Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் திருப்பாவை – 5; மாயனை மன்னு (பாடல் விளக்கம்)

திருப்பாவை – 5; மாயனை மன்னு (பாடல் விளக்கம்)

திருப்பாவை பாசுரம் 5 மாயனை மன்னு
thiruppaavai pasuram 5 mayanai mannu
andal-vaibhavam

ஆண்டாள் நாச்சியார் அருளிய
திருப்பாவை! (பாடலும் விளக்கமும்)

விளக்கம்: வேதா டி. ஸ்ரீதரன்

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய் (5)

பொருள்

கண்ணன் பெரிய மாயாவி; மதுராபுரியில் அவதரித்தவன்; பெருகி ஓடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவன்; ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவன்; தேவகியின் வயிற்றில் தோன்றியவன். இப்படிப்பட்ட அவனைக் காண்பதற்காக நாம் அனைவரும் தூய்மையாக நீராடி, அவனை அணுகி, மணம் வீசும் மலர்களால் அர்ச்சிப்போம். அவனை மனதில் இருத்தி அவன் புகழைப் பாடினாலே போதும், நாம் ஏற்கெனவே செய்த பாவங்களும், இனிமேல் செய்ய இருக்கும் பாவங்களும் முழுமையாக எரிந்து சாம்பலாகிவிடும்.

அருஞ்சொற்பொருள்

மாயன் – மாயாவி, கள்ளன், வேஷம் போடுபவன், உள்ளதை மறைத்து இல்லாததைக் காட்டுபவன்

மன்னு – சிறப்புடைய, பகவானுடன் தொடர்புடைய

தூய பெருநீர் – புனித நதி

யமுனைத் துறைவன் – யமுனைத் துறையில் உறைபவன்

அணிவிளக்கு – மங்களமான ஒளி

தூயோமாய் – உடல், மனத் தூய்மை உள்ளவர்களாக

தூமலர் – அன்றலர்ந்த தூய மலர்

போய பிழை – இதுவரை செய்த பாவங்கள்

புகுதருவான் நின்றன – இனிமேல் செய்யப்போகும் பாவங்கள்

ஆயர்குலத்தினில் தோன்றும் அணிவிளக்கு – ஆயர்குலம் செய்த தவத்தின் பயனாக அதில் அவதரித்த புனிதன்

போயபிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் – முக்காலத்தில் செய்யப்படும் பாவங்களும் அனலில் இட்ட தூசு போல இல்லாது ஒழியும். சிறிதும் மீதமில்லாமல் மொத்தமாக எரிந்து சாம்பலாகும்.

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை, தூயபெருநீர் யமுனைத் துறைவனை, ஆயர்குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை, தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைச் செப்பு. போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் என்று அமைத்துப் புரிந்து கொள்ளலாம்.

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க – உடலும் மனமும் ஒருங்கே இணைந்து பகவானைத் துதிக்க வேண்டும்.

மொழி அழகு

பொதுவாகவே, பாசுரங்களில் வினையாலணையும் பெயர்கள் அதிகம் இடம்பெறும். ஆண்டாள் பாசுரங்களில் அவற்றின் பங்கு மிகவும் தூக்கலாக இருக்கும். யமுனைத் துறைவன், புகுதருவான் நின்றன முதலியவை இந்த வகை.

***

அணிவிளக்கு, தாயைக் குடல் விளக்கம் செய்த – விளக்குதல் என்ற சொல்லின் இரு வேறு பொருள்கள் காட்டும் அழகு குறிப்பிடத் தக்கது. மேலும், இந்த இரு பிரயோகங்களையும் சேர்த்துப் பார்க்கும்போது ஸ்ரீராமனைப் பெற்றெடுத்த கௌசல்யை ஒளியுடையவள் ஆனாள் என்ற வால்மீகி ராமாயண வரியும் நினைவுக்கு வருகிறது.

ஆன்மிகம், தத்துவம்

மாயன் என்றால் மாயாவி. அதாவது, இருப்பதை மறைத்து இல்லாததைக் காட்டுபவன், வேடிக்கை வினோதன், பொய்யன், உண்மையைத் திரிப்பவன் என்றெல்லாம் பொருள்.

