
கன்னியாகுமரி அருகே பிரபலமான இந்து வழிபாட்டுத் தலமாக விளங்கும் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் முத்து குடைகளும், மேள தாளங்களும் முன்செல்ல தைத்திருவிழா தேரோட்டம் இன்று திங்கட்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
தமிழகம் கேரளவில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பகல் 11 மணிக்கு அய்யா வைகுண்டசாமி பல்லக்கு வாகனத்தில் தேருக்கு எழுந்தருளினார். அய்யா வழி பக்தர்கள் அய்யா சிவ சிவ அரகரா அரகரா பக்தி கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கன்னியாகுமரி அருகே உள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா கடந்த ஜன 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடந்தது. விழாவின் 8-வது நாளில் அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 9 மற்றும் 10-ம் திருவிழாக்களில் இரவு வாகன பவனியும் நடந்தது.