
தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோவிலில் ஆவணி தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் ஒப்பனையம்மாள் சமேத பால் வண்ணநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஆவணி தபசு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 14 நாட்கள் நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலை முன்னிட்டு ஆவணித் தபசு திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான திருவிழா ஒப்பனையம்மாள் கோவில் முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் காலை 6.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றது. தேரோட்டம் விழாவில் கோவில் துணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், ஊழியர் நவமணி, சங்கரன்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் மதிமாரிமுத்து மற்றும் மண்டகப்படிதாரர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 11-ம் நாளான வருகிற 3-ந் தேதி மாலை 4.00 மணிக்கு நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியான ஆவணி தபசு திருவிழா 13-ம் நாளான வருகிற 5-ந் தேதி மாலை நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