பாசுரத்தில் வரும் தாமோதர நாமாவுக்கு ஆண்டாள் கொடுத்துள்ள அடைமொழி தாயைக் குடல்விளக்கம் செய்த என்பது. இதற்கு ‘அவதார புருஷனைத் தாங்கிய அந்தத் தேவகியின் வயிறு விளக்கப்பட்டுத் தூய்மை அடைந்தது’ என்று பொருள் கொள்ளலாம். எனினும், தேவகியின் கர்ப்பம் எவ்வளவு பெருமைக்குரியது என்பதை உலகம் முழுவதற்கும் விளக்கிக் காட்டுவதற்காக அவளது வயிற்றில் வந்து உதித்தான் என்று பொருள் கொள்வது சிறப்பு.

தாமம் என்றால் கட்டு. உதரம் என்றால் வயிறு. தாமோதரன் என்றால் வயிற்றில் கட்டை உடையவன் என்று பொருள். யசோதையால் உரலில் கட்டிப் போடப்பட்டதால் அவனுக்கு இந்த நாமா. தாயைக் குடல் விளக்கம் செய்த என்பதற்கு, தனது வயிற்றில் போடப்பட்ட கட்டினால் ஏற்பட்ட தழும்பின் மூலம் யசோதையின் பெருமையை விளங்கச் செய்த என்றும் பொருள் கொள்ள முடியும். தாமம் என்றால் இருப்பிடம் என்றும் பொருள். அதாவது, ஜீவாத்மாக்கள் உறையும் இடமாகிய இந்தப் பிரபஞ்சத்தையே தனக்குள் (வயிற்றில்) அடக்கியவன் என்பதாலும் அவன் தாமோதரன்.

அண்ட சராசரத்தையும் தனக்குள் அடக்கியவன், தன்னை ஒரு தாயின் வயிற்றுக்குள் அடக்கிக்கொண்டான், இன்னொரு தாயோ அவனைக் கயிற்றால் கட்டிப் போட்டாள். இவ்விதம் அந்தப் பரமாத்மா, கட்டுண்டு கிடப்பவனாகத் தன்னைக் காட்டி நிற்கிறானே – இவனை மாயாவி என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பதாம்?

***

தூய பெருநீர் யமுனை –

கங்கே ச யமுனே சைவ கோதாவரீ ஸரஸ்வதீ
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸந்நிதிம் குரு என்பார்கள்.

நதிகள் அனைத்துமே புனிதமானவை. எனினும், கங்கை, யமுனை, கோதாவரி, ஸரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய ஏழு நதிகள் மிகவும் விசேஷமாகக் கொள்ளப்படுகின்றன. நமது புண்ய க்ஷேத்திரங்களில் பெரும்பாலானவை இவற்றின் கரைகளில் அமைந்திருப்பதும் குறிப்பிடத் தக்கது.

***

aandal

மன்னு வடமதுரை –

அயோத்யா மதுரா மாயா காசீ காஞ்சீ அவந்திகா
புரீ த்வாராவதீ சைவ ஸப்தைதா மோக்ஷதாயிகா

அயோத்தி, மதுரா, ஹரித்வார், வாராணசி, காஞ்சிபுரம், அவந்தி, புரி, த்வாரகை ஆகிய ஏழும் மோக்ஷபுரிகள் எனப்படுபவை. நாட்டில் எத்தனையோ க்ஷேத்திரங்கள் இருந்தாலும் இவை ஏழும் சிறப்பாகப் பேசப்படுவதற்குக் காரணம், இவை நமது கல்விப் பாரம்பரியத்துடன் தொடர்புடையவை என்பதே. இவற்றில் ஏராளமான குருகுலங்கள் இருந்தன. எத்தனை எத்தனை மாணவர்கள் வந்தாலும், அவர்களுக்கு உணவளித்துப் பராமரிப்பதுடன், அவர்களுக்குத் தேவையான கல்விச் செல்வத்தையும் முழுமையாக அளித்த பெருமை இவற்றைச் சேரும்.

