spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ஸ்ரீசிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும், விநயமும் (பகுதி-10)

ஸ்ரீசிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும், விநயமும் (பகுதி-10)

- Advertisement -
sringeri bharathi theerthar

ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் , விநயமும்: பகுதி: 10
– மீ.விசுவநாதன்

ஸ்ரீ ஆசார்யாளின் ஸ்ரீ சங்கர பக்தி

ஸ்ரீ சங்கர பகவத்பாதரின் மீது நம் ஆசார்யாள் ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள் கொண்டுள்ள பக்தி அபாரமானது. “ஸ்வாமிகள் பகவத் பாதரிடம் ஆழ்ந்த பக்தியும், அவரது தத்துவங்களை பிரச்சாரம் செய்வதில் அதிக ஈடுபாடும் உள்ளது” என்று ஸ்ரீ மகாசன்னிதானமே ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.

பகவத்பாத சங்கரரின் தத்துவங்களைக் கடைபிடித்துத் தமது குருவருளால் ப்ரம்ம ஞானம் அடைந்த மகாபுருஷரான நம் ஆசார்யாள் தமது ஒவ்வொரு உபன்யாசத்திலும் ஸ்ரீ சங்கரரின் கருத்துகளை எடுத்துக் கூற மறப்பதில்லை. ஆஸ்திக ஜனங்கள் அனைவரும் ஸ்ரீ சங்கரருக்கு மிகவும் கடமைப் பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டவும் தவறுவதில்லை.

பண்டிதர்களுடன் சங்கரரின் சித்தாந்தங்களை அலசி ஆராய்ந்திடும் நம் ஜகத்குரு, பாமரர்களுக்கு அந்த அத்வைத ஆசார்யரின் பெருமைகளை எளிய முறையில் எடுத்துக் கூற மிகவும் ஆர்வம் காட்டுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

இணையற்ற ஸ்ரீ சங்கரருக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணமாக சிருங்கேரியில் அமைந்துள்ள “மாருதி பெட்டா” எனும் சிறு குன்றின் உச்சியில் 32 அடி உயரமுள்ள பளிங்குக் கல்லினாலான ஸ்ரீ பகவத் பாதரின் சிலை ஒன்றை அமைக்க நம் ஆசார்யாள் முயற்சி எடுத்திருப்பது போற்றத்தக்கதோர் அம்சமாகும்.

“சங்கரர் காட்டும் தேசிய ஒற்றுமை”

தேசிய ஒற்றுமையை வளர்க்கும் வண்ணமே ஸ்ரீ சங்கரரின் நிர்வாக மேன்மை இருந்தது என்பதற்கு அவர் ஏற்படுத்திய நான்கு ஆம்னாய பீடங்களே சாட்சி. கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் அவர் தோற்றுவித்த மடங்கள் கடற்கரையில் அமைந்துள்ளன. அதே சமயம் வடக்கு மற்றும் தெற்கு திசைகளில் தோற்றுவித்த மடங்கள் மலைப்பகுதிகளில் அமைந்துள்ளன. வட இந்தியாவில் பிறந்த ஸ்ரீ சுரேஸ்வரர் தென்பகுதியில் இருக்கும் மடத்திற்கு அதிபதியாகவும், தென்பகுதியில் பிறந்த ஸ்ரீ தோடகர் வட பகுதியான பத்ரி மடத்திற்கு அதிபதியாகவும் நியமிக்கப் பட்டனர். மேலும் கேரளாவைச் சேர்ந்த நம்பூதிரிகள்தான் பத்ரியில் பூஜை செய்ய வேண்டும் என்றும் ஏற்படுத்திச் சென்றார். இதேபோல் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பிராமணர்கள்தான் இராமேஸ்வரத்தில் பூஜை செய்ய வேண்டும் என ஏற்படுத்தினார் ஸ்ரீ சங்கரர்.

sankarar 2
sankarar 2

“ஸ்ரீ சங்கரருக்கு நாம் கடமைப் பட்டுள்ளோம்”

ஆதிசங்கரர் அவதரிப்பதற்கு முன்னுள்ள காலத்தில் பூலோகத்தில் துர்மதங்கள் தோன்றிப் பரவ ஆரம்பித்தன. சாஸ்திரத்திற்கு எதிரான பலவிதமான உபாயங்கள் ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டன. இதனால் ஜனங்களுக்கு வேதம், யக்யம், சாஸ்திரங்களில் நம்பிக்கை குறைந்து யாக, யக்யம் செய்வது தடைபட்டது. தேவர்களுக்கு அவிர்பாகம் கிடைக்கவில்லை. அதனால் அவர்கள் கேட்டு பகவான் பூலோகத்தில் ஏற்ப்பட்டுள்ள நாஸ்திகப் பிரச்சாரங்களை ஒடுக்க காலடியில் ஆதி சங்கரராய் அவதரித்தார்.

