Home ஆன்மிகம் திருப்பாவை திருப்பாவை – 27; கூடாரை வெல்லும்சீர் (பாடலும் விளக்கமும்)

திருப்பாவை – 27; கூடாரை வெல்லும்சீர் (பாடலும் விளக்கமும்)

ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை
பாடலும் விளக்கமும்!

விளக்கம் : வேதா டி.ஸ்ரீதரன்

** கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய். (27)

பொருள்

தன் திருவடிகளைச் சரண் அடையாதவர்களையும் ஆட்கொண்டு அருள்புரியும் கோவிந்தனே, உன்னைப் போற்றிப் பாடி நாங்கள் மேலான வரங்களையே யாசிக்கிறோம். எனவே, எங்களின் இந்த விரதத்தை உன் அடியார்கள் அனைவரும் பாராட்டுவார்கள். உனது அருளினாலும், மேலோரின் ஆசிகளாலும் நாங்கள் மேன்மை அடைவோம். (நோன்பு முடிந்ததும்) நாங்கள் எங்கள் கைகளிலும் கழுத்திலும் கால்களிலும் என உடல் முழுவதும் நகைகள் அணிந்து, புத்தாடைகளை உடுத்திக்கொண்டு, அனைவருமாகச் சேர்ந்து நெய் தளும்பும் பால் சாதம் அருந்தி, விரதத்தை நிறைவு செய்வோம்.

(இந்த 27 வது பாசுரம் ஆண்டாள் நோன்பின் நிறைவைக் குறிக்கிறது. இதையொட்டி மார்கழி மாதத்தின் 27 ஆம் நாள் கூடாரவல்லி என்று கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வைணவர்கள் சர்க்கரைப் பொங்கல் உண்டு, ஆண்டாளின் விரத நிறைவை மகிழ்ச்சியுடன் நினைவுகூர்வார்கள். இந்தச் சர்க்கரைப் பொங்கலுக்கு ‘கூடாரை வெல்லும் சீர்ச் சர்க்கரைப் பொங்கல்’ அல்லது ‘கூடாரைப் பொங்கல்’ என்று பெயர். இதனால் இந்தப் பாசுரத்துக்கு ‘சர்க்கரைப் பொங்கல் பாட்டு’ என்ற கேலிப்பெயரும் உண்டு.)

அருஞ்சொற்பொருள்

கூடார் – கைக்கொள்ளக் கூடாத பழக்கங்களை உடையவர், நற்செயல்களுக்கு முரணான செயல்களை உடையவர்

சம்மானம் – சன்மானம், பரிசு, பயன் (வரம்)

நாடு புகழும் பரிசு – மேலோரால் பாராட்டப்படும் பரிசு (வரம்)

சூடகம் – வளையல்

தோள்வளை – தோளில் அணியப்படும் பாகுவலயம் எனப்படும் வளையல்

தோடு – காதின் கீழ்ப்பகுதியை அலங்கரிக்கும் நகை

செவிப்பூ – காதின் மேற்பகுதியை அலங்கரிக்கும் நகை

பாடகம் – கால் கொலுசு (பாத கடகம்)

அனைய – போன்ற

கலன் – அணிகலன், நகை

ஆடையுடுப்போம் –

புத்தாடை உடுப்போம் என்பது பொருள். விலை உயர்ந்த பட்டாடை உடுப்பதாகவும் சொல்லலாம். ‘அவன் உடுத்துக் களைந்த ஆடைகளை மட்டுமே உடுப்போம்’ என்பது உரையாசிரியர்கள் தரும் விளக்கம்.

ஆண்டாள் வர்ணிக்கும் நகைகளும், சாதத்தை மூடும் அளவு சொரியப்படும் நெய், முழங்கை வழி வார முதலிய வர்ணனைகளும் தேசத்தின் செழிப்பைக் குறிப்பவை. மாடு என்றாலே செல்வம் என்றுதான் பொருள். பால், நெய் முதலானவையும் செல்வத்தின் வெளிப்பாடுகளே.

