― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்சிவராத்திரி சிறப்பு ஆலயம்: பீமா சங்கரம்!

சிவராத்திரி சிறப்பு ஆலயம்: பீமா சங்கரம்!

- Advertisement -

சிவாலயம்- பீமா சங்கரம் – மகாராஷ்டிரா
– ராஜி ரகுநாதன், ஹைதராபாத்

பீமா ஷங்கர்:- துவாதச (12) ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றான மகாராஷ்டிராவில் உள்ள பீமா ஷங்கர் ஸ்வயம்பு லிங்கம்.
மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரைச் சேர்ந்த சஹ்யாத்ரி பர்வதத்தில் கோயில்  கொண்டுள்ளார் பீமா ஷங்கர்.

வரலாறு:- சஹ்யாத்ரி மலைகளின் ‘தாக்கினி’ காடுகளில் ‘பீமா’ என்ற அசுரன் தன் தாய் ‘கர்க்கடி’ என்பவளுடன் வசித்து வந்தான். கருணை, தயை போன்ற நற்குணங்கள் அவனைக்கண்டு அஞ்சி நடுங்கின. அவன் மனிதர்களை மட்டுமின்றி தேவர்களையும் ஒருசேர பயமுறுத்தினான்.

‘தானும் தன் தாயும் ஏன் அந்த காடுகளில் தனித்து வாழ வேண்டி வந்தது?” என்ற கேள்வி அவனை அனுதினமும் ஆட்டிப் படைத்தது. லங்கேஸ்வரனான ராவணனின் சகோதரன் கும்பகர்ணனே தன் தந்தை என்பதையும் ஸ்ரீமகா விஷ்ணு ஸ்ரீராமராக அவதரித்து கும்பகர்ணனையும் ராவணனையும் வதைத்தார் என்பதையும் தன் தாயிடம் கேட்டறிந்த பீமாசுரன் ஸ்ரீமகா விஷ்ணுவை பழி தீர்க்க விரும்பினான்.

பிரம்மாவைக் குறித்து கடும் தவம் புரிந்தான். பிரம்மாவிடமிருந்து பெற்ற அளவு கடந்த வரத்தால் மூவுலகையும் ஆட்டிப் படைத்தான். இந்திரனை வென்று தேவ லோகத்தைக் கைப்பற்றினான். முனிவர்களையும் சாதுக்களையும் துன்புறுத்தினான். தேவர்களனைவரும் பிரம்மாவுடன் சேர்ந்து சிவனிடம் வந்து வணங்கி நின்றனர். பரம சிவன் அவர்களுக்கு அபயமளித்தார்.

விரைவிலேயே அவனை வதைக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது.
ஒரு சமயம் சிறந்த சிவபக்தரான ‘காமரூபேஸ்வரர்’ என்ற சாது சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து கொண்டிருந்த போது பலவந்தமாக அவரைத் தடுத்து சிவனுக்கு பதில் தன்னை வணங்கும்படி வற்புறுத்தினான். மறுத்த அவரை கொல்வதற்கு வாளை  ஓங்கினான்.

உடனே மகாதேவர் தேஜோ மூர்த்தியாக சிவலிங்கத்திலிருந்து வெளிப்பட்டு பீமாசுரனுடன் யுத்தம் புரிந்தார். இருவருக்குமிடையே கடும் யுத்தம் நிகழ்ந்தது. நாரதர் அங்குவந்து போரை முடிக்கும்படி சிவனை வேண்ட, பீமாசுரன் பஸ்மாமாக்கப்பட்டான்.

தேவர்கள் மற்றும் முனிவர்களின் பிரார்த்தனையின்படி அவ்விடத்திலேயே ஜோதிர்லிங்கமாக தங்கிவிட்ட மகாதேவர் ‘பீமா ஷங்கர்’ என்ற நாமம் பெற்றார்.

பீமா நதி:- இந்த க்ஷேத்திரத்தின் அருகில் இதே மலைத்தொடரில்  பீமா நதி உற்பத்தியாகி, தென் கிழக்காகப் பாய்ந்து, ராய்ச்சூர் அருகில் கிருஷ்ணா நதியில் கலக்கிறது.  பீமா நதி உற்பத்தியாகுமிடம் ‘குப்தபீமா’ என்றழைக்கப்படுகிறது.

பீமாசுரனுடன் நடந்த போரின் போது சிவனின் மேனியிலிருந்து வழிந்த வியர்வையே பீமா நதியாகப் பாய்ந்து ஓடுவதாக ஐதீகம்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே நகரிலிருந்து  120 கி.மீ. தொலைவிலும், மும்பையிலிருந்து 200 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது புகழ்பெற்ற இச்சிவ ஸ்தலம். கடல் மட்டத்திலிருந்து 2750 அடி உயரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.

கர்ப்ப கிருகம்:- எல்லா சிவன் கோயில்களையும் போலவே பீமா ஷங்கரின் கர்ப்ப கிருகமும்  உள்ளாழ்ந்து தாழ்வாக காணப்படுகிறது. சிவலிங்கத்திற்கும் ஆவுடையாருக்கும் வெள்ளிக் காப்பிடப்பட்டுள்ளது. கர்ப்பகிருகத்தின் உள்ளே வைக்கப்பட்டுள்ள கண்ணாடி மூலம் மிகத் தெளிவாக வெளியில் இருந்தவாறே கூட சிவனை தரிசிக்க முடிகிறது. பக்தர்கள் தாங்களாகவே சிவனைத் தொட்டு அபிஷேகம் செய்து வழிபட முடிகிறது.

