கூட ச்ரமமேயில்லாமல் பெரிய பெரிய லாபங்களைப் பெற்றுவிடலாமென்று ஏற்படுகிறது. இப்படியிருக்கூடிய மஹா பெரிய இடத்துப் பிள்ளையார் என்று பார்த்துக் கொண்டே போனால் ஊர்ப் பெரிய மநுஷ்யருக்கு மேலே ஜில்லாவின் பெரிய மநுஷ்யர், அவருக்கு மேலே மாகாணத்தின் (மாநிலத்தின்) பெரிய மநுஷ்யர் என்று போய்க் கொண்டேயிருக்கும். முடிவாக ஸமஸ்த லோகத்துக்கும் எவன் ராஜாவோ அந்தப் பரமேச்வரனிடம் போய் நிற்கும். ராஜராஜேச்வரி என்றே பெயரிருக்கிற அம்பாள் – ஈஸ்வரன் என்ற தம்பதிதான் எல்லாருக்கும் உச்சியில் இருப்பார்கள். அப்போது நாம் முடிவாக நிற்கும் ” பெரிய இடத்துப் பிள்ளை “யார் என்று பார்த்தால், பிள்ளையார்தான் என்று தெரியும். பயத்தோடு, ப்ரியத்தோடு ராஜாக்கள் ப்ரஸிடென்ட்கள் எல்லோருக்கும் மேலே த்ரிலோகங்களுக்கும் ராஜாவாக இருக்கப்பட்ட ஈசனுடைய குழந்தை அவர். மூத்த குழந்தை. மூத்தது ஸாது என்று வசனம். அதனால் இவரை த்ருப்தி செய்வது ரொம்பவும் ஸுலபம். அதற்காக இஷ்டப்படி இருந்துவிட முடியாது. நமக்கு ரொம்பவும் இடம் கொடுத்துப் போய்விடப் போகிறதேயென்றுதான் கம்பிரமான யானை ஸ்வருபமாயிருக்கிறர் அதனால் கொஞ்சம் ஜாக்கிரதையாகவுந்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் விக்னங்கள் பண்ணுவார் இவருடைய மஹா பெரிய தகப்பனார், தாயார் சொன்னேனே, அவர்களுக்கே விக்னம் பண்ணி, “உம் ஜாக்ரதை” என்று அதன் மூலம் நமக்கும் ‘வார்ன்’ பண்ணுகிறர். ‘சின்ன எசமான்’ என்று ப்ருயத்தோடேயே கொஞ்சம் பயமும் சேர்த்து இவரைப் பூஜை பண்ணிவிட்டால் அப்படியே ப்ரீதியாகி விடுவார். அதிலேயே பார்வதி பரமேச்வராளும் உச்சி குளிர்ந்து விடுவார்கள். இவருடைய மாதா பிதாக்களான அந்த அம்பிகையும் ஈச்வரனுந்தானே இத்தனை லோகங்களையும் , அவற்றில் உள்ள நம் போன்ற ஸமஸ்த ப்ராணிகளையும் ஸ்ருஷ்டித்து, ரக்ஷித்து வருகிற ஸர்வ சக்தர்கள்? அவர்களுடைய அநுக்ரஹத்தைப் பெற்று விட்டால் நாம் இஹம் பரம் இரண்டிலும் எந்த நன்மையும் பெற்றுவிடாலாம். ஆனால் அநேக நியமங்கள் உண்டு. அதையெல்லாம் நாம் க்ரமமாக அநுஸரிப்பது ச்ரமம். ‘ஆசுதோஷி’ , ‘ க்ஷப்ர ப்ரஸாதினி என்றெல்லாம் (‘எளிதில் த்ருப்தியாகி அநுக்ரஹிக்கிறவர்கள்’ என்று அர்த்தம் கொடுக்கும்) பெயர்கள் அவர்களுக்கு இருக்கிறதென்றாலும் சிவன் கோயில், அம்பாள் கோயில் என்று போனால், இங்கேதான் நிற்கணும், இங்கேதான் நமஸ்காரம் பண்ணணும், இன்ன புஷ்பம், இன்ன நைவேத்யம்தான் அர்ப்பணம் பண்ணணும் என்றெல்லாம் எத்தனை கட்டுப்பாடு இருக்கிறது? ஸ்ரீ சக்ர பூஜையில் கொஞ்சம் தப்பு ஏற்பட்டுவிட்டால்கூட என்னென்வோ (கெடுதல்) ஏற்பட்டுவிடுகிறது என்கிறார்கள் சிவ ஸொத்து குல நாசம் என்கிற மாதிரி வசனங்களை கேட்டாலே பயமாயிருக்கிறது.