கூடியிருந்து குளிர்ந்து –

விரதம் அல்லது நோன்பு என்பது புலனடக்கம். அதில் உணவுக் கட்டுப்பாடுகள் முக்கியம். விரத நிறைவின்போது சமுதாயத்தில் பலரை வீட்டுக்கு அழைத்து விருந்தளிப்பது காலம் காலமாக இருந்துவரும் மரபு. இதுவே கூடி இருந்து உண்பது.

விரதம் என்பது தவத்துக்கு ஒப்பானது. தவம் என்பது வெம்மையானது. எனவே, விரத நிறைவு குளிர்ச்சியானது.

thiruppavai pasuram27

விரதத்தின் நிறைவு

இந்தப் பாசுரத்தில் பாவையின் நிறைவை ஆண்டாள் பாடுவது வாஸ்தவமே. ஆனால், திருப்பாவையில் பாவை எந்த நாளில் தொடங்கப் பெற்றது, எப்போது நிறைவடைந்தது என்பதற்கான குறிப்புகள் எதுவுமில்லை. எனினும், ஆண்டாள் தன்னை ஆயர் சிறுமியாகவே பாவித்துத் திருப்பாவை பாடி இருப்பதால், அவள் கோபிகைகள் அனுஷ்டித்த காத்யாயினி நோன்பையே பாவை என்ற பெயரில் குறிக்கிறாள் என்று கொள்ள முடிகிறது.

கோபிகைகள் மார்கழி முழுவதும் விரதம் அனுஷ்டித்தனர் என்பது பாகவதம் தரும் செய்தி. ஆண்டாளும், தான் நோற்கும் பாவை நோன்பை மார்கழி நீராட்டமாகவே பாடி இருக்கிறாள். எனவே, பாவை என்பது மார்கழியில் அனுஷ்டிக்கப்படும் நோன்பு என்பது தெளிவு.

இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் சொல்லும் விஷயங்கள் அனைத்தும் விரதத்தின் பயனையும் நிறைவையும் விளக்குகின்றன. எனவே, பாவை விரதம் இத்துடன் (மார்கழி 27 வது நாளுடன்) நிறைவடைகிறது என்று கொள்ளத் தோன்றுகிறது.

திருப்பாவையில் அவள் முப்பது பாசுரங்கள் பாடி இருக்கிறாள். இவற்றை மார்கழி மாதத்தின் ஒவ்வொரு தினத்துக்கும் ஒரு பாசுரம் என்று கொள்வது மரபு. அந்தந்த தினத்தை அந்தந்தப் பாசுர வரியால் குறிப்பது தமிழர்களிடையே – குறிப்பாக, வைணவர்களிடையே – சகஜமாகக் காணப்படும் பழக்கம். இதன்படி விரத நிறைவைப் பாடும் கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா பாசுரம் 27 வது தினத்தைக் குறிப்பதால், மார்கழியின் 27 வது தினம் ஆண்டாளின் விரத நிறைவைக் குறிப்பதாகக் கொள்ளும் வழக்கம் வந்திருக்கிறது,

ஆனால், நோன்பு இத்துடன் முடிவடையவில்லை என்று கொள்வதும் சரியானதே. காரணம், ஆண்டாள் வேண்டும் பறை என்ன என்பதற்கான முழுமையான விளக்கம் 29 வது பாசுரத்தில்தான் வருகிறது. மேலும், அவள் நோற்ற நோன்பினால் நமக்கு என்ன பிரயோஜனத்தை அவள் அருள்கிறாள் என்பது 30 வது பாசுரத்தில்தான் சொல்லப்படுகிறது.

நோன்பின் நிறைவாக அவள் இந்தப் பாசுரத்தில் சொல்லும் பால்சோறும் குறிப்பிடத் தக்கதே. காரணம், மார்கழி முடிந்ததும் தை பிறக்கிறது. அதன் முதல் நாள் தான் மகர சங்கராந்தி. இது சூரிய வழிபாட்டுக்கானது. தென்னிந்தியாவில் – குறிப்பாக, தமிழ்நாட்டில் – இது அறுவடைத் திருநாளாகவும் திகழ்கிறது. தமிழகத்தில் இந்தத் திருநாளின் பெயரே பொங்கல் என்பதுதான். பொங்கல் தினத்தன்று தண்ணீர் சேர்க்காமல் முழுவதும் பாலினால் பொங்கல் பொங்குவது பாரம்பரியப் பழக்கம். ஆண்டாள் குறிப்பிடும் பால்சோறு என்பது இதையே குறிக்கிறது என்று கொள்வதும் பொருத்தமே.