நாடு முழுவதும் குருகுலங்கள் இருந்தாலும், இவை விசேஷமாகச் சொல்லப்படுவதற்குக் காரணம், இவற்றில் எல்லாவித அறிவுத் துறைகளுக்கும் ஆசிரியர்கள் இருந்தார்கள் என்பதே. இந்த ஏழு நகரங்களிலும் காசி மிகவும் விசேஷமானது. அங்கே ஏராளமான அறிஞர்கள் வாழ்ந்து வந்தனர். எனவே, காசி மாநகரம் இந்தியாவின் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தது.

உலகின் எந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவனாக இருந்தாலும், எத்தகைய துறையில் மேல் படிப்புப் படிக்க வேண்டும் என்றாலும், மோக்ஷபுரிகளில் ஏதாவது ஒரு நகரத்துக்கு – குறிப்பாக காசிக்கு – வந்து தனக்குத் தேவையான கல்வியைப் பெற்றுச் செல்ல முடியும். இதனால், பல மாணவர்கள் உயர்கல்விக்காகக் காசிக்குச் செல்லும் வழக்கம் இருந்தது. வயதான பெற்றோர்களைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பைச் சுமக்கும் மாணவர்கள் காசி சென்று விட்டால், எப்படித் தனது பெற்றோர்களுக்குக் கடமை செய்ய முடியும்? இதனால், ஆர்வமாகப் படிக்கச் செல்லும் மாணவனை அவனது பெற்றோரும் உற்றாரும் உறவினரும் தடுத்து, அவனுக்குத் திருமணம் செய்வித்து குடும்பப் பொறுப்பைக் கவனித்துக் கொள்ளுமாறு பணிப்பதும் உண்டு.

இதையே தற்காலத் திருமணங்களில் ‘காசி யாத்திரை’ என்ற பெயரில் ஒரு சடங்காகக் கடைப்பிடிக்கிறார்கள். வெறும் கேலிச் சடங்காகக் காணப்பட்டாலும், அது இந்தியாவின் மகோன்னதமான கல்விப் பாரம்பரியத்தைக் குறிப்பால் உணர்த்துகிறது.

***

தூமலர் –

மலர் மென்மையானது, தூய்மையானது. அது இறைவனுக்கு அர்ப்பணமாவதற்காகவே உருவாகிறது. எனவேதான், ஆலயங்களில் நந்தவனங்கள் பெரிய அளவில் ஏற்படுத்தப்பட்டன. திருப்பதி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட ஏராளமான தலங்களில் நந்தவனங்கள் மிகவும் பிரசித்தம். அடியார்கள் எத்தனையோ பேர் நந்தவன கைங்கரியத்தில் ஈடுபட்டவர்கள்தான். தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் பெரியாழ்வாரும் நந்தவன கைங்கரித்துக்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். ஆண்டாள், மனித வழி அல்லாமல் சுயம்புவாகப் பிறப்பெடுத்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் நந்தவனத்தில்தான்.

யமுனைத் துறைவன்

கோகுலம் முழுவதும் பல விகாரங்கள் (அரண்மனை போன்ற பெரிய இல்லங்கள்) இருந்தனவாம். இதனால் கோகுலவாசியான கிருஷ்ணன் ‘விகாரி’ (விகார வாசி = விகாரங்களில் வசிப்பவன்). அவன், மாடுகளை மேய்ப்பதற்காக, யமுனையை ஒட்டிய காட்டுப் பகுதிகளில் சுற்றித் திரிந்தவன். இதனால், பக்தர்கள் மத்தியில் அவனுக்கு ‘வன் கே விகாரி’ (வன் = வனம்; வன் கே விகாரி = வனத்தைச் சேர்ந்த விகார வாசி) என்றும் ஒரு செல்லப் பெயர் உண்டு. இதுவே திரிபடைந்து ‘பன் கே பிகாரி’ என்று ஆகி, பேச்சு வழக்கில் பங்கே பிகாரி என்று உருமாறியது. வட பாரதத்தில் இந்த நாமா மிகவும் பிரசித்தம். தமிழில் இதற்கு இணையான பெயர் யமுனைத் துறைவன் (யமுனைக் கரையைச் சேர்ந்தவன்).

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version