Home லைஃப் ஸ்டைல் திருப்பாவை- 13; புள்ளின்வாய் கீண்டானை (பாடலும் விளக்கமும்)

திருப்பாவை- 13; புள்ளின்வாய் கீண்டானை (பாடலும் விளக்கமும்)

thiruppavai pasuram 13
thiruppavai pasuram 13
thiruppavai pasuram 13

திருப்பாவை; பாசுரம் – 13

விளக்கவுரை: வேதா டி.ஸ்ரீதரன்

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய். (13)

பொருள்

கண்ணழகு மிக்க பெண்ணே, இரவின் இருள் மறைந்துவிட்டது. கீழ்வானத்தில் ஒளிக்கற்றைகள் எழுந்துவிட்டன. பறவைகள் கானம் இசைக்கின்றன. பறவை வடிவத்தில் வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழித்தவன், பொல்லாத ராவணனின் தலைகளைக் கொய்தவன். அப்படிப்பட்ட ஸ்ரீமன் நாராயணனின் புகழைப் பாடியபடியே நம் தோழியர் எல்லோரும் பாவை விரதம் இருக்கும் இடத்துக்குச் சென்றுவிட்டார்கள். இது நோன்புக் காலம் அல்லவா? எங்களுடன் சேர்ந்து குளிர்ந்த நீரில் குளிக்க வராமல் படுக்கையில் கிடக்கிறாயே! இது சரியா? தூங்குவது போலப் பாசாங்கு செய்வதை விடுத்து, எங்களுடன் சேர்ந்து நீயும் நீராட வா.

அருஞ்சொற்பொருள்

புள் – பறவை

கீண்டான் – பிளந்தவன்

கிள்ளிக் களைந்தான் – கிள்ளி எறிந்தவன்

கீர்த்திமை – புகழ்ச்சி

பாவைக்களம் – பாவை நோன்பு நடைபெறும் இடம்

புக்கார் – போய்ச்சேர்ந்தனர்

போதரிக் கண்ணினாய் – மலர் போன்ற கண்ணழகு உடையவளே

குள்ளக் குளிரக் குடைந்து நீராடுதல் – குளிர்ந்த நீரில் துளைத்துத் துளைத்து நீச்சலடித்துக் குளித்தல்

பள்ளிக் கிடத்தியோ – படுக்கையில் இருந்து எழாமல் இருக்கிறாயே

நன்னாளால் – நல்ல நாளும் அதுவுமாக

கள்ளம் தவிர்ந்து கலந்து – உறங்குவது போலப் பாசாங்கு செய்யாமல் எழுந்து வந்து தோழியருடன் இணைந்து (பாவைக் களத்துக்கு வந்து சேர்வாயாக.)

புள்ளின் வாய் கீண்டது – பறவை வடிவில் வந்த பகாசுரனை வதம் செய்தது.

பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தது – தீயவனான ராவணனின் பத்துத் தலைகளையும் விளையாட்டாகக் கொய்து எறிந்து அவனை வதைத்தது. அரக்கர்களில் நல்லவர்களும் உண்டு (உ-ம் விபீஷணன்). எனவே, பொல்லா அரக்கன் என்பது ராவணனைக் குறித்தது.

குள்ளக் குளிரக் குடைந்து நீராடுதல் – குளத்தில் நீராடுவதையும் குறிக்கும், பகவந் நாம சங்கீர்த்தனத்தில் மூழ்கித் திளைப்பதையும் குறிக்கும்.

மொழி அழகு

ராவணனின் பத்துத் தலைகளையும் விளையாட்டாகக் கிள்ளி எறிந்தானாம் ஸ்ரீராமன். அது என்ன கிள்ளி எறிவது? இவ்வாறு ஆங்காங்கே குழந்தை பாஷையில் சொல்வது ஆண்டாளின் தனிச்சிறப்புகளில் ஒன்று.

andal-srivilliputhur-2

***

போதரிக் கண்ணினாய் –

போதரிக் கண்ணினாள் என்றால் போதரிக் கண்களை உடையவள். போதரிக் கண்ணினாய் என்பது அதன் விளிச்சொல். போது என்பது பொதுவாக மலரையும், சிறப்பாக, தாமரை அல்லது குவளை மலரையும் குறிப்பது. அரி என்பதற்கு வண்டு என்று பொருள் கொண்டால், வண்டுகளை ஈர்க்குமளவு அழகும் தேனும் நிரம்பப் பெற்ற தாமரை என்று பொருள். அரி என்பதைக் கவர்தல் என்று பொருள் கொண்டால் தாமரையின் அழகைக் கவர்ந்து தன் கண்களாகக் கொண்ட பெண் (அதாவது, தாமரையை விஞ்சிய அழகுமிக்க கண்களை உடையவள்) என்று பொருள்.

ஆன்மிகம், தத்துவம்

நல்ல விஷயத்துக்குப் போவதானால் நமது மனம் இல்லாத பொல்லாத சாக்குப் போக்கெல்லாம் சொல்கிறது, பாசாங்கு செய்கிறது. குளிர், மழை, வெயில் முதலிய அற்ப காரணங்களைக் கூறுகிறது. இவற்றை விடுத்து சத்சங்கத்தில் இணைய வேண்டும் என்பதையே கள்ளம் தவிர்ந்து கலந்து என்று கூறுகிறாள்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version