எனவே, பாவை நோன்பு மார்கழி முழுவதும் அனுஷ்டிக்கப்படுவது என்று கொள்வதும் சரியே.

மொழி அழகு

சீர் –

பகவந்நாமாவுக்கு விளக்கம் தரும் விதத்தில் ஆண்டாள் சேர்க்கும் உரிச்சொற்கள் சுவை மிக்கவை. உதாரணமாக, இந்தப் பாசுரத்தில் கோவிந்த நாமாவைச் சொல்கிறாள். அதற்கு அவள் சேர்த்துள்ள உரிச்சொல் ‘சீர்’ என்பது.

கூடாதாரை சௌரியத்தாலும் (வீரத்தாலும்), கூடுவோரை (பக்தர்களை) சௌந்தரியத்தாலும் (அழகாலும்) சுசீலத்தாலும் (நன்னடத்தையாலும்) சௌலப்யத்தாலும் (எளிமையாலும்) வெல்லும் சீர்மை படைத்ததால் அவன் சீர்மையுள்ள கோவிந்தன். எதிரிகளை வெல்லும் ஆற்றல் படைத்த அவன், பக்தர்களிடம் தோற்றுப் போகும் சீர்மை கொண்டவன். கூடாரை வெல்லும் என்று சொன்னது கூடுவோரிடம் தோற்பதையும் சேர்த்தே குறிப்பதாக உரையாசிரியர்கள் விளக்குகிறார்கள்.

***

பால்சோறு மூட –

நெய்யின் அளவை ஆண்டாள் குறிக்கும் விதம் அலாதியானது. நெய் பெய்து என்று சொல்லி, ஆழிமழைக் கண்ணா பாசுரத்தில் வேண்டப்பட்ட மழையை நினைவூட்டுகிறாள். அதுவும் போதவில்லை போலும். முழங்கை வழி வார என்று அடுத்த வரியில் சொல்கிறாள். அளவுக்கதிகமான என்பதை இவ்வளவு ரசமாகச் சொல்லிக் காட்டவும் முடியுமா?

***

சூடகமே, தோள்வளையே, தோடே, செவிப்பூவே, பாடகமே –

இந்தப் பாடலுக்குத் தமிழ் அகப்பொருள் சார்ந்த மரபின் படி தரப்படும் விளக்கமும் உண்டு.

தலைவன், தலைவியை  முதலில் கையால் பற்றுகிறான். அந்தக் கைக்குச் சூடகம். பின், தோளைப் பற்றுகிறான். அந்தத் தோளுக்குத் தோள்வளை. காதில் கிசுகிசுக்கிறான். அக்காதுக்குத் தோடு. தலையணை மந்திரம் என்பதுபோல, காதுக்குச் செவிப்பூ. பின்னர், தலைவியின் கால்களை வருடுகிறான். அக்கால்களுக்குப் பாடகம்.

ஆன்மிகம், தத்துவம்

கோவிந்தன் –

பெயர்களுக்கு அப்பாற்பட்ட அவனுக்கு ஆயிரக்கணக்கான பெயர்களைச் சூட்டி மகிழ்வது அடியார் இயல்பு. இருப்பினும், இவற்றில் பன்னிரண்டு நாமாக்கள் முக்கியமானவையாகக் கொள்ளப்படுகின்றன. அவற்றில் முதன்மையானது கோவிந்த நாமா. ஸ்ரீகிருஷ்ணன் கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்து கோகுலம் காத்து நின்றதன் மூலம் இந்திரனின் அகந்தையை ஒழித்தான். இதைத்தொடர்ந்து இந்திரனால் அவனுக்குச் சூட்டப்பட்டதே கோவிந்தன் என்னும் பெயர். வலக்கை இடக்கை வேறுபாடு கூடத் தெரியாத பரம அப்பாவிகளும், நூலறிவு இல்லாதவர்களுமான கோகுலத்து ஆயர்களாலும் எளிதாக உச்சரிக்கப்படும் பெயராக இருக்க வேண்டும் என்பதால் பெருமாளை கோவிந்தன் என்று எளிய பெயர் சூட்டி அழைத்தானாம், இந்திரன்.

