திருப்பாவை பாசுரம் 7 (கீசு கீசு என்று)

திருப்பாவை – பாசுரம் 7

கீசுகீசு என்றுஎங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.

விளக்கம்:
ஆறாம் பாசுரத்தில் இயற்கையின் விழிப்பைச் சொல்லி, கண்ணுறக்கம் கலைந்து எழுமாறு தோழியைத் துயில் எழுப்பிய ஆண்டாள், அவள் எழுந்திருக்காதது கண்டு மேலும் சில நிமித்தங்களைச் சொல்லி துயில் கலைந்து எழுமாறு வேண்டுகிறார் இந்த ஏழாம் பாசுரத்தில்.
பரத்வாஜ பறவைகள் ஒன்றோடு ஒன்று பேசியும் குலவியும் கீச்சு கீச்சு என்று எங்கும் ஆரவாரம் செய்கின்றன. இந்த ஆரவாரத்தை இன்னும் நீ கேட்கவில்லையோ.. ஏ மதியற்ற பெண்ணே.
நறுமணம் கமழும் பரிமளப் பொருள்களினால் அணிசெய்த கூந்தலை உடையவர்கள் இந்த இடைப் பெண்கள். அவர்களின் கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் ஒன்றோடு ஒன்று உரசி கலகலவென்று ஒலி எழுப்புகின்றன. அவர்கள் தங்கள் கைகளில் மத்தினை எடுத்து, அசைத்து அசைத்து தயிர் கடைகிறார்கள். அவ்வாறு கடையப்படும் தயிரின் ஒலியை நீ கேட்கவில்லையோ? பெண்களுக்குத் தலைவியாக, நாயகமாக விளங்குபவளே… ஸ்ரீமந் நாராயணனை, அந்தக் கண்ணபிரானை, கேசவனை, நாங்கள் போற்றிப் பாடி நிற்கின்றோம். அந்தப் பாடல்களைக் கேட்டும் நீ உறங்கிக் கிடப்பாயோ? மிகுந்த ஒளி பொருந்தியவளே. நீயே எழுந்து வந்து கதவைத் திற என்று தோழியைத் துயில் எழுப்புகிறார் ஸ்ரீஆண்டாள்.
விளக்கவுரை: ஸ்ரீ.ஸ்ரீ.