
உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் திருநடை மாசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.திரளான பக்தர்கள் ஆன்லைன் மூலமே முன்பதிவு செய்து இருமுடி கட்டி சன்னிதானம் வந்தடைந்து 18படி ஏறி பகவானை தரிசனம் செய்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கொரோனா தளர்வுக்கு பிறகு இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் பக்தர்கள் அதிக அளவு வந்து தரிசனம் பெற்றனர். இந்த காலங்களில் கோவிலுக்கு ரூ.360 கோடி அளவில் வருமானம் கிடைத்தது. மகரவிளக்கு பூஜைக்கு பின்னர் கடந்த ஜனவரி 20-ந்தேதி சபரிமலை கோவில் நடை அடைக்கப்பட்டது.
இந்த நிலையில் நாளை பிப் 13-ந்தேதி மாசி மாதம் பிறக்க உள்ளதால், மாதாந்திர பூஜைகளுக்காக கோவில் நடையை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவும் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மாசி மாத பூஜைகளுக்காக கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்டதும் கோவில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தீபம் ஏற்றினார். இன்று வேறு பூஜைகள் எதுவும் இல்லை.
நாளை காலை 5 மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். 17-ந்தேதி வரை கோவில் திறந்திருக்கும். இந்த நாட்களில் நெய்யபிஷேகம், கலசாபிஷேகம், படி பூஜை போன்றவை நடைபெறும். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
. சபரிமலை கோவில் நடை திறக்கப்படுவதை முன்னிட்டு ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.வரும் பிப் 17-ந் தேதி இரவு 7 மணிக்கு படிபூஜை முடிந்ததும் இரவு 10 மணிக்கு சுவாமி பல்ப் அலங்காரத்தில் தவமிருக்க வைக்கப்பட்டு நடை அடைக்கப்படும் என சபரிமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.