பக்தர்களின் பாவங்களைப் போக்குவதில் முதலிடம் வகிப்பது கோவிந்த நாமாதான் என்பது தொன்றுதொட்டு இருந்துவரும் நம்பிக்கை. ஆலயங்களிலும் பஜனைகளிலும் ஹரி கீர்த்தனைகளிலும் கோவிந்த நாமாவுக்கே முக்கிய ஸ்தானம் தரப்படுகிறது.

வட இந்தியாவில் இறுதி யாத்திரைகளின் போது ராம் நாம் ஸத்ய ஹை என்று சொல்வது வழக்கம். வாராணசியில் மரிப்பவர்களின் காதுகளில் சிவபிரான் ராம நாமத்தை ஓதி அவர்களுக்கு முக்தி அளிக்கிறான் என்ற ஐதிகத்தின் அடிப்படையில் தோன்றிய வழக்கம் இது. தென் பாரதத்தில் இறுதி யாத்திரைகளில் கோவிந்த நாமாவுக்கே முதலிடம்.

‘கோ’க்களுக்கு ‘இந்திரன்’ கோவிந்தன். ‘விந்த’ என்றால் ஒன்றைத் தேடி, நாடிப்போய் அடைவது. பசுக்கள் இப்படி கிருஷ்ணரிடமே உயிராயிருந்து அவரைத் தேடி அடைந்ததால் ‘கோவிந்தன்’.

‘கோ’ என்பது பசுவை மட்டுமில்லாமல் பூமி, ஆகாசம், வாக்கு, இந்திரியங்கள் ஆகியவற்றையும் குறிப்பது. இவையெல்லாம் தேடிப்போய் அடையும் லட்சியமான பரமாத்மா அவனே என்பதையும் கோவிந்த நாமா தெரிவிக்கிறது.

பசு என்பது ஜீவாத்மாவையும் குறிக்கும். ஜீவர்களின் இறுதி லட்சியம் அவனே என்பதும் இந்த நாமாவுக்கு விளக்கம்.

***

நாடு புகழும் பரிசு –

ஆண்டாள் பரமாத்மனிடம் வரம் கேட்கிறாள். பரமன் அதை அனுக்கிரகிக்கிறான். பறையை (வரம், பரிசு) முன்னிட்டுத்தான் நோன்பு நோற்கிறோம் என்பதை முதல் பாசுரத்திலும், அடுத்தடுத்த வேறு பாசுரங்களிலும் அவள் சொல்கிறாள். எனினும், அவள் வேண்டும் பறை என்ன என்பதற்கான விளக்கம் ‘அன்று இவ்வுலகம்’ பாசுரத்தில் தொடங்கி, ‘சிற்றஞ்சிறுகாலே’ பாசுரத்தில் நிறைவடைகிறது.

உன்தன்னோடு உற்றோமே ஆவோம், உனக்கே நாம் ஆட்செய்வோம், மற்றை நம் காமங்கள் மாற்று என்பதுதான் அவள் கேட்கும் வரம். ஆனாலும், இந்த வரத்தை வெவ்வேறு பாசுரங்களில் வெவ்வேறு விதத்தில் கூறுகிறாள். அவற்றில் ‘நாடு புகழும் பரிசு’ என்பதும் ஒன்று. நாடு புகழும் என்றால் நாட்டு மக்கள் அனைவரும் புகழும் என்பதல்ல. நாட்டில் உள்ள மேலோர் பாராட்டும் செய்கை என்பதே அதன் உட்பொருள். பாரோர் புகழ, செய்யாதன செய்யோம், மேலையார் செய்வனகள் முதலிய பாசுர வரிகளிலும் இதே கருத்து தொனிக்கிறது. மேம்பட்ட மக்களின் வழிகாட்டுதல் மனித வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம் என்பது இதன் உட்பொருள்.