கர்பகிருகத்தின் உள்ளேயே சுவரில் பார்வதி தேவியின் அழகிய சிறிய சிலை ஒரு மாடத்தில் காணப்படுகிறது. பக்தர்கள் வளையல், மஞ்சள் கும்குமம், ரவிக்கை துணி போன்றவற்றை பக்தியுடன் அம்பாளுக்கு சமர்பித்து மகிழ்கிறார்கள். கர்ப்பகிருகத்திற்குள் செல்லும் படிக்கட்டுகளிலும் தூண்களிலும் தேவ, மனித உருவங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன.

கர்ப்பகிருகத்தின் எதிரில் கம்பீரமான நந்தி உயரத்திலிருந்து  சிவனைப் பார்த்தவாறு அமர்ந்திருக்கிறார்.

சனிபகவான்:- சிவனுடைய சந்நிதியை அடுத்த சபா மண்டபத்திற்கு எதிரில் சனி பகவானின் சந்நிதி தனியாக உள்ளது. காக்கை வாகனத்தின் மேல் அமர்ந்து சனிபகவான் விசேஷமாக அனுக்ரகம் செய்கிறார்.

பெரிய மணி:- சனி பகவானின் சந்நிதிக்கு எதிரில் உள்ள இரண்டு தூண்களுக்கு இடையில் பெரிய அழகிய போர்த்துகீசிய மணி தொங்குகிறது. ‘பாஜிராவ் பேஷ்வா’ வின் சகோதரர் ‘சிம்னாஜி அப்பா’ என்பவர் இதனை காணிக்கையாக சமர்பித்துள்ளார்.

சிம்னாஜி அப்பா, போர்த்துகீசியர்களை  ‘வாஸாய்’ கோட்டையில் வென்று இரண்டு பெரிய மணிகளை வெற்றியின் சின்னமாகக் கொண்டு வந்தார். ஒன்றை பீமா ஷங்கர் ஆலயத்திற்கும், மற்றொன்றை கிருஷ்ணா நதிக்கரையில் ‘வாயி’ என்ற இடத்திலுள்ள ‘மேநோவாலி’ சிவன் கோவிலுக்கும் காணிக்கையாக அளித்துள்ளார்.

கோவில் அமைப்பு:- இக்கோயில் ‘நகாரா’ வடிவமைப்புடன் கட்டப்பட்டுள்ளது. பழமையும் புதுமையும் கலந்த மிக அழகான சிற்பக் கலையுடன் விளங்குகிறது.  சிறிய கோவில் தான் ஆனாலும் எளிமையும் நளினமும் கலந்து காணப்படுகிறது. 
இது 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவில்.  இதன் சபா மண்டபமும், கோபுரச் சிகரமும் 18ம் நூற்றாண்டில் ‘நானா பட்னிவாஸ்’ என்பவரால் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
மராட்டிய சக்கரவர்த்தி சிவாஜி, இக்கோவிலில் வழிபாடுகள் குறைவின்றி நடைபெறத் தேவையான மானியங்களை வழங்கி உள்ளார்.

இயற்கை அழகு:- மக்கள் சந்தடியிலிருந்து விலகி, இயற்கை அழகு கொஞ்சும் மலைத்தொடரில் பசுமையான அடர்ந்த காடுகளின் இடையே அமைந்துள்ள இக்கோயில் யாத்ரிகர்களின் சுவர்க்கமாக விளங்குகிறது.

சஹ்யாத்ரி மலைத்தொடரின் முடிவில் அமைந்துள்ளதால் இவ்விடத்திலிருந்து பார்க்கும் போது, நதிகளும் மலைகளும் காடுகளும் மிக அழகாக காட்சியளிக்கின்றன. இது டிரெக்கிங் செல்பவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் பிரதேசமாகவும் இருக்கிறது.  இயற்கையை ரசிப்பவர்களுக்கு மரங்கள், பறவைகள், உயர்ந்த மலைச் சிகரங்கள், துள்ளிக் குதித்தோடும் நீர் அருவிகள்  என்று பலவும் அழகோ அழகு. இங்கு ‘ப்ளூ பெர்ரி’ பழங்கள் அதிக அளவில் கிடைக்கின்றன.

இத்தகைய இயற்கை சூழலை இறைவன் தேர்ந்தெடுத்து வசிப்பதென்பது பொருத்தமே!

பக்தர்கள் வாகனங்களை  விட்டிறங்கியபின் இருபுறமும் கடைகள் நிரம்பிய படிக்கட்டுகள் வழியாக சிறிது தூரம் நடந்து கீழிறங்கி கோவிலைச் சென்றடைய வேண்டும்.

இயற்கை அழகும் தெய்வ சாந்நித்தியமும் இணைந்த ஒரு அழகிய க்ஷேத்திரமாக விளங்குகிறது பீமா சங்கரம்.

இதை தவிர கௌஹாட்டியிலும், நைனிடாலிலும் கூட பீமா ஷங்கர் என்ற பெயரில் சிவாலயங்கள் பிரசித்தமாக விளங்கிகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version