ஆதிசங்கர பகவத்பாதர் அவதாரம் செய்வதற்கு முன் நம் சனாதன தர்மம் ஷீணதசையில் இருந்து வந்தது. ஷீணதசை என்றால் என்ன? தர்மத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பதில் ச்ரத்தை குறைந்தால் அது ஷீணதசை எனப்படும். வேதத்தை நம்பக்கூடாது என்ற பிரசாரம் தீவிரமாய் இருந்தது. ஆகவே ஸ்ரீ சங்கரபகவத்பாதாள் முதல்படியாக வேதத்திற்கு சரியான விளக்கம் கூறினார்.

வேதத்திலும், சாஸ்திரத்திலும் சொல்லப்பட்டுள்ள கர்மங்களை ச்ரத்தையுடன் செய்ய வேண்டும்; ச்ரத்தை என்றால் சாஸ்திர வாக்கியமும், ஸத்குரு வாக்கியமும் உண்மையானது என்ற அசையாத நம்பிக்கையாகும். ச்ரத்தையுடன் கர்மாக்களைச் செய்வதால்தான் ஈஸ்வரன் திருப்தி அடைவார். மேலே கூறியபடி கர்மாக்களைச் செய்யாது போனால் பகவத் க்ருபை ஏற்படாது. லோகங்களைப் படைத்த பகவானால் வேதம் கணிக்கப் பட்டது.

sankarar 3 2

உபநயன ஸம்ஸ்காரம் அடைந்தவன் தகுந்த ஆசிரியர்களிடம் வேதாத்யயனம் செய்வது முக்கியமான கடமை. இவைகளை எல்லாம் கீதாசார்யாள் கீதையில் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். இம்மாதிரி விஷயங்களை ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லி, நாஸ்திகப் பிரச்சாரத்தில் இருந்து நம்மைக் காத்த ஸ்ரீ பகவத்பாதாளுக்கு நாம் மிகவும் கடமைப் பட்டிருக்கிறோம்.

பகவத்பாதாள் அருளிய பாஷ்யங்கள் பிரகாரம் நாம் செயல்பட்டால் அக்ஞானத்திலிருந்து விடுபட்டு, ஞானத்தை அடைந்து மோக்ஷம் அடைய அருகதையுள்ளவர் களாவோம். வேதாந்தத்தின் உண்மையான ஸ்வரூபத்தை விளக்கியவர் ஆதிசங்கரர். ஆகையால் ஆண்டுதோறும் ஸ்ரீ சங்கர ஜெயந்தியைக் கொண்டாடி அவர்கள் அளித்தருளிய உபதேசங்களை எல்லோருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

(ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள் ஸ்ரீ சங்கரைப் போற்றிய மேற்கூறிய அருளுரையை ஸ்ரீமான் கி.சுரேஷ் சந்தர் எழுதிய “ஞாலம் போற்றும் ஞான குரு” என்ற புத்தகத்தில் இருந்து பகிரப்பட்டது)

“பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு ஸ்ரீ ஆதிசங்கர விருது”

ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள் 2012ம் வருடம் தமிழ்நாட்டில் விஜய யாத்திரை செய்தார்கள். ஸ்ரீ சங்கரஜயந்தி உற்சவத்தை திருநெல்வேலியில் மிகச் சிறப்பாக நடத்தினார்கள். அதுசமயம் ஸ்ரீ ஆதிசங்கரரின் சிறப்புகளைக் கூறி, “நாம் அனைவரும் ஸ்ரீ சங்கரருக்குக் கடமைப் பட்டிருக்கிறோம். அதனால்தான் எங்களது பரமேஷ்டி குருநாதர் ( ஸ்ரீ சாரதா பீடத்தின் முப்பத்து மூன்றாவது ஆசார்யாள்) ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ நரஸிம்ம சுவாமிகள் ஆதிசங்கரரின் சங்கர ஜெயந்தி

மகோத்ஸவத்தை பாரத தேசம் முழுவதும் கொண்டாடும் படிச்செய்தார்கள். ஸ்ரீ சங்கரர் ப்ரும்மசூத்ர பாஷ்யம் முதல் ஏகச்லோகி வரை அவரவர் தகுதிக்கு ஏற்ப ஸ்லோகங்கள் இயற்றி நமக்கு மிகவும் உபகாரம் செய்திருக்கிறார். அதை நாம் சரியாகப் பயன்படுத்தி மேன்மை பெறவேண்டும்.

