
வரலாறுகளின் அடிப்படையில் சம்பங்கி மரம் திருப்பதி ஏழுமலையான் கோவில் தலவிருட்சமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரலாறு மற்றும் ஏழுமலையானுக்கு நடத்தப்படும் அனைத்து விதமான பூஜைகள் ஆகியவற்றின் அடிப்படையில் சம்பங்கி மரம் ஏழுமலையான் கோவில் தலவிருட்சமாக அறிவிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஜவகர் ரெட்டி உத்தரவின்பேரில் புராணங்களில் கூறப்பட்டுள்ள பல்வேறு வகையான மலர் செடிகளைக் கொண்ட பூந்தோட்டம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. ஏழுமலையானுக்கு தினமும் நடத்தப்படும் பூஜைகளில் சம்பங்கி மலர் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்று வருகிறது.
பவிஷ்யோத்ர புராணம் 13வது பாகம் 33 மற்றும் 34 ஆவது சுலோகங்களில் அப்போதைய அரசர் தொண்டமான் சக்கரவர்த்தியிடம் தனக்கான கோவிலை கட்டும்போது கட்டுமானத்திற்காக தேர்வுசெய்யப்பட்ட பகுதியில் இருக்கும் சம்பங்கி தோட்டத்தை அகற்ற வேண்டாம் என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழுமலையான் கோவிலில் உள்ள ஒருபகுதி தற்போதும் சம்பங்கி பிரகாரம் என்று அழைக்கப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் சம்பங்கி மரம் ஏழுமலையானின் தலவிருட்சமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.