
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் இந்த ஆண்டு பெருமாளுக்கு உகந்த புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி இன்று பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகளவில் காணப்பட்டது.
தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் புரட்டாசிக்கு தனி சிறப்பு உண்டு. இது மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும் என்பது சான்றோர்களின் வாக்கு. சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது.
புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. அப்படி விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும். இதனால் புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. மேலும் புரட்டாசி சனிக்கிழமை மிகவும் விஷேசமாக கருதப்படுகிறது.
இந்நிலையில் புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காலை முதலே பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் இந்த ஆண்டு எவ்வித கட்டுப்பாடும் இன்றி பொதுமக்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மில் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் முக்கியமான ஸ்தலங்களான கூடலழகர் பெருமாள் கோவில், அழகர்கோவில், ஒத்தக்கடை நரசிங்கப்பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணபெருமாள் கோயில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உட்பட பல்வேறு கோயில் கமில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர் .