வேதாந்த தத்வத்தைப் பரப்பி, அத்வைத சித்தாந்தத்தை அனைவருக்கும் எடுத்துக் கூறும் ஒருவருக்கு இந்த வருடம் ஸ்ரீ ஆதிசங்கரர் விருது வழங்க வேண்டும் என்று எண்ணினேன். அதையும் சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களுக்குத் தர வேண்டும் என்று விரும்பினேன். அந்த அபிமானம் இந்த விருதை (Award) அவருக்குக் கொடுக்கும்படி பண்ணிடுத்து. காளிதாசன் தனது சாகுந்தலம் நாடகத்தில்,” எல்லாரும் தனக்கு சமானமான மனசுக்காரர்களோடு விஸ்வாஸமாக இருப்பா” என்று சொன்னார். சுவாமி தயானந்தர் எனக்கு ஸமான மனஸ்கர். ஸமான வயஸ்கர் இல்லை. ஸமான மனஸ்கர் . அவர் என்னை விட இருபது வயசு பெரியவர். மனசு ஒரே மாதிரி. எனக்கு எப்படி ஆதிசங்கர பகவத்பாதாள் விஷயத்தில பக்தி இருக்கோ அதே போல அவருக்கும் இருக்கு.

நான் சில நியமங்களை வைத்துக் கொண்டு பாரதத்துக்குள்ளேயே ஸ்ரீ சங்கரரின் சித்தாந்தங்களை ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லி வருகிறேன். அவர் பாரதத்திற்கு வெளியிலயும் அந்தக் காரியத்தைச் செய்து வருகிறார். அவருக்கு இந்த “அவார்ட்” (Award) கொடுப்பதில் ரொம்ப சந்தோஷப் படறேன். சுவாமிஜியும் மிகுந்த சந்தோஷத்தோட இத ஏற்றுக்கொண்டார். அவருடைய இந்த வேதாந்தப் பிரசாரம், சனாதன தர்மப் பிரசாரம் தொடர்ந்து நடக்கட்டும் என்று ஸ்ரீ ஆதிசங்கரரைப் பிரார்த்திக்கின்றேன்.

திருநெல்வேலி சிஷ்யர்கள் ஸ்ரீ சங்கரஜெயந்தி உற்சவத்தையும், இந்த நிகழ்ச்சியையும் மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் ஆசீர்வதிக்கிறேன்” என்றார் ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள்.

ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளின் உரையைக் கேட்க ….

“பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் ஏற்புரை”

ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளின் திருக்கரங்களால் ஸ்ரீ ஆதிசங்கரர் விருதினைப் பெற்றுக் கொண்டு,” ஓம். இந்த “அவர்ட்”ஐ ஒரு பிரசாதமாகவே வாங்கிக் கொள்கிறேன். பகவத்பாதாளின் பிரசாதாமாகவே நான் நினைக்கிறேன். காரணம் என்ன வென்றால், தினம்தோறும் பாஷ்யபாடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

அந்தப் பாடம் சொல்லிக் கொடுக்கிறதாலதான் ஆசார்யாளின் மூலமாக இந்தப் பிரசாதம் கிடைத்திருக்கிறது. ஆசார்யாளும் பகவத்பாதாள்தான். இதுவும் ஒரு தர்மம்தான். வாங்கறவாளும் ஜாக்கிரதையா இருக்கணும். கொடுக்கறவாளும் பார்த்துக் கொடுக்கணும். ச்ரத்தை இருக்கறவாளுக்குத்தான் கொடுக்கணும். இதுபோன்று கொடுப்பதும், வாங்குவதும் பெரும் பாக்கியம்தான். அது அந்த விருதிற்கும் பெருமை. இந்த விருதை ரொம்ப விநயத்துடன் வாங்கிக் கொள்கிறேன். நமஸ்காரம்.” என்று பூஜ்ய ஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் ஏற்புரையில் கூறினார்கள்.

பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் ஏற்புரையைக் கேட்க …

(வித்யையும் விநயமும் தொடரும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe