ஆந்திர பிரதேசம் திருமலையில் சனிக்கிழமை இரவு நடந்த பௌர்ணமி கருட சேவையில் தங்கம், வைர ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார் உற்சவர் மலையப்பசாமி. மலையப்பசாமி தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருமலை ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று கருட சேவை நடப்பது வழக்கம். அதன்படி பவுர்ணமியான நேற்று திருமலையில் இரவு 7 மணிக்கு பவுர்ணமி கருடசேவை நடந்தது. தங்கம், வைர ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் மலையப்பசாமி தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல் திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் நேற்று இரவு பவுர்ணமி கருடசேவை நடந்தது. உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரசாமி சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். முன்னதாக சாமிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. அதில் அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.