திருப்பாவை பாசுரம் 6 – புள்ளும் சிலம்பினகாண்

திருப்பாவை – பாசுரம் 6
————————
புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்தங் கரிஎன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்:
ஐந்தாம் பாசுரத்தில் கண்ணனின் பெருமைகளைச் சொன்ன ஆண்டாள், இத்தகு பெருமை வாய்ந்தவனை நாம் காணச் செல்ல வேண்டாமோ என்று வினவி, அதிகாலைக் கண்ணுறக்கம் கொண்ட பெண் ஒருத்தியை இந்தப் பாசுரத்தில் துயில் எழுப்புகிறார்.
இரையைத் தேடுவதற்காக வெளியே வந்த பறவைகள் ஆரவாரம் செய்து நிற்கின்றன. அது உன் காதில் விழவில்லையோ? பறவைகளின் தலைவன் பெரியதிருவடி ஸ்ரீகருடாழ்வாரின் சுவாமியான பெருமாளின் சந்நிதியில் வெண் சங்கு ஒலிக்கின்றது. அனைவரையும் அழைக்கும் விதத்தில் அந்த வெண் சங்கு பேரொலி எழுப்புகின்றது. அதனை நீ கேட்கவில்லையோ?
எம்பெருமான் திருவடித் தொடர்பு குறித்த சுவை அறியாத பெண்ணே… விரைந்து எழு!
பூதனையின் முலையில் தடவிக் கிடந்த விஷத்தை, அவள் ஆவியுடன் சேர்த்து உண்டவன் கண்ணன். வஞ்சகம் கொண்டு வண்டியின் சகடச் சக்கரமாக வந்த அசுரன் மாயும்படி தன் திருவடி வித்தையைக் காட்டியவன் கண்ணன்.
திருப்பாற்கடலில் பாம்பாகிய திருஅனந்தாழ்வான் மீது கண்வளரும் வித்தகன் அவன். உலகத்தின் தோற்றத்துக்குக் காரணமானவனும் அவனே. அத்தகைய பெருமானை தமது உள்ளத்தில் இருத்தியபடி, யோகிகளும் முனிவர்களும் எப்போதும் தியானித்துக் கிடக்கிறார்கள். அவர்களின் உள்ளத்தே எம்பெருமானும் எழுந்தருள்கிறான். அவர்களும் மெள்ள எழுந்து, ஹரி ஹரி என்ற ஒலியாலே பேரரவம் எழுப்புகின்றனர். இந்த ஒலியானது உள்ளத்தில் புகுந்து குளிரச் செய்கின்றது. பெண்ணே… நீ இது கேட்டும் எழுந்திருக்காது இருக்கலாமோ? எழுந்திரு என்று ஒரு பெண்ணை துயில் எழுப்புகிறார் ஸ்ரீஆண்டாள்.
– விளக்கவுரை: ஸ்ரீ.ஸ்ரீ.