ஸ்ரீ ராமானுஜர்

கவிதை: மீ.விசுவநாதன்

சிறந்தோர்கள் தோன்றிய தெய்வீகப் பூமியில்
பிறந்தோர்கள் யாவர்க்கு(ம்) இன்பம் தரும்நற்
திருவே “இராமா னுஜ”ரா யிருக்க,
திருவா திரைவந்த தேன். (1)

தேன்தமிழால் ஆழ்வார்கள் செய்துதந்த பாசுரத்தை
வான்முழக்கம் செய்யும் மறையோர்கள் தான்முன்னே
செல்ல, பெருமாளோ பின்வர வேண்டுமென்ற
நல்ல உடையவரை நாடு. (2)

நாட்டிலே வாழும் நரர்கள் அனைவர்க்கும்
காட்டினார் வைகுந்தம்; காதலால் பூட்டினார்
கண்ணனை உள்ளே ; கருணை விழியாலே
பண்ணினார் மண்ணில் பரம். (3)

பரந்தாமன், கோவிந்தன் பாதம் பிடித்தால்
நிரந்தரமாய் உண்டென்றா(ர்) இன்பம் – சிரமீது
கீழ்ச்சாதி ஆசானின் கீர்த்தியைக் கொண்டாடி
ஆழ்மனத்தில் கொண்டா(ர்) அறம். (4)

அறமே அகிலத்தின் ஆணிவே ரென்றே
உறவைத் துறந்துப்பின் உய்யும் உறவாக
உத்தமன் பாத உடையவ ரானவரை
சித்தத்தில் வைத்தல் சிறப்பு. (5)

(இன்று(09.05.2019) ஸ்ரீ ராமானுஜர் அவதார தினம்)


ஸ்ரீ ஆதிசங்கரர்

கவிதை: மீ.விசுவநாதன்

சிவகுரு ஆர்யாம்பாள் சீர்மிகுச் செல்வன்
சிவனுரு வென்றே இருந்தார் – உவமை
எதுவு மிலாத எளியதோர் ஞானி
இதுவரை இல்லை இயம்பு. (1)

இயம்பிய எல்லாமும் என்று மிருக்கும்
சுயம்புவாம் தெய்வத்தைப் பற்றும் – பயம்வேண்டாம்
பக்தியினால் உன்மனத்தைப் பக்குவம் செய்தாலே
இத்தரையில் முக்தி எளிது. (2)

எளிதல்ல அத்வைத ஏற்பென்று சொன்ன
ஒளியற்ற வாதங்கள் ஓயப் பளிச்சென
சங்கரர் வைத்த சபைவாதம் வென்றது !
எங்குண் டவற்கே இணை. (3)

இணையிலா கீதை பிரும்மசூத்ரம் மற்றும்
அணையா உபநிடத பாஷ்யம் அனைத்துமே
கற்றோர்கள் மெச்சிடக் கச்சிதமாய்ச் செய்தவரின்
பொற்பாத மென்றும் புகழ். (4)

புகழுக்காய் இல்லாமல் பூமியில் வாழ்வோர்
அகழுக்கைப் போக்கியே ஆன்ம முகவொளியைக்
காட்டிடவே வந்தவர்தான் காலடி சங்கரர் !
சூட்டிடுவோம் நம்நன்றிப் பூ. (5)

பூவைக்கும் போதிலே பொன்மழை கொட்டியே
பூவைக்”கு பேரனாக்கி”ப் போனவர்தான் – தேவை
எதுவும் தனக்கிலா இன்பத் துறவால்
பொதுவாகி நின்றார் பொலிந்து. (6)

பொலிகின்ற ஞானத்தால் பொல்லா மதத்தை
பலிசெய்த சன்யாசி ; பாபக் கலிதீர
பாரத தேசத்தில் பக்திப் பயிறோங்கக்
காரண சங்கரர் கார். (7)

கார்மேகங் கூடக் கலைந்துடன் போகலாம் !
சேர்நட்பும் பாய்ந்துநமைச் சீறலாம் – யார்செய்த
புண்ணியமோ சங்கரர் பூமியிலே வந்திட்டார் !
திண்ணிய முண்டு திரு. (8)

திருவும் அறிவில் திடமாய் பலமும்
அருவாம் அகத்திலே ஆன்மப் பெருக்கும்
உருவாய் அமைந்த ஒளிசங் கரரைக்
குருவாய்ப் பணியும் குலம். (9)

குலம்பார்க்க வேண்டாம் ; குருபக்தி வைத்தால்
நலம்கோடி சேருமாம் நம்பு – நிலம்வாழ்
மலம்நீங்கிப் போகும் ; வருந்தாதே உள்ளே
சிலம்ப லடங்க சிவம். (10)

(ஸ்ரீ ஆதிசங்கரர் ஜயந்தி தினம் – 09.05.2019

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...