

சபரிமலை ஐயப்பனுக்கு திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவரால் 107.75 சவரன் தங்க மாலையை காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது.
மாதாந்திர பூஜைகளுக்காக, சபரிமலை கோயில் நடை செவ்வாய்க்கிழமை மாலையில் திறக்கப்பட்டது. இதையடுத்து, விரதமிருந்து இருமுடி கட்டி வரும் ஐயப்ப பக்தர்கள் 18 படிகள் வழியாக சென்று ஐயப்பனை தரிசிக்க பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். நாளை ஆக 21இரவு வரை கோயில் நடை திறந்திருக்கும் என்றும் இந்நாள்களில் உதயாஸ்தமன பூஜை, அஷ்டாபிஷேம், களபாபிஷேம், படிபூஜை ஆகியவை நடைபெறும் என்றும தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரிசனத்துக்கு இணையவழி முன்பதிவு மூலம் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். நிலக்கல்லில் உடனடி பதிவு முறையும் செயல்பாட்டில் உள்ளது. அடுத்த மாதம் 6-ஆம் தேதி ஓணம் பூஜைகளுக்காக கோயில் நடைதிறக்கப்பட்டு, 10-ஆம் தேதி நடை சாத்தப்படும் என்று தேவஸ்வம் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நிலையில் சபரிமலை ஐயப்பனுக்கு திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 107.75 சவரன் தங்க மாலையை காணிக்கையாக செலுத்தியுள்ளார். வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபரான அந்த பக்தர் நேற்று தனது நண்பருடன் சென்று காணிக்கையை செலுத்தியுள்ளார். தனது வேண்டுதல் நிறைவேறிய காரணத்தினால் நன்றிக்கடன் செலுத்தியதாக பக்தர் தெரிவித்துள்ளார். இதன் மதிப்பு சுமார் ரூ.44.98 லட்சமாகும்.