இறைவன் இருக்கிறானா என்பதே நமக்குத் தெரியாது. அப்படியே இருந்தாலும், அவனது வடிவம் என்ன, குணங்கள் என்ன என்பது நிச்சயமாக நமக்குத் தெரியாது. அவனை அடைவதுதான் வாழ்வின் இலக்கு என்பது சர்வ நிச்சயமாகத் தெரியாது. அதற்கான வழிமுறைகள் நமது கற்பனா சக்திக்கும் அப்பாற்பட்ட விஷயங்கள்.

ஆனாலும், இறைவன் இருக்கிறான் என்று நாம் நம்புகிறோம். அவன் கல்யாண குணங்கள் படைத்தவன் என்று நாம் நம்புகிறோம். அவனை அடைவதற்காகத்தான் மனிதப் பிறப்பு என்று நாம் நம்புகிறோம். ஆன்மிக சாதனைகள் அனைத்தும் அவனை அடைவதற்கான வழிமுறைகள் என்று நாம் நம்புகிறோம். சிந்தித்துப் பார்த்தால், நமக்கு நமது பெற்றோரும் சுற்றத்துப் பெரியவர்களும் சொல்லிக் கொடுத்த விஷயங்களே இந்த நம்பிக்கையின் அடித்தளம் என்பது புரியும். அவர்கள் நம் மீது மிகுந்த அன்பும் பரிவும் கொண்டவர்கள். எனவே, அவர்கள் சொல்வதை நாம் நம்புகிறோம்.

அவர்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்? அவர்களது அப்பா, அம்மா, உற்றார் உறவினர் என அவர்கள்மீது பரிவும் அன்பும் கொண்டவர்கள் சொல்லிக் கொடுத்த விஷயம் இதேதான். அவர்களுக்கு, அவர்களுக்கு என்று கேள்வி கேட்டுக் கொண்டே போனால், இது, இந்தியப் பண்பாட்டின் ஆணி வேர்களை ஏற்படுத்திய மகரிஷிகள் பட்டியலில் போய் முடியும்.

ரிஷிகள் சுயநலத்துக்கு அப்பாற்பட்டவர்கள். இந்திரியங்களுக்கு அப்பாற்பட்ட ஆற்றல் மூலம் இறுதிப் பேருண்மையை உணர்ந்தவர்கள். அவர்கள் என்ன சொன்னார்களோ, அதுதான் பரம சத்தியம். அதுவே வழிவழி பரம்பரையாக நம் காலம் வரை தொடர்ந்து வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இந்தப் பாரம்பரியம்தான் நமது நம்பிக்கைக்கான அஸ்திவாரம். இதன்படி வாழ்பவர்கள்தான் நமக்கு வழிகாட்ட முடியும். எனவே, அவர்கள் ஏற்கும்படியான விஷயங்களே நாம் செய்யத்தக்கவை. நாடு புகழும் பரிசு என்பதும் அதுதான்.

***

சூடகமே, தோள்வளையே, தோடே, செவிப்பூவே, பாடகமே –

யாரும் பிறப்பால் வைணவனாவதில்லை. ஸம்ஸ்காரத்தின் மூலமே ஒருவன் வைணவனாகிறான். ஸம்ஸ்காரம் என்பதன் பொருள் ‘பண்படுத்துவது’ அல்லது ‘மேன்மைப்படுத்துவது’.

ஸம்ஸ்காரங்கள் ஏராளமானவை. அவற்றில் ஒருவனை வைணவனாக்கும் ஸம்ஸ்காரத்துக்குப் பெயர் பஞ்ச ஸம்ஸ்காரம் என்பது. சமாசனம் (சமாச்ரயணம்) என்று இதைக் குறிப்பிடுவார்கள். இது ஐந்து பாகங்கள் கொண்ட சடங்கு. இதன் முக்கிய அம்சங்களைச் சுட்டிக் காட்டும் விதத்திலேயே ஆண்டாள் ஐந்து அணிகலன்களைக் குறிப்பிட்டுள்ளதாக உரையாசிரியர்கள் தெரிவிக்கிறார்கள்.

