கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றம்ஒன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே
புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வபெண் டாட்டிநீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
பத்தாவது பாசுரத்தில், ராமபிரானால் தோற்ற கும்பகர்ணன் தன் உறக்கத்தை உனக்குக் கொடுத்துவிட்டுச் சென்றானோ என்று, எவ்வளவு எழுப்பியும் துயில் கலையாத தோழியைப் பார்த்துக் கேட்ட ஆண்டாள், பதினோராவது பாசுரத்தில் கண்ணன் திருநாமங்களை உரக்கப் பாடுகிறோம்; அது காதில் கேட்டும் சலிக்காமல் உறக்கத்தில் கிடக்கிறாயே? என்று வினவுகிறார்.
கன்றுகளோடு கூடிய பசுக்களின் கணங்களைக் கொண்டிருப்பவர்கள் இந்த கோபாலர்கள். அவர்கள் பசுக்களின் பாலைக் கறப்பவர்கள், எதிரிகளின் செருக்கும் வலிமையும் அழியும்படி படையெடுத்துச் சென்று போர் புரிபவர்கள்.
குற்றம் எதுவும் இல்லாத நற்குடியில் பிறந்தவர்கள். அத்தகைய கோபாலர்களின் குடியில் பிறந்த பொன்கொடி போன்றவளே.! புற்றில் இருந்து எழுந்தாடும் பாம்பின் படம் போன்ற அல்குலையும், காட்டில் தன் இச்சைப்படி திரியும் மயிலைப் போன்ற சாயலும் கொண்டவளே. செல்வ வளம் மிக்க பெண் பிள்ளையே. நீ எழுந்து வருவாயாக. நம் சுற்றத்தினைச் சேர்ந்தவர்களும் தோழிகளும் ஆகிய அனைவரும் திரண்டு வந்து நிற்கின்றோம்.
உனது திருமாளிகையின் முற்றத்தே புகுந்து காத்திருக்கின்றோம். கார்மேக வண்ணன் கண்ணனின் திருநாமங்களை உரக்கப் பாடியும், அது உன்காதில் விழுந்தபோதும் அதுகேட்டும் கேட்காததுபோல் இருக்கிறாயே. இவ்வாறு நாங்கள் பாடுவதைக் கேட்டும், நீ சலிக்காமலும் ஒன்றும் பேசாமலும் உறங்கியபடி கிடப்பதால் என்ன பலன் ஏற்படப்போகிறது என்பது எங்களுக்குத் தெரியவில்லை!
என்று கூறி செல்வ வளம் மிகு நங்கையைத் துயில் எழுப்புகிறார் ஸ்ரீஆண்டாள்.
விளக்கம்: செங்கோட்டை ஸ்ரீராம்