திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா இன்று முதல் அக்டோபர் மாதம் 4-ந்தேதி வரை நவராத்திரி விழா நடக்கிறது.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் இன்று முதல் அக்டோபர் மாதம் 4-ந்தேதி வரை நவராத்திரி விழா நடைபெற உள்ளது. இதற்காக கோவிலுக்கு சொந்தமான கோவில் அருகே உள்ள ராஜா தோட்டத்தில் அமைக்கப்பட்ட மண்டபத்தில் நவராத்திரி கொலு பொம்மைகளை விழா குழுவினர் அலங்கரித்து வருகின்றனர். மேலும் நவராத்திரி விழா காலத்தில் உற்சவர் வீரராகவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பல்வேறு கோலங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
அதேபோல் ராஜா தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கொலு மண்டபத்தில் தினசரி பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் பரதநாட்டியம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் பங்காரு அடிகளார் நேற்று காலை 9.30 மணி அளவில் அகண்ட தீபத்தை ஏற்றி வைத்து நவராத்திரி விழாவினை தொடங்கி வைத்தார். சித்தர் பீடத்திற்கு வந்த ஆன்மிக குரு பங்காரு அடிகளாருக்கு மேளதாளம் முழங்க சென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பக்தர் கள் வரவேற்பு அளித்து பாத பூஜை செய்தனர். சித்தர் பீடத்தின் வளாகம் முழுவதும் கலை நயத்துடன் பூக்களாலும் மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
நேற்று அதிகாலை 2 மணி அளவில் மங்கல இசையுடன் தொடங்கிய நவராத்திரி விழாவில் கருவறையில் உள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. காலை 9.30 மணி அளவில் அடிகளார் கருவறைக்கு சென்று அம்மனுக்கு தீபாராதனை செய்து கருவறையில் சுயம்பு அம்மனுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த அகண்ட தீபத்தை உலக நன்மைக்காகவும், இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியும் ஏற்றி வைத்தார். பின்னர் அந்த அகண்ட தீபத்தை சிறுமிகளிடம் கையில் கொடுத்து சித்தர் பீடத்தை வலம் வரும்படி கூறினார். அகண்ட தீபத்திற்கு பல்வேறு வகையில் திருஷ்டிகள் கழிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அனைத்து சன்னதிகளையும் வலம் வந்த அகண்ட தீபம் 10 மணியளவில் கருவறையினுள் தென்கிழக்கு திசையில் அக்னி மூலையில் அமைக்கப்பட்டு இருந்த தனி பீடத்தில் வைக்கப்பட்டு பங்காரு அடிகளார், ஆன்மீக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் ஆகியோர் அகண்ட தீபத்தில் முக்கூட்டு எண்ணெய் ஊற்றி தீபாராதனை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து செவ்வாடை பக்தர்கள் கருவறையில் அமைக்கப்பட்டிருந்த அகண்ட தீபத்தில் முக்கூட்டு எண்ணெய் ஊற்றி ஆதிபராசக்தி அம்மனை வழிபட அனுமதிக்கப்பட்டனர். மேலும் புரட்டாசி மாத அமாவாசையையொட்டி காலை 11.20 மணிக்கு அமாவாசை வேள்வி பூஜையை பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று தொடங்கிய நவராத்திரி விழா வருகிற 5-ந்தேதி வரை நடைபெறுகிறது ஆதிபராசக்தி அம்மனுக்கு தினம்தோறும் பல்வேறு காப்பு மற்றும் அலங்காரத்துடன் நவராத்திரி விழா நடை பெறும். விழா ஏற்பாட்டினை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் தலைமையில் அனைத்து மாவட்ட ஆதி பராசக்தி ஆன்மிக கத்தினர் பொறுப்பேற்று செய்திருந்தனர்.