spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்சுபிட்சத்தை அள்ளித்தரும் காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாண பெருமாள்

சுபிட்சத்தை அள்ளித்தரும் காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாண பெருமாள்

- Advertisement -

சிறப்பான கோயில்கள் அதிகம் திகழும் காவிரிக் கரையின் கடைமடைப் பகுதியில் கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் என்று திருத்தல உலா செல்வோர்க்கு அந்தப் பகுதியில் கடலோரத்தில் தனித்து விளங்கும் காரைக்காலும் கவனத்தை ஈர்க்கும் திருத்தலம்தான்.

காரைக்கால் என்றால் உடனே காரைக்கால் அம்மையாரும் அங்கே நிகழ்ந்த மாங்கனித் திருவிழாவும் நினைவுக்கு வரும். அப்படித்தான் நாமும் திருநள்ளாறு முதலிய தலங்களுக்குச் சென்றுவிட்டு, காரைக்கால் அம்மையின் சந்நிதியைக் காணும் ஆவலில் சென்றோம். அந்தக் கோயிலுக்கு மிக அருகில் நம் கவனத்தை ஈர்த்தது ஒரு பெருமாள் திருக்கோயில்.

புதுச்சேரி மாநிலத்தின் காரைக்கால் மாவட்டம் தனித்துவம் பெற்றுத் திகழ்வது இத்தகைய ஆன்மிகப் பெருவிழாவால் என்றாலும், இன்னும் சிறப்புற்று விளங்குவது இந்தப் பெருமானின் ஆலயத்தால் என்பது உள்ளே சென்று பார்த்தபோது புரிந்தது.

காரைக்கால் பாரதியார் வீதியில், திருத்தமாக அமைந்த திருக்கோயில் முகப்பு. ராஜகோபுரத்துடன் நம்மைத் தன்பால் ஈர்த்து வரவேற்கிறது. 3 நிலை ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்கிறோம். கொடிமரத்தின் அடியில் வீழ்ந்து வணங்கி, சந்நிதிக்குள் சென்றாள், அங்கே திருவரங்கம் அரங்கநாதனைக் கண்டதுபோலே சயனக் கோலத்தில் அதே அளவில் பெருமான் சேவை சாதிப்பதைக் கண்டு, கண்களில் நீர்ப் பெருக்கு. உற்சவர் திருமேனி மிகப் பெரிதாக, அழகு கூடிய முகத்துடன் திருத்தமான அமைப்பில் திகழ்கிறது. பெருமாளின் காட்சியும் கொள்ளை அழகும் அங்கே தெய்வீக மணத்தைப் பரப்புகிறது.

உற்சவப் பெருமானின் உயரத்திலும் உருவத்திலும் மனம் ஈடுபட, கோயில் அர்ச்சகரிடம் விவரம் கேட்டோம். பெருமானை எழுந்தருளச் செய்து, உற்சவாதிகளை நடத்துவதற்கே பெரும் பலம் வேண்டும் போலே உள்ளதே என்று கேட்க, ஆலய கைங்கர்யபரர் ரங்கநாதன் அந்தத் தலத்தின் மகிமையையும் தல வரலாற்றையும் சொல்லத் தொடங்கினார்.

சுதாநாமபுரி என்ற பட்டினம் அது. முன்னொரு காலத்தில் ஒரு முறை அங்கே பஞ்சமும் வறட்சியும் ஏற்பட, மக்கள் பசியால் வாடினர். மக்களே பட்டினியில் தவிக்க, தேவர்களுக்கான வழிபாடுகளிலும் குறைவு ஏற்பட்டது. மக்கள் இறைவனிடம் வேண்டித் துதித்தனர். குறைதீர்க்கும் தாய் அம்பிகையை நாடித் துதித்து, தங்கள் குறை போக்க வேண்டினர். தேவர்களும், அன்னை பார்வதியும் சிவபெருமானிடம் முறையிட்ட, பெருமான் அவர்களுக்கு ஒரு உபாயம் கூறினார்.

திருப்பாற்கடலில் கண்வளர்ந்தருளும் பெருமானை வேண்டி பார்வதி தவம் மேற்கொள்ள வேண்டும். காக்கும் தெய்வம் திருமாலின் அருளால் அங்கே சுபிட்சம் வரும் என்று கூறினார்.

