சபரிமலை ஐயப்பன் கோயியில் நடப்பு சீசனில் வரலாறு காணாத அளவுக்கு பக்தர்கள் குவிந்ததால் உண்டியல் நிரம்பி வழிகிறது. சபரிமலையில் மகரவிளக்கு கால கடைசி நெய் அபிஷேகம் இன்றுடன் நிறைவடைந்தது. தங்க ஆபரணத்தில் ஜொலிக்கும் ஐயப்பனை தரிசிக்க இன்றே கடைசி நாள் என்பதால் சபரிமலையில் அதிக அளவிலான பக்தர்கள் குவிந்துள்ளனர். நாளை இரவு 10 மணிக்கு மாளிகைபுரத்தம்மன் குருதி நிகழ்ச்சிக்கு பிறகு நாளை மறுநாள் மன்னர் தரிசனம் செய்து முடிக்க காலை 6:30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.
அன்றைய தினம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியில்லை. மீண்டும் மாசி மாத பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை வரும் பிப்ரவரி 12ம் தேதி திறக்கப்படுகிறது. 2 மாதங்களாக நடைபெற்ற மண்டல பூஜை – மகரவிளக்கு தரிசனத்துக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். ஜனவரி 12ம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய காணிக்கை மட்டும் ரூ.310.4 கோடியாகும். ஜனவரி 17ம் தேதி நிலவரப்படி ஐயப்பன் கோயில் உண்டியல் வருமானம் ரூ.315.46 கோடி என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
ரூபாய் நோட்டுகள் மட்டுமே இதுவரை எண்ணப்பட்டு உள்ளதாகவும், நாணயங்கள் இன்னும் எண்ணப்படவில்லை என்றும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய நாணயங்கள் மட்டுமே 3 அறைகளில் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் உண்டியல் பணத்தை அன்றன்று எண்ணி வங்கியில் டெபாசிட் செய்து விடுவார்கள். சபரிமலை ஐயப்பன் கோயிலில் 7 இயந்திரங்கள் உதவியுடன் பணம் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.