கேரளாவில் சபரிமலையை போன்றே பழமையான அமைப்புடன் பதினெட்டு படிகளை உள்ளடக்கி, சபரிமலை கோவிலை போன்றே ஆச்சார அனுஷ்டானங்களை பூஜைகளை கடைபிடித்து வரும் ‘புத்தன் சபரிமலை” எனும் கோவில் உள்ளது. இங்கே அனைத்து வயது பெண்களும் பதினெட்டு படிகள் வழியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த புத்தன் சபரிமலை அய்யப்பன் கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது, பழமையானது. இங்கும் அடர்ந்த வனப்பிரதேசம் ஒரு காலத்தில் இருந்துள்ளது! கொடும் காட்டு விலங்குகள் வாழ்ந்த இந்த புத்தன் சபரிமலையில் முன்னர் பக்தர்கள் அவ்வளவாக சென்றதில்லை

சுமார் நூறு வருடங்களாக மட்டுமே இருமுடி கட்டி பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். தற்போது பிரதான சபரிமலை அமைந்துள்ள இதே பத்தனம்திட்டா மாவட்டத்தில் திருவல்லாவில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் தடியூர் எனும் இடத்தில் மிக புராதனமான ஆலயமாக பழமை மாறாது காணப்படுகிறது இந்த புத்தன் சபரிமலை ஐயப்பன் ஆலயம்.

பிரதான சபரிமலை கோவிலுக்கு இணையான தெய்வ சக்தி இங்கும் பரந்து விரிந்துள்ளதாக கூறப்படுகிறது. சபரிமலையில் உள்ளது போன்றே அதே வடிவிலான ஐம்பொன்னால் ஆன ஐயப்பன் விக்கிரகம் இங்கும் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டுள்ளது.

இங்குள்ள 18 படிகளும் கருங்கற்களால் சபரிமலையில் உள்ளது போன்றே செங்குத்தாக அமையப்பெற்றுள்ளது. இங்கு அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட்டாலும் இருமுடி கட்டு இல்லாத எவர் ஒருவரும் படிக்கட்டுக்கள் மீது செல்ல அனுமதிக்கப் படுவதில்லை.

இருமுடி கட்டு இல்லாதவர்கள் கோவிலின் வடக்கு பகுதி வழியாக செல்லவே அனுமதிக்கப்படுகிறார்கள். சபரிமலையில் பின்பற்றப்படும் பூஜைகளும் வழிபாட்டு முறைகளும் அபிஷேக வகைகளும் குறிப்பாக சந்தனாபிஷேகம், நெய்யபிஷேகம், பூ அபிஷேகம் போன்றவை அப்படியே சற்றும் மாறாது இங்கும் கடைபிடிக்கப் படுகிறது.

சபரிமலையைப் போன்றே ஒவ்வொரு மலையாள மாதம் ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை பக்தர்கள் இங்கும் ஐயப்பனை வழிபட அனுமதிக்கப்படுகிறார்கள். சபரிமலையைப் போன்றே அப்பமும் அரவணை பாயசமும் இங்கும் பிரதான பிரசாதங்கள்.

தை முதல் நாளில் மகர சங்கராந்தியன்று எப்படி சபரிமலையில் மகர விளக்கு காணப்படுகிறதோ அவ்வாறே இங்கும் மகரவிளக்கு தரிசனத்தை பக்தர்கள் காணலாம். எல்லாவற்றையும் விட சபரிமலை தந்திரியாக செயல்படுபவர்களே இங்கும் தந்திரியாக செயல்படுகிறார்கள்.

எல்லா வகைகளிலும் பிரதான சபரிமலைக்கு இணையாகக் காணப்பட்டு வரும் இந்த புத்தன் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சபரிமலைக்கு போய்த்தான் ஐயப்பனை வணங்குவோம் என்று அடம் பிடிக்கும் பெண்கள், அதே போன்ற இந்த புத்தன் சபரிமலைக்கு அதிகம் வரலாம்.

எனவே பிரதான சபரிமலைக்கு செல்ல முடியாத 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் விரதமிருந்து இருமுடி கட்டிக் கொண்டு இந்த புத்தன் சபரிமலை என்று அழைக்கப்படும் ஐயப்பன் கோவிலில் உள்ள புராதன 18 படிக்கட்டுக்கள் வழியே கடந்து சென்று ஐயனை வழிபடலாமே!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...