சிவபெருமான் வழிகாட்டியபடி, சுதாநாமபுரி என்ற இந்தப் பட்டினத்தில் அன்னை பார்வதி, சாகம்பரீ தேவியாக அமர்ந்து தவம் மேற்கொண்டாள். அன்னையின் தவத்துக்கு மனமிரங்கிய பெருமாள், அரங்கநாதனாகவே அவருக்கு பிரத்யட்சமானார். கிடந்த கோலத்தில் அவருக்கு ஸேவை சாதித்த பெருமாள், அம்பிகையிடம் தவத்தின் நோக்கம் கேட்டார். அன்னை அங்கே சுபிட்சம் நிலவ வரம் வேண்டினாள். மக்களின் பஞ்சத்தைப் போக்க வழி கேட்டாள். அதனைக் கேட்ட பெருமான், காவிரியின் கிளையாக அங்கே ஒரு நதியைத் திருப்பி விட்டார். பெருமானாகிய ஹரியின் சொல்லால் திரும்பப் பட்ட ஆறு என்பதால், அதற்கு அரி சொல் ஆறு என்று பெயர் ஏற்பட்டது. இதுவே பின்னர் அரசலாறு என்று மருவியது. அதன் பின்னர் அங்கே நீர்ச் செழிப்பு மிகுந்து, மக்களின் பஞ்சம் போனது என்பது இந்தத் தலத்தின் புராண வரலாறு.

இப்போது காரைக்கால் என்று அழைக்கப்படும் இந்தத் தலத்தின் புராணப் பெயர்தான் சுதாநாமபுரியாம். புண்டரீக மகரிஷிக்கும், பராசர மகரிஷிக்கும் பிரத்யட்சமான பெருமாள் இவர் என்கிறது தல புராணம்.

இங்கே பெருமாள் மூலவர் ரங்கநாதர் என்ற திருப்பெயரோடு திகழ்கிறார். உற்சவர் நித்யகல்யாணப் பெருமாள் என்ற திருநாமத்துடன் சேவை சாதிக்கிறார். இந்தப் பெருமான் பக்தர்கள் கேட்கும் வரங்களை எல்லாம் கொடுப்பவர் என்பதால், சகல கல்யாண குணங்களோடும், நித்ய கல்யாண குணங்களுடன் திகழும் பெருமான் என்பதால், இவருக்கு நித்யகல்யாணப் பெருமான் என்பது பெயராயிற்று.

இந்தத் தலம் குறித்து பிரும்மாண்ட புராணத்தில் ஒரு சுலோகத்தில் கூறப்பட்டிருக்கிறது என்றார் பெருமானின் கைங்கர்யபரர் ரங்கநாதன்.

இந்தக் கோயிலுக்கு மன்னர்கள் பலர் அவ்வப்போது தங்கள் திருப்பணிகளைச் செய்துள்ளனர். ஆலயத்தின் மண்டபக் கட்டடக் கலை பிற்காலச் சோழர் கைவண்ணமாகவும், உள் மண்டபமான வவ்வால் மண்டபம் சரபோஜி கால கட்டட அமைப்பிலும் திகழ்கின்றது. முன்னொரு காலத்தில் இங்கே பெருமானின் சந்நிதி மட்டுமே இருந்துள்ளது என்றும், சந்நிதி சுமார் 800 வருடத்துக்கு முற்பட்டது என்றும் தெரிகிறது.

இங்கே மூலவரான ரங்கநாதப் பெருமான், மிகத் திருத்தமான முக அமைப்போடு, சாந்தம் தவழும் புன்னகையுடன் காட்சி தருகிறார். பெருமான் மிகப் பிரும்மாண்ட உருவம். அங்கே திருவரங்கத்தில் காட்சி தரும் பெருமானின் அளவுக்குக் குறவின்றி இங்கேயும் பெருமான் அதே கோலத்தில் தரிசனம் தருகிறார். ஆயினும் பெருமான் ஆதிசேஷனின் மீது பள்ளி கொண்ட கோலத்தின் விஸ்தீர்ணத்துக்கு ஏற்ற அளவில் ஆதிசேஷனின் ஐந்து தலை முக அளவு இல்லை. சிலா வடிவமைப்பில், சற்றே சிறியதாக உள்ளது. பெருமாள் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்தில் கிடந்த கோலத்தில் சேவை சாதிப்பது சிறப்பு.