***

பால்சோறு மூட நெய் பெய்து –

சர்க்கரைப் பொங்கலை இவ்வளவு அழகாகக் குறிக்கிறாள் ஆண்டாள். சர்க்கரைப் பொங்கலை அக்கார அடிசில் என்பார்கள். ‘அக்கார’ என்பது இனிப்பைக் குறிக்கும். இதிலிருந்து பிறந்ததே சர்க்கரை என்னும் சொல். ‘அடு’ என்பது சமையலைக் குறிக்கும். இதிலிருந்துதான் அடுக்களை, அடுமனை முதலிய சொற்கள் ஏற்பட்டன. மிகுந்த அளவு தித்திப்புக் கொண்ட உணவுப் பொருளாகிய சர்க்கரைப் பொங்கலைத்தான் வைணவர்கள் அக்கார அடிசில் என்று அழைக்கிறார்கள்.

***

கூடியிருந்து குளிர்ந்து –

பரமனைப் பிரிந்தவனாக, ‘நான்’ என்ற ஏதோ ஒரு மனித வடிவாக இருப்பதே வெம்மை. அவனுடன் ஒன்றியவர்களே நாம் என்பதை அறிந்து, அவனாம் அவனுடனேயே கலப்பது குளிர்ச்சி.

கோபிகைகளுக்கோ இத்தகைய ஆன்ம தாகம் தேவைப்படவில்லை. அவன்மீது அவர்கள் மையல் மட்டுமே கொண்டார்கள். அவனைப் பிரிந்த போதெல்லாம் விரகத்தில் தவித்தார்கள். அவனுடன் கூடுவது என்பது விரக தாபம் தீர்வதால் ஏற்படும் குளிர்ச்சி.

***

கூடியிருந்து குளிர்ந்து –

விரத முடிவில் அடியார்களுக்கு விருந்து படைத்தல் பாரதத்தில் தொன்று தொட்டு நிலவி வரும் வழக்கம். வைஷ்ணவத்தில் இது ‘ததீயாராதனை’ என்று அழைக்கப்படுகிறது.

‘தத்’ என்றால் ‘அது’ என்று பொருள். இந்தியாவில் தத் என்ற சொல் வேதப்பொருளாக விளங்கும் பரமாத்மனையே குறிக்கும். ததீய (அதனுடைய) என்பது பரமாத்மனுடைய உடைமைகளை, அதாவது, அடியார்களைக் குறிக்கும். ததீய ஆராதனை என்றால், அடியார்களுக்குச் செய்யப்படும் வழிபாடு – குறிப்பாக, உணவு அளித்து உபசரிப்பது. வைணவத்தில் ததீயாராதனை மிகவும் வலியுறுத்தப்படும் விஷயம்.

ஆண்டாளுக்கு நோன்பு என்பது வெறும் வ்யாஜம் மட்டுமே என்பது மேலோர் சொல்லும் கருத்து. வ்யாஜம் என்றால் மேம்போக்கான காரணம் அல்லது வெறும் சாக்குப்போக்கு என்று பொருள். அவளது உண்மையான நோக்கம் பரமனைப் பாடுவதும் அவன் அடி சேர்வதும்தான். நோன்பைச் சாக்கிட்டு அவள் அவனைப் பாடுகிறாள். வைஷ்ணவத்தில் ததீயாராதனையும் அதுபோன்றதே. ஆண்டவனை விட அடியாருக்கு முக்கியத்துவம் தருவது வைணவத்தின் அடிப்படைப் பண்பு. அடியார் சேவை எந்தெந்த விதங்களில் செய்ய முடியுமோ அத்தனை வழிகளிலும் செய்ய வேண்டியது வைணவனின் அடிப்படைக் கடமை. இதுதான் ததீயாராதனை. ததீயாராதனைக்குக் காரணம் தேவையில்லை. ஏனெனில், அது அடிப்படைக் கடமை. அதனால், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் ததீயாராதனை செய்ய வேண்டும். கிடைக்காதபோது வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். விரத நிறைவு முதலானவை இதுபோல ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட வாய்ப்புகள் – அதாவது, ஆண்டாள், நோன்பைச் சாக்கிட்டுப் பரமன் அடி தொழுவது போல, விரத நிறைவைச் சாக்கிட்டு அடியார் சேவை செய்வது.

அடியார் குழாமுடன் கூடியிருப்பதே ஆன்ம தாகத்துக்குக் கிடைக்கும் குளிர்ச்சி.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version