

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திரு ஆடிப்பூரம் உற்சவம் ஜூலை 24 அன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.பிரசித்திபெற்ற ஆடிப்பூர திருதேரோட்டம் ஆகஸ்ட் 1 அன்று நடக்கிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று ஆண்டாள் தேரோட்டத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக தேரோட்ட திருவிழா பொதுவெளியில் நடக்கவில்லை. கோயில் வளாகத்தில் தங்கத்தேர் இழுக்கும் வைபவம் மட்டுமே நடந்தது.
தற்போது வழக்கமான சூழல் துவங்கி உள்ளதால், இந்தாண்டு தேரோட்ட திருவிழாவை நடத்த கோயில் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதன்படி ஜூலை. 24 அன்று காலை 09:00 மணிக்குமேல் 10:00 மணிக்குள் வேத பாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது.
முக்கிய விழாவாக ஜூலை 28 அன்று காலை 10:00 மணிக்கு பெரியாழ்வார் மங்களாசாசனம், இரவு 10:00 மணிக்கு ஐந்து கருடசேவை, ஜூலை 30 இரவு 07:00 மணிக்கு கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னார் சயன திருக்கோலம் நடக்கிறது.
ஆகஸ்ட் 1-இல் அதிகாலை மூலவர் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னாருக்கு திருமஞ்சன அபிஷேகம் அலங்காரம் பூஜை நடத்தி திருத்தேரில் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் எழுந்தருளி
காலை 09:05 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தலும் நடக்கிறது.
இதனைத்தொடர்ந்து தேர் அலங்கார பணிகளை மேற்கொள்ள நாள் செய்யும் விழா ஆண்டாள் கோயிலுக்கு எதிரே உள்ள தேர் நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு தேரோட்டம் நடைபெறுவதால் தேருக்கு அருகே கோயில் அர்ச்சகர்கள் சிறப்பு யாகங்களும், ஹோமங்களும் வளர்த்து அதன் பின்னர் சிறப்பு பூஜை செய்தனர். நாள் செய்யும் விழாவில் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து பங்கேற்றனர்.
ஆகஸ்டு 1-ந் தேதி நடைபெற உள்ள ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரை தயார்படுத்தும் பணி முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர் தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய தேராகும்.ஆண்டுதோறும் ஆடிமாதம் ஆடிப்பூரத்தன்று இல் தேரில் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் பவனி வரும் காட்சியை காண தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.இந்த ஆண்டு திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் தெரிவித்தனர்.