அடுத்து சுற்றுப் பிராகாரத்தில் ரங்கநாயகித் தாயாரின் சந்நிதி தனியாக உள்ளது. தாயார் அழகுக் கோலத்தில் திகழ்கிறார். பிராகார வலம் வரும்போது, சுவர் எங்கும் சிலா ரூபங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

கலியுகத்தில் வேதங்களின் உட்பொருள்களை எளிதில் உணர்த்துவன புராணங்கள். இப்புராணங்களூள் பதினெட்டை ஸ்ரீவியாஸர் அருளிச் செய்தார். இப்புராணங்களின் முதன்மையானது ஸ்ரீமத் பாகவதம். ஸ்ரீமகாவிஷ்ணு எடுத்த அவதாரங்கள் பலவாயினும் அவற்றில் முக்கியமான இருபத்திரண்டு அவதாரங்களை வியாஸர் ஸ்ரீமத் பாகவதத்தில் விவரிக்கின்றார். அதனை அடிப்படையாகக் கொண்டு முதல் மனிதர்களான சதரூபை – ஸ்வாயம்புவ மனுவைப் படைத்த பிரம்மா முதல் மீண்டும் தர்மம் நிலைக்க எடுக்கப் போகும் கல்கி அவதாரம் வரை இருபத்திரண்டு அவதாரங்களின் சிலா ரூபங்கள் இங்கே செதுக்கி வைக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.

மேலும் ஸ்ரீரங்கநாதர், பூரி ஜெகந்நாதர், அயோத்தி ஸ்ரீராமர், குருவாயூரப்பன், வேங்கடாசலபதி, மதுரா கிருஷ்ணர், விட்டல பாண்டுரங்கன், ஸ்ரீவைகுண்டப் பிரான், விச்வரூப தர்சனப் பெருமான் என பாரதத்தின் புகழ்பெற்ற ஆலயங்களில் உள்ள பெருமான்களின் புடைப்புச் சிற்பங்கள் வெகுவாக நம்மை ரசிக்கத் தூண்டுகின்றன.

பிராகார வலத்தில் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சந்நிதி, ஸ்ரீமணவாள மாமுனிகள் சந்நிதி ஆகியவற்றையும் தரிசிக்கிறோம்.

வெள்ளிரதம் – ஒன்று இப்போது புதிதாக செய்யப்பட்டு வருகிறது. ரூ.7.25 லட்சம் செலவில் மரத்தால் செய்யப்பட்டு வெள்ளியால் கவசம் வேயப்படவுள்ளது. இதற்கான நன்கொடைகளை தேவஸ்தானம் பெற்று வருகிறது. அது குறித்த அறிவிப்புப் பலகையும் வைத்துள்ளார்கள்.

பொதுவாக வைணவ ஆலயங்களில் நடைபெறும் அனைத்து விழாக்களும் குறைவின்றி இங்கே நடக்கின்றனவாம். இங்கே 7 தல பெருமாள்களின் தீர்த்தவாரி உற்ஸவம் சிறப்பாக நடைபெறுகிறது.

வீட்டில் கெட்டிமேளச் சத்தம் கேட்க இங்கே பக்தர்கள் பெருமளவில் வேண்டிக் கொள்கிறார்கள்,., குடும்பத்தில் சுபிட்சம் நிலவ, வறட்சியும் பஞ்சமும் போக பெருமானை இங்கே வழிபடுகிறார்கள். பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்வித்து, வஸ்திரம் சாத்த வேண்டுதல் மேற்கொள்கிறார்கள். சகல நலன்களும் அருளும் அரங்கநாதப் பெருமாளை மனத்தில் வேண்டியபடியே நாமும் வலம் வந்து வெளிவருகிறோம்.

விவரங்கள் அறிய: 04368-222717 / 94437 86774 / 97888 99677

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe