spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்தையும், விநயமும்! (பகுதி 2)

ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்தையும், விநயமும்! (பகுதி 2)

- Advertisement -

ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்தையும், விநயமும்! (பகுதி 2)
– மீ.விசுவநாதன்

சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் முப்பத்தி நான்காவது பீடாதிபதியாக விளங்கியவர் ஜகத்குரு அனந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகாஸ்வாமிகள். அவர் ஒரு சிறந்த யோகி. ஜீவன் முக்தர்.

ஒரு முறை ஸ்ரீ சங்கர ஜெயந்தி உற்சவத்தின் பொழுது வித்வான்கள் ஏராளமாகக் கூடி இருந்தனர். ஸ்ரீமத் ஆசார்யார் ஒரு பண்டிதரைப் பார்த்து பிரம்மசூத்திரத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி விளக்கம் சொல்லும் படி கேட்டுக் கொண்டார்கள். அந்தப் பண்டிதரும் அழகாகவே பிரவசனம் செய்தார். ஆனால் கூடவே தனது சொந்தக் கருத்தையும் சேர்த்துக் கொண்டு விளக்கம் சொன்னார்.

அந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீ ஆசார்யாள் அந்தப் பண்டிதரிடம்,” நீங்கள் இப்போது சொன்ன விஷயம் நம் ஆசார்யாள் பாஷ்யத்தில் இருக்கிறதா? என்றார். “இல்லை” என்று பதில் வந்தது. உடனே அவரிடம்,” நீங்கள் சொன்ன விஷயத்தை ஸ்ரீ சங்கரர் தனது பாஷ்யத்தில் சொல்லத் தவறிவிட்டார் என்று நினைக்கிறீர்களா? என்றார். “இப்படிச் சொன்னால் என்னுடைய வாதத்திற்குப் பக்க பலமாக இருக்குமே என்று எண்ணினேன்” என்று பண்டிதர் சொன்னார். உடனே ஸ்ரீ ஆசார்யாள் அந்தப் பண்டிதர் சொன்ன வாதத்தில் உள்ள தவறை எடுத்துச் சொல்லி அவருக்குப் புரிய வைத்தார்.

அந்தப் பண்டிதரும் தனது தவற்றை உணர்ந்து கொண்டு குருநாதரின் திருவடிகளில் மிகப் பணிவோடு நமஸ்கரித்து தனது தவறுக்கு வருந்தினார். அப்பொழுது அந்தப் பண்டிதரிடம்,”நீங்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றோ, என்னுடைய திறமையை விளம்பரம் செய்து கொள்ள வேண்டும் என்றோ சொல்லவில்லை. ஸர்வக்ஞனான பகவானுடைய அவதாரமாகிய நம் ஆசார்யாள் ஸ்ரீ சங்கரர் ஏதேனும் ஒரு விஷயத்தில் தவறக் கூடும் என்றோ அல்லது சொல்லவேண்டிய கருத்தைச் சொல்லாமல் விட்டு விட்டார் என்றோ ஒரு சந்தேக எண்ணம் நம் மனத்தில் வரவே கூடாது என்ற திடமான சக்தி வேண்டும் என்பதுதான் என் கருத்து.

ஸ்ரீ சங்கரரும் நம்மைப் போல ஒரு வித்வான்தானே என்ற எண்ணம் வந்து விடக் கூடாது என்கிற பணிவு நமக்கிருக்க வேண்டும். வேறு விதமான எண்ணத்தை நாம் அறவே விட்டு விட வேண்டும் என்றார்.” அந்தப் பண்டிதரும், அங்கிருந்த அனைவரும் ஸ்ரீ ஆசார்யாளின் விநயத்தை எண்ணி வியந்தார்கள்.

(ஸ்ரீ ஞானானந்த பாரதீ சுவாமிகள் எழுதிய “ஸ்ரீ குருகிருபா விலாசம்” நூலில் இருந்து பகிரப்பட்டது)

  ஜகத்குரு அனந்தஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள் 2012 ஆம் வருடம் சென்னையில் மயிலாப்பூரில், சுதர்மாவில் நான்கு மாத காலம் சாதுர் மாஸ்ய விரதமிருந்தார்கள். ஒவ்வொரு நாளும் கோலாகலமாக இருந்த காட்சிகள்  இன்றும் பசுமையாக மனத்தில் இருக்கிறது.

 ஒரு நாள் மாலையில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்குத் தேவையான பொருள்கள், மூன்று சக்கர வாகனங்கள் எல்லாம் ஸ்ரீ ஆசார்யாளே முன்னின்று வழங்கினார்கள்.

  அன்றைய அனுக்கிரக பாஷணத்தில் (அருளுரையில்) ஒருவருக்கு தயை, கனிவு, பணிவு போன்ற குணங்கள் மிகவும் அவசியம் என்று சொல்லும் பொழுது,” இதுபோன்ற மாற்றுத் திறனாளிகளிடம் நாம் என்றும் அன்போடும், தயையோடும் இருக்க வேண்டும் என்றும் கூறினார். அந்த நிகழ்ச்சி முடிந்து வெளியில் வரும் பொழுது எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு நாத்திக நண்பரை அந்தக் கூட்டத்தில் பார்த்து ஆச்சர்யத்தில்,” என்னய்யா…நீங்கள் இங்கே” என்று கேட்டேன்.

“விசு…நான் இரண்டு நாளுக்கு முன்னால இங்க வந்தேன். மாலையில் இந்த சாமிகளின் உரையைக் கேட்டேன். அசந்து போனேன்…என்ன அழகாகத் தமிழ் பேசுகிறார். அதைவிட இன்று அவர் ஊனமுற்றவர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் “மாற்றுத் திறனாளிகள்” என்று சொன்னதைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அது எங்க தலைவர் கலைஞர் கண்டுபிடித்துச் சொன்ன வார்த்தை. அது எப்படி இவருக்குத் தெரிந்தது என்று ஆச்சர்யப்பட்டேன்.

அவரது பேச்சில் பண்டித கர்வம் இல்லை. பணிவு அதிகம். அதுவே என்னை மீண்டும் இன்று இங்கு அழைத்து வந்தது என்றார். அன்று இரவில் ஸ்ரீ ஆசார்யாள் செய்த ஸ்ரீ சாரதா சந்திர மௌலீஸ்வரர் பூஜையையும் பார்த்து விட்டு நாங்கள் இருவரும் பிரசாதம் வாங்கிக் கொண்டு வீடு திரும்பி வரும் பொழுது,” சாமிகள் செய்யும் பூஜைக்கு எங்க அம்மாவையும் ஒருநாள் கூட்டிட்டு வரப் போறேன் விசு. அவர் பூஜை பண்ணறத பாக்கறதில் ஒரு அமைதி கிடைக்குது” என்றார் எனக்கு நெருங்கிய அந்த நண்பர்.  

           (வித்தையும் விநயமும